சிரியாவில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பேரணி!

March 02, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

சிரியாவில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

சிரியாவில் கடந்த சில நாட்களாக அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடும் சண்டை மூண்டுள்ள நிலையில், அப்பாவி குழந்தைகளும், பொதுமக்களும் பெருமளவில் கொல்லப்பட்டு வருகின்றனர். 

அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அமைதி பேரணி நடைபெற்றது. செய்யாறு சபர்மதி குருகுலம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில், 100 க்கும் மேற்பட்ட மாணவர்களும். குருகுல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

செய்யாறு மார்க்கெட், பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் வழியாகச் சென்ற அமைதிப் பேரணி, ஆரணி கூட்டுச்சாலை அருகே முடிவடைந்தது. அங்கே சிரியாவில் கொல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்காக மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Categories: Tamilnadu
Image

​சிரியா ரசாயனத் தாக்குதல் குறித்து விசாரணைக் குழு அமைக்க ஐ.நா. ஒப்புதல்

August 08, 2015 0 views Posted By : arunAuthors
Image

சிரியாவில் ஆயிரக்கணக்கானோரைப் பலி கொண்ட ரசாயனத் தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்க ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

சிரியா அதிபர் பஷார் அல் அஸாத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் மீது ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. 

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ரசாயன ஆயுதங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 

அதிபர் அஸாத்தின் உத்தரவின் பேரிலேயே, அந்நாட்டு ராணுவத்தினர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரம் பொருந்திய குழுவை அமைக்க வேண்டும் என அமெரிக்கா சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

இதற்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்தனர். இதன் பேரில், சிரியா ரசாயனத் தாக்குதல் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்க ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Categories: World
Image

​ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா கூடுதல் படை அனுப்பியது

August 10, 2015 0 views Posted By : arunAuthors
Image

ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான சண்டைக்காக கூடுதலாக 6 போர் விமானங்களையும் 300 வீரர்களையும், துருக்கி நாட்டிற்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.  

சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க கூட்டுப் படையினர் கடந்த சில மாதங்களாக தீவிரச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். 

அந்த கூட்டுப்படையினரின் போர் விமானங்கள் வந்திறங்குவதற்காக துருக்கி தனது Incirlik விமானத் தளத்தை அனுமதித்துள்ளது. 

இந்நிலையில் அமெரிக்கா இத்தாலியில் உள்ள தனது அவியானோ விமானத் தளத்திலிருந்து 6 எஃப் 16 ரக அதி நவீன போர் விமானங்களை துருக்கிக்கு அனுப்பி வைத்துள்ளது. 

மேலும் கூடுதலாக 300 ராணுவ வீரர்களையும் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் சண்டையிடுவதற்காக அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. 

Categories: World
Image

பாம்ரா நகரத்தை சிரிய கூட்டு படைகள் விரைவில் கைப்பற்றும்

July 24, 2015 0 views Posted By : suryaAuthors
Image

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுபாட்டில் உள்ள பாம்ரா நகரத்தை சிரிய கூட்டு படைகள் விரைவில் கைப்பற்றும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

சிரியாவில் சுமார் 3000 ஆண்டு பழமை வாய்ந்த பாம்ரா நகரத்தை ஐஎஸ் அமைப்பினர் கடந்த மே மாதம் கைப்பற்றினர். அந்த நகரத்தில் இருந்த பல அரிய வகை கலைப்பொருட்களையும் அவர்கள் அழித்தனர். இந்த நிலையில் பாம்ரா நகரத்தை மீண்டும் கைப்பற்ற சிரிய கூட்டு படைகள் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளன. விரைவில் அந்நகரை கைப்பற்றுவோம் என கூட்டு படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பாம்ரா நகரின் 3 கிலோ மீட்டர் சுற்றளவை நெருங்கி விட்டதாக கூட்டுப் படையினர் தெரிவித்துள்ளனர். நகரை கைப்பற்றும் முயற்சியில் பல தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு விட்டதாகவும், விரைவில் பாம்ரா நகர் சிரியாவின் கட்டுபாட்டிற்குள் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்ரா நகரம் மிக முக்கியமான நகரம் என்பதால் அந்நகரை கைப்பற்ற துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் கூட்டுபடையினர் தெரிவித்துள்ளனர் 

சிரிய கூட்டு படையினரின் தாக்குதல் தற்போது தீவிரமடைந்து வருவதாக அந்நாட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பாம்ராவை தொடர்ந்து பல்வேறு முக்கிய நகரங்கள் ஐஎஸ் கட்டுபாட்டிலிருந்து மீட்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories: World
Image

ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஐ.எஸ் தீவிரவாதிகள்

July 21, 2015 0 views Posted By : arunAuthors

குர்திஸ் இன போராளி குழுக்கள் மற்றும் பொதுமக்கள் மீது, ஐ.எஸ் தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக சிரியா மற்றும் ஈராக் நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இந்நிலையில், தங்கள் எதிரிகள் மீதான தாக்குதலின்போது, குளோரின் உள்பட மிகவும் கொடிய விஷ வாயுக்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்துவதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆய்வு நடத்திய அமைப்புகள், ஆபத்தான ரசாயனம் நிரப்பட்ட ஏவுகணைகளை, குர்திஸ் படைகள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் வீசியதாக தெரிவித்துள்ளன. வடசிரியாவின் ஹசாகக் மாகாணத்தில் 2 இடங்களில் இந்த ரசாயன தாக்குதல்கள் நடந்து உள்ளன என்றும், ஈராக்கின் மொசூல் அணைப்பகுதியில் குர்திஸ் படைகள் மீது வீசப்பட்டுள்ளதாகவும் ஆய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலில் பல குர்தீஷ் படை வீரர்கள் நினைவு இழந்ததோடு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories: World
Image

சிரியாவில் அரசுப் படைகள் தாக்குதலால் பொதுமக்கள் பாதிப்பு

July 20, 2015 0 views Posted By : suryaAuthors

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் டெரா அருகே அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 

சிரிய ராணுவத்தின் வான்படைகள் நடத்திய தாக்குதல் குறித்து ஷைத் மீடியா ஃபவுண்டேசன் என்ற அமைப்பு வெளியிட்ட இரண்டு வீடியோ காட்சிகளில், பேரல் குண்டு தாக்குதல்களும், அதனால் எழும் புகை மண்டலமும் படமாக்கப்பட்டுள்ளன. 

அதே போல் ஆரஞ்சு நிற சீருடை அணிந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களையும், உயிரிழந்தவர்களையும் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. 

அந்த காட்சிகளுடன் வெளியிடப்பட்ட தகவலில், அல் ஹர்ரா என்ற நகரத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காட்சிகள் அனைத்தும் நேற்று படமாக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: World
Image

சிரியாவில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியீடு

July 16, 2015 1 view Posted By : suryaAuthors
Image

சிரியாவின் அலெப்போ நகருக்கு அருகே அரசுப் படைகள் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. கடற்கரை நகரமான லடாகியாவில் தொடரும் தாக்குதல் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

சிரியாவில் அந்நாட்டு அதிபர் பாஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடந்துவரும் நிலையில், ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அந்நாட்டை நிலைகுலையச் செய்துள்ளன. 

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்க தலைமையிலான கூட்டு ராணுவப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலுக்கு பயந்து சிரியாவில் இருந்து நாள்தோறும பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள்  அண்டை நாடுகளான துருக்கி, லெபனான் உள்ளிட்ட நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் அகதிகளாகச் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் அந்நாட்டின் அலெப்போ நகருக்கு அருகே அரசுப் படைகள் நடத்திய தாக்குதல்கள், கடற்கரை நகரமான லடாகியாவில் நடத்தப்படும் தாக்குதல் குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. 

தாக்குதலுக்கு உரிய போர்க்கருவிகளை பொருத்தும் காட்சிகளும், பிறகு அவற்றிலிருந்து மோட்டார் ரக குண்டுகள் பாய்ந்து செல்லும் காட்சிகளும், சாலையில் செல்லும் வாகனம் குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. 

சிரிய அரசு நடத்திய இத்தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டதாக, வீடியோ காட்சிகளை வெளியிட்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories: World
Image

சிரியா அரசு தாக்குதலில் பொது மக்கள் பலி

December 18, 2014 0 views Posted By : suryaAuthors

ஹோம்ஸ் மற்றும் இட்லிப் நகரங்களில் சிரியா நடத்திய தாக்குதல்களில் 25 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர்.

சிரியாவின் முக்கிய நகரங்களான ஹோம்ஸ், இட்லிப் போன்ற இடங்களில் தீவிரவாதிகள்  தாக்குதல்கள் நடத்தியதன் வாயிலாக பெரும்பாலான இடங்கள் தீவிரவாதிகளின் பிடியில் சென்று விட்டன. இதையடுத்து சிரிய அரசுப் படைகள் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல்களில் பொது மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 பேர் உயிரிழந்ததாகவும் மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது . இத்தாக்குதல்களில் சிரிய வீரர்கள் 100 பேரும், தீவிரவாதிகள் தரப்பில் 80 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். பொதுமக்கள் உயிரிழந்ததை அடுத்து மனித உரிமை அமைப்பு சிரிய அரசு மீது புகார் எழுப்பியுள்ளது.

Categories: World
Image

ஐநா அறிக்கை: சிரியாவில் தாக்குதல்களில் இதுவரை 2 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்

November 15, 2014 0 views Posted By : suryaAuthors
Image

ஐநா வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, சிரியாவில்  இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 10 மில்லியன் மக்கள் காயமடைந்துள்ளனர். 

அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக நடந்த தாக்குதல்களில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சிரியாவின் பெரும் பகுதிகளை ஐஎஸ் அமைப்பினர் கைப்பற்றிய நிலையில், கோபானி நகரில் சிரிய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. கனரக இயந்திரத் துப்பாக்கிகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், சிரிய ராணுவ படைகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. இந்த தாக்குதலின் மூலம் அங்கு அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனிடையே சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் தொடர்பான வீடியோவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 

Categories: World
Image

சிரியாவில் அரசுப் படைகள் நடத்திய விமானத் தாக்குதல்

November 06, 2014 0 views Posted By : suryaAuthors
Image

சிரியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் பலம் பெற்றிருக்கும் தீவிரவாதிகளுக்கு எதிராக அரசுப் படைகள் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் வேளையில், அப்பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

சிரியாவின் மிகப்பெரிய நகரமான அலெப்போவில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில் அரசுப் படைகள் விமானத் தாக்குதல் நடத்தியதன் வீடியோ காட்சிகள் நேற்று வெளியிடப்பட்டன. சிரியாவின் மற்ற பகுதிகளிலும் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், இத்தாக்குதல்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த துருக்கி பிரதமர் அஹமது, சிரிய அரசு மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்துவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், சிரிய அதிபர் பாஷர் அல் அசாத் தொடர்ந்து பதவியில் நீடிப்பது நாட்டிற்கு எந்தவிதத்திலும் பயன் அளிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Categories: World
Image
Subscribe to Syria