மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட மருத்துவர்!

February 10, 2018 5 views Posted By : krishnaAuthors
Image

மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் மோசடியில் ஈடுபட்ட பிசியோதெரபி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறி, சென்னையை சேர்ந்த நெல்சன் என்பவர் பிசியோதெரபி மருத்துவர் ராஜேஷிடம் 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

எனினும், மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தராமலும், பெற்ற பணத்தை திருப்பி அளிக்காமலும் மருத்துவர் ராஜேஷ் அலைக்கழித்ததாக தெரிகிறது. இது குறித்து நெல்சன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் ராஜேஷை போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே, எழும்பூரைச் சேர்ந்த அனிதா என்பவரிடமும் இதே போல் ஏமாற்றி பணம் பறித்ததாக மருத்துவர் ராஜேஷ் கைது செய்யப்பட்டிருந்தார். ராஜேஷ் மீது தமிழகம் முழுவதும் மோசடி வழக்கு உள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப் பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Categories: Tamilnadu
Image

வங்கி அதிகாரி போல பேசி மூதாட்டியிடம் மோசடி செய்த உத்தரகாண்ட் மோசடி கும்பல்!

January 23, 2018 2 views Posted By : krishnaAuthors
Image

சென்னையில் வங்கி அதிகாரி போல் தொலைபேசியில் பேசி மூதாட்டியிடம் 90 ஆயிரம் ரூபாய் பணத்தை உத்தரகாண்டைச் சேர்ந்த கும்பல் மோசடி செய்துள்ளது. பணத்தை இழந்த அதிர்ச்சியில் அந்த மூதாட்டி மரணம் அடைந்தார். 

சென்னை அண்ணாநகரில் நான்காவது தெருவில் வசிக்கும் ஜெயலட்சுமி என்கிற 71 வயது மூதாட்டியை கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர் தன்னை வங்கி அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார். புதிய ஏடிஎம் அட்டை தருவதாகக் கூறி 16 இலக்க எண்ணை கேட்டுள்ளார். அதனை நம்பிய ஜெயலட்சுமி 16 இலக்க எண்ணையும், ஓடிபி ரகசிய குறியீட்டையும் கூறியுள்ளார்.

இதனை பயன்படுத்தி அந்த பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து 90 ஆயிரம் ரூபாயை அந்த மர்ம நபர் எடுத்ததாகக் கூறப்படுகிறது.  தான் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும்  ஜெயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.  அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

இது குறித்து ஜெயலட்சுமி கணவர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் விசாரணையில் மர்ம நபர்கள் உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து ஜெயலட்சுமிக்கு போன் செய்து அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தது தெரியவந்துள்ளது. 

Categories: Tamilnadu
Image

சென்னையில் கூட்டுறவு வங்கி செயலாளர் தற்கொலை!

January 16, 2018 4 views Posted By : elangoAuthors
Image

சென்னையில் நிலத் தரகர்கள் ஏமாற்றியதால் கூட்டுறவு வங்கி செயலாளர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனவரத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் சேலையூரில் உள்ள கூட்டுறவு வங்கி செயலாளராக இருந்துள்ளார். இவரிடம் சேலையூரைச் சேர்ந்த நிலத்தரகர்களான சரவணன் மற்றும் கணேசன் சின்ன காஞ்சிபுரத்தில் இடம் வாங்கி தருவதாக ரூ.52 லட்சம் வாங்கியுள்ளனர்.

பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும் நிலம் வாங்கிகொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் சந்திரசேகரன் மன உளச்சலில் ஆளாகி நேற்று இரவு அயனவரத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

தற்கொலை செய்வதற்கு முன் சரவணன் மற்றும் கணேசன் நிலம் வாங்கி தருவதாக ரூ.52 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த அயனாவரம் போலீசார் சந்திரசேகரனின் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசுமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

சந்திரசேகரனின் மனைவி மீனா கொடுத்த புகாரில் அடிப்படையில் அயனவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories: Tamilnadu
Image

மோசடி கும்பலிடமிருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!

January 14, 2018 3 views Posted By : krishnaAuthors
Image

திருச்சி மாவட்டம் துறையூரில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு புதிய நோட்டுக்களை மாற்றித் தருவதாக மோசடி செய்த கும்பலிடம் இருந்து 1 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். 

திருச்சி மாவட்டம் துறையூருக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த விஜயன், விஜயராஜ், சின்னதம்பி வேலுச்சாமி ஆகியோரிடம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தருவதாக ஒரு கும்பல் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மூவரும் 1 கோடி ரூபாய் பழைய நோட்டுக்களுடன் இவர்களை சந்திக்க காரில் வந்துள்ளனர். அப்போது இந்த கும்பலிடம் ஏற்கனவே இது போன்று பணத்தை கொடுத்த ஏமாந்தவர்கள் கும்பலை பிடிக்க முயன்றுள்ளனர். அவர்கள் தப்பிச் செல்லவே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனையடுத்து அவர்களை உப்பிலியபுரம் போலீசார் கொப்பம்பட்டியில் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Categories: Tamilnadu
Image

விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த டெல்லி நீதிமன்றம்!

January 05, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார்.

மல்லையா மீது இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில், வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து நிறுவனத்துக்கு சுமார் 1 கோடியே 30 லட்சம் ரூபாயை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்தது தொடர்பாக அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.

அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், விசாரணைக்காக ஆஜராகுமாறு மல்லையாவுக்கு பலமுறை சம்மன் அனுப்பியது.

எனினும் அவர் ஆஜராகாத நிலையில், மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories: India
Image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன் ஜாமின் கேட்டு மனு!

December 13, 2017 19 views Posted By : krishnaAuthors
Image

போக்குவரத்து துறையில், வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அவர் 40 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அருள்மொழி என்பவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Categories: Tamilnadu
Image

மோசடி செய்துவிட்டு தலைமறைவான நிதிநிறுவன உரிமையாளர் நீதிமன்றத்தில் சரண்!

November 16, 2017 4 views Posted By : krishnaAuthors
Image

கன்னியாகுமரியில், நிதிநிறுவனம் நடத்தி 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில், தலைமறைவாக இருந்த நிதி நிறுவன உரிமையாளர் நிர்மலன் மதுரை முதலீட்டாளர் நல சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தமிழக- கேரள எல்லை பகுதியான மத்தம்பாலை பகுதியில் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் நிர்மலன் என்பவர் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இவர், இரண்டு மாநிலங்களை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் இரண்டாயிரம் கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இவரது பினாமிகள் என்று அழைக்கப்படும் ஐந்து பேரை ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட பொருளாதார குற்றபிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த சில மாதங்களாக நிதி நிறுவன உரிமையாளர் நிர்மலன் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், மதுரை முதலீட்டாளர் நல சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நிர்மலன் சரணடைந்தார். 

Categories: Tamilnadu
Image

நிதி நிறுவனம் நடத்தி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி!

September 17, 2017 5 views Posted By : krishnaAuthors
Image

கன்னியாகுமரி அருகே நிதி நிறுவனம் நடத்தி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மத்தம்பாலை பகுதியில் நிர்மலன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருப்போர் பலர் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துவிட்டு நிறுவன உரிமையாளர் நிர்மலன், தலைமறைவானதாக தகவல் பரவியது. இதனையடுத்து பணத்தை மீட்டு தரக் கோரி, நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பலர், குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்திருந்தனர்.

இப்புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள நிறுவன உரிமையாளர் நிர்மலனை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories: Tamilnadu
Image

ஜேப்பியாரின் கல்வி அறக்கட்டளை பெயரில் வங்கியில் பலகோடி ரூபாய் மோசடி!

September 15, 2017 21 views Posted By : krishnaAuthors
Image

ஜேப்பியாரின் கல்வி அறக்கட்டளை பெயரில், போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் 150 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஜேப்பியாரின் மகள் உள்ளிட்ட 5 பேர் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜேப்பியாரின் இரண்டாவது மகளான ஷீலா என்பவர், கடந்த ஜூலையில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் ஜேப்பியாரின் சத்தியபாமா கல்வி அறக்கட்டளையில், போலி உறுப்பினர்களை சேர்த்து, அதன் மூலம் போலி ஆவணங்களை தயாரித்து, இந்தியன் வங்கியில் 150 கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார்.

ஜேப்பியாரின் 4-வது மகளான மரிய ஜீனா மற்றும் அவரது கணவர் மேரி ஜான்சன் இருவரும் சேர்ந்து வங்கியில் கடன் பெறுவதற்காக, ஷீலாவின் கணவர் பாபு மனோகரன், ஜேப்பியாரின் 3-வது மகள் ரெஜினாவின் கணவர் முரளி ஆகியோர் துணையுடன் சத்யபாமா அறக்கட்டளையில், போலி உறுப்பினர்களை நியமித்துள்ளதாகவும் ஷீலா கூறியிருந்தார்.

இதன் மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து, வங்கியில் கடன் பெற்றதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து, புகாரை விசாரித்த, மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜேப்பியாரின் 4-வது மகள் மரிய ஜீனா, அவரது கணவர் மேரி ஜான்சன், ஜேப்பியாரின் 2-வது மகள் ஷீலாவின் கணவர், ஷீலாவின் மகள் ஆகிய 5 பேர் மீது மோசடி, கூட்டுச் சதி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories: Tamilnadu
Image

தேர்தல் ஆணையம் சார்பில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

May 12, 2017 1 view Posted By : krishnaAuthors
Image

டெல்லியில், தேர்தல் ஆணையம் சார்பில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான சர்ச்சை குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. 

மின்னணு எந்திரத்தில் வாக்குப்பதிவு நடக்கும்போது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்குகள் பதிவாகுமாறு செய்ய முடியும் எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதனால் மீண்டும் வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரி அந்தக் கட்சிகளின் தலைவர்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து வலியுறுத்தினர்.

மின்னணு எந்திரத்தில் தவறாக வாக்குப் பதிவாகுமாறு செய்ய முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்ததுடன், ஒருவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அறிய அவருக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கும் எந்திரத்தை இணைக்கவும் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், ஒப்புகைச் சீட்டு எந்திரம், தேர்தல் சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தேர்தல் ஆணையம் நடதுகிறது.

தேர்தலில் வாக்காளருக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்வது பற்றியும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 7 தேசியக் கட்சிகளுக்கும், 48 மாநிலக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

Categories: India
Image
Subscribe to மோசடி