மத்திய அமைச்சர் கட்காரி தமிழகத்தில் ஆய்வு

November 04, 2014 0 views Posted By : editor5Authors
Image

சேது சமுத்திரம் திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்றுவது குறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்காரி இன்று விமானம் மூலம் ஆய்வு மேற்கொள்கிறார்.  இரண்டுநாள்  பயணமாக தமிழ்நாடு வந்துள்ள  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி நேற்று சென்னை எண்ணூர் துறைமுகத்தை ஆய்வு செய்து துறைமுக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதின்கட்காரி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உள்ள துறைமுகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். தமிழக மீனவர்களை தூக்கு கயிற்றிலிருந்து காப்பாற்ற இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கட்காரி தெரிவித்தார்.
பின்னர் மெட்ராஸ் தொழில்வர்த்தக சபை கூட்டத்தில் கலந்து கொண்ட நிதின்கட்காரி,   அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சாலை திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்ற உள்ளதாகக் கூறினார். தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகளை மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த கூட்டத்தை முடித்துக்கொண்ட பின் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு கட்காரி சென்றார். பாமக கூட்டணியில் பாஜக நீடிக்குமா  என்ற சலசலப்பு எழுந்துள்ள நிலையில் நடந்த இந்த சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் ஏதும் இருக்கிறதா என  கட்காரியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அதனை மறுத்தார்.தனது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று சேதுசமுத்திரத் திட்டத்தை மாற்றுபாதையில் நிறைவேற்றுவது குறித்து  கட்காரி ஆய்வு செய்கிறார். சேது சமுத்திரத்திட்டம் செயல்படுத்தப்படும் பாக் ஜலசந்தியில் கடற்படைக்கு சொந்தமான விமானத்தில் பறந்தபடி கட்காரி தனது ஆய்வு பணியை மேற்கொள்கிறார். 

Categories: India
Image
Subscribe to கட்கரி