சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் வி.கே. சசிகலா!

February 15, 2017 6 views Posted By : JebaAuthors
Image

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. 
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை உடனடியாக சரணடையுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து, சசிகலா, இளவரசி ஆகியோர் இன்று மதியம் சென்னையில் இருந்து காரில் பெங்களுரு புறப்பட்டு சென்றனர். 

மாலை 5.15 மணியளவில் சசிகலா, இளவரசி, பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் நீதிபதி அஷ்வத் நாராயணா முன்னிலையில் சரணடைந்தனர்.  அப்போது, நீரிழிவு நோய் உள்ளதால் வீட்டு உணவு வேண்டுமென்று நீதிபதியிடம் சசிகலா கோரிக்கை விடுத்தார்.  

ஆனால், அதனை நீதிபதி அஷ்வந்த் நாராயணா நிராகரித்தார். மருத்துவ  பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளுக்குப்பின், சசிகலா, இளவரசி இருவரும் சிறையில்  அடைக்கப்பட்டனர். 

இதனிடையே, உடல்நிலையை காரணம் காட்டி, நாளை சரணடைவதாக சுதாகரன் விடுத்த கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டதால், அவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதனைத்தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

Categories: Tamilnadu
Image

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதி வாதங்கள் நிறைவு

June 02, 2016 0 views Posted By : JebaAuthors
Image

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 பேர் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு தொடுத்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ், நீதிபதி அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. 

கடந்த மாதம் 12-ம் தேதியன்று விசாரணை முடிந்த நிலையில், வழக்கின் இறுதி வாதம் நேற்று மீண்டும் நடைபெற்றது. 

அப்போது, கர்நாடகா அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, 'ஜெயலலிதா உட்பட நான்கு பேரை விடுதலை செய்து, கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். 

பின்னர் மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, தான் சட்டத்தின் அடிப்படையில் சில வாதங்களை முன்வைக்க வேண்டியிருந்த நிலையில், அவர் தன்னுடைய வாதங்களை எழுத்து வடிவில் தாக்கல் செய்தார். 

அத்துடன் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்தன. 

Categories: India
Image

சொத்து குவிப்பு வழக்கு: ஆதாரங்களுடன் நியாயத்தை முன்வைத்தும் கீழ் நீதிமன்றம் ஏற்கவில்லை

April 07, 2016 0 views Posted By : JebaAuthors

சொத்துக் குவிப்பு வழக்கில், தகுந்த ஆதாரங்களுடன் நியாயத்தை முன்வைத்த போதும் கீழ்நீதிமன்றம் ஏற்காதது ஏன்? என புரியவில்லை என ஜெயலலிதா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

கீழ்நீதிமன்ற நீதிபதியின் இந்த செயல் விநோதமானது என்றும் ஜெயலலிதா தரப்பு முறையிட்டுள்ளது. 
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை,  கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை,  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. 

வழக்கு விசாரணையின் போது, கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர்கள்  துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். தொடர்ந்து, ஜெயலலிதா தரப்பு வாதம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் ஜெயலலிதா தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

Categories: Tamilnadu
Image

சொத்து மதிப்புகள் திமுக அரசால் வேண்டுமென்றே உயர்த்தப்பட்டன: ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்

April 05, 2016 0 views Posted By : JebaAuthors
Image

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை சிக்க வைக்க வேண்டுமென்றே அவரது சொத்து மதிப்புகளை,  அப்போதைய திமுக அரசு உயர்த்தி காட்டியிருப்பதாக,  உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், 2 வது நாளாக இன்று, ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் தனது வாதங்களை முன்வைத்தார். அப்போது ஜெயா பப்ளிக்கேஷன்ஸ் தவிர, மற்ற அனைத்து சொத்துகளுக்குமான வருமான வரியை, இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே, செலுத்திவிட்டதாக குறிப்பிட்டார். 

எனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகே, வருமான வரியை செலுத்தியதாக அரசு தரப்பு கூறுவது உண்மையல்ல என்றும் அவர் வாதிட்டார். மேலும் வருமான வரித்துறையின் சாட்சியத்தையும் ஏற்க வேண்டும் என்பதையும் மீறி, வருமான வரி செலுத்தியதை, கீழ் நீதிமன்றம் ஆதாரமாக ஏற்கவில்லை என்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். 

வருமான வரித்துறையின் ஆதாரத்தை ஏற்றிருந்ததால், முறைகேடாக சொத்து சேர்க்கவில்லை என்பது தெளிவாகியிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். நிபுணர்களின் அறிக்கை மீது எந்த விசாரணையும் நடத்தாமல் கீழ் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால், கர்நாடக உயர்நீதிமன்ற தனி நீதிபதி அதனை விரிவாக ஆராய்ந்து பயன்படுத்தியதாகவும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் தெரிவித்தார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை சிக்க வைக்க, அவரது சொத்து மதிப்புகளை அதிகரித்து காட்ட, ஏராளமான முறைகேடான விஷயங்களை, அப்போதை திமுக அரசு மேற்கொண்டதாகவும் நாகேஸ்வர ராவ் வாதிட்டார். 

குறிப்பாக, ஜெயலலிதா கட்டிடங்களில் பயன்படுத்திய மார்பிள் கற்களின் மதிப்பை உயர்த்தி காட்ட, மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து கையெழுத்து இடப்படாத கடித்தில், மார்பில் கற்களின் மதிப்பை உயர்த்தி காட்டி, அதனை பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

ஏராளமான குளறுபடிகளை நாளை ஆதாரங்களோடு விளக்குவதாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் வாதிட்டார். இதனையடுத்து வழக்கின் விசாரணை 
நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Categories: Tamilnadu
Image

சொத்து குவிப்பு மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நடத்த கூடாது என வழக்கு

March 28, 2016 0 views Posted By : suryaAuthors
Image

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு விசாரணையை உச்ச நீதிமன்றம் நடத்தக் கூடாது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ராய் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் பரமாந்த கட்டாரியா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த, சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது தவறு எனக் குறிப்பிட்டுள்ளார். 

வழக்கமாக, 7 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றிருந்தால் மட்டுமே மேல் நீதிமன்றத்தில் முறையிட முடியும் என்றும், அப்படி இல்லாத பட்சத்தில், சிறப்பு நீதிமன்றத்தில்தான், தீர்ப்பை திருத்தக் கோரி ஜெயலலிதா தரப்பு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் கட்டாரியா தனது மனுவில் கூறியுள்ளார். 

எனவே, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை முறையானது அல்ல என்றும், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மனுவை, விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஷ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, மேல்முறையீடு தொடர்பான மூல வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவா ராய் தலைமையிலான அமர்வே, இந்த மனுவை விசாரிக்கும் என அறிவித்தனர்.

Categories: India
Image

ஜெயலலிதாவின் வங்கிக்கடன் ஆவணங்கள் எங்கே ? கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

March 15, 2016 0 views Posted By : JebaAuthors
Image

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், ஜெயலலிதா பெற்ற வங்கி கடன் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமித்தவராய் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, 1991- 1996ம் ஆண்டு வரை முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, 66 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா குறிப்பிட்டார்.

அரசு தரப்பு வழக்கறிஞரான பவானி சிங் நீக்கத்திற்கு எதிராக குற்றவாளிகளே உச்சநீதிமன்றத்தில் மனு தொடுத்தன் மூலம், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பவானி சிங் செயல்பட்டது தெரியவருவதாகவும் வாதிட்டார்.  

ஜெயலலிதா தரப்பினர் இழுத்தடித்தால் வழக்கு 18 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்ததாக கூறிய கர்நாடக அரசு வழக்கறிஞர்,  அரசு தரப்பு தாக்கல் செய்த 50 பக்க எழுத்துப்பூர்வ வாதங்களை உயர்நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

அதை கணக்கில் எடுத்திருந்தால் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் கணிதப்பிழையே வந்திருக்காது என்றும், ஜெயலலிதா தரப்பினரின் வங்கிக்கடன்களை வருமானமாக உயர்நீதிமன்றம் கருதியதை ஏற்றுக்கொள்ள கூடாது எனவும் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தனது வாதங்களை முன்வைத்தார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜெயலலிதா வங்கிகளிடம் இருந்து பெற்ற கடன் தொகைக்கான ஆவணங்கள் எங்கே என்று வினவினர்.  வெறும் சாட்சியங்களின் வாக்குமூலங்களை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வது என கேள்வி எழுப்பிய அவர்கள், வங்கிகளின் ஆவணங்கள் இன்றி, இதனை எவ்வாறு கீழ் நீதிபதி குன்ஹா கணக்கில் எடுத்துக்கொண்டார் என்றும் கேட்டனர்.  

எந்த தேதியில் எவ்வளவு தொகையினை ஜெயலலிதா கடனாக பெற்றார் யார் அனுமதி வழங்கியது என்பன உள்ளிட்ட விவரங்கள்அடங்கிய பட்டியலை தயாரித்து, நாளை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  

அப்போதுதான் வழக்கினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முடியும் என்றும், இல்லையெனில் சிரமம் ஏற்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Categories: India
Image

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ராஜ கண்ணப்பன் விடுதலை

July 24, 2015 4 views Posted By : yuvarajAuthors
Image

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து  அதிமுக முன்னாள் அமைச்சர்  ராஜ கண்ணப்பன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  

கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, சொத்துக்களை வாங்கி குவித்ததாக, ராஜ கண்ணப்பன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கண்ணப்பனின் மனைவி நளாயினி, தாயார் ராஜலட்சுமி உட்பட  20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசாரணை சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நளாயினி, ராஜலட்சுமி ஆகியோர் இறந்து விட்ட நிலையில், கண்ணப்பன்  உள்ளிட்ட 18 பேரை விடுவித்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோபால் தீர்ப்பளித்தார்.

Categories: Tamilnadu
Image

ஜெயலலிதா வழக்கு: 11ஆம் தேதி தீர்ப்பு வெளியாக வாய்ப்பு

May 08, 2015 1 view Posted By : yuvarajAuthors

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு, வரும் 11 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு முன்பு கடந்த ஜனவரி 5ம் தேதி தொடங்கியது. 45 நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, கடந்த மார்ச் 11ம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார். 

இந்நிலையில், மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு, வரும் 11 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories: Tamilnadu
Image

பவானிசிங்கை நீக்கக் கோரும் வழக்கு 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு

February 27, 2015 0 views Posted By : yuvarajAuthors
Image

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றக் கோரும் அன்பழகனின் மனு மீதான விசாரணை, வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசு வழக்குரைஞர் பவானி சிங் நடுநிலையாக செயல்படவில்லை என்றும், எனவே அவரை நீக்க கோரியும், திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், தன்னையும் ஒரு தரப்பாக அனுமதிக்க வேண்டும் என்றும், அந்த மனுவில் அன்பழகன் கோரியுள்ளார். அதுவரை, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இம்மனு இன்று, யூ.யூ.லலித், மதன் பி.லோகூர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால்,அன்பழகனின் மனு, டி.எஸ்.தாக்கூர், ஏ.கே.கோயல் அமர்வுக்கு மாற்றப்பட்டது. மனுவை பிற்பகலில் விசாரித்த நீதிபதிகள்,  வழக்கின் அடுத்த கட்ட விசாரணை, வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Categories: India
Image
Subscribe to சொத்து குவிப்பு வழக்கு