​'ஐ போன்'-க்கு பதில் 'துணி சோப்பு': வங்கி மேலாளரிடம் நூதன முறையில் மோசடி!

August 01, 2018 1 view Posted By : nandhakumarAuthors
Image

சென்னை மயிலாப்பூரில் வங்கி மேலாளரிடம் "ஐ போன்" என கூறி துணி சோப்பை கொடுத்து நூதன முறையில் மோசடி. 

மயிலாப்பூர் ஐஓபி வங்கிக்கு வந்த இருவர், மேலாளர் ரமேஷை சந்தித்து ஐ போன் விலைக்கு உள்ளதாக கூறியுள்ளனர். மேலாளர் ரமேஷ்யிடன் இந்த ஐ போன் வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் என மேலாளர் ரமேஷிடம் இருவரும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வங்கி மேலாளர் ரமேஷும் அந்த ஐ போனை வாங்கி பரிசோதித்து பார்த்துள்ளார். பின்பு 15 ஆயிரம் கொடுத்து அந்த  "ஐ போனை" பெட்டியுடன் வாங்கியுள்ளார் வங்கி மேலாளர் ரமேஷ். இந்நிலையில், இருவரும் அங்கிருந்து சென்ற பிறகு, மேலாளர் ரமேஷ் பெட்டியை திறந்து பார்த்தபோது துணி சோப்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இதனைதொடர்ந்து, துணி சோப்பு இருந்ததை கண்ட வங்கி மேலாளர் ரமேஷ் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரையடுத்து வங்கியிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், வங்கி மேலாளர் இடமே துணிப்பு சோப்பை ஐ போன் என்று விற்பனை செய்துவிட்டு தப்பிய இச்சம்பவம் மயிலாப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories: Tamilnadu
Image

ஐபிஎஸ் அதிகாரி போன்று நடித்து மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

July 25, 2018 1 view Posted By : krishnaAuthors
Image

சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி போன்று நடித்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர், இந்திரா நகர் பகுதியில் ஐபிஎஸ் அதிகாரி என்று கூறக் கொண்டு ஒருவர் காரில் சுற்றித்திரிவதாக கானத்தூர் காவல்நிலையத்திற்கு  தகவல் கிடைத்தது. 

சந்தேகத்தின் பேரில் அந்த நபரை மடக்கிப்பிடித்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த பாலமணிகண்டன் என்பதும், இணையம் மூலம் பல பெண்களை ஏமாற்றி, நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் நபர் என்பதும் தெரியவந்தது.

காவல்நிலையத்தில் அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில். பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ். அதிகாரி போல் சுற்றித் திரிந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Categories: Tamilnadu
Image

​வெளிநாட்டு பணம் என கூறி வெள்ளை தாள்களை கொடுத்து மோசடி!

July 18, 2018 0 views Posted By : shanmugapriyaAuthors
Image

மதுரையில் வெளிநாட்டு பணம் என கூறி வெள்ளை தாள்களை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

அண்ணா நகரைச் சேர்ந்த மசூர் ஆரிப் என்பவர் மதுரை மீனாட்சி பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார். கடந்த 4ம் தேதி இவரை தொடர்புகொண்ட வடமாநில பெண் ஒருவர், 3 ஆயிரம் சவுதி ரியாலை இந்திய ரூபாயாக மாற்றித் தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை ஆரிப் தயார் செய்துள்ளார். பின்னர் சவுதி ரியாலை மாற்றுவதற்காக இரண்டு இளைஞர்களை அந்த பெண் அனுப்பி வைத்துள்ளார். 

அவர்களிடம் ரியாலை வாங்கி விட்டு, அதற்கு ஈடான பணத்தை ஆரிப் கொடுத்துள்ளார். ரியாலை சரிபார்த்தபோது, உள்ளே இருந்தவை அனைத்தும் வெள்ளைத் தாள்கள் என்பது தெரியவந்தது. ஆரிப் சுதாரிப்பதற்குள், அவரை தள்ளி விட்டுவிட்டு, அவர்கள் இருவரும் தப்பியோடினர். தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் அளிக்காத ஆரிப், அவர்களை பல இடங்களில் தேடி அலைந்துள்ளார். இந்நிலையில், மதுரை ஆவின் சந்திப்பில், அவர்கள் ஆட்டோவில் செல்வதை பார்த்த ஆரிப், விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், அவர்கள் இருவரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகமது சமீர் மற்றும் மீதுரான் என்பது தெரியவந்தது. 

அவர்களிடமிருந்து 48 ஆயிரத்து 400 ரூபாய் மற்றும் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் அளித்த தகவலின்பேரில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட, 7 பேரிடம் சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள், ஆன்லைனில் தொடர்பு கொண்டு, டாலர் மற்றும் ரியால் நோட்டுகளை மாற்ற வேண்டும் எனக் கூறி, பலரிடம் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Categories: Tamilnadu
Image

​ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட பிரபல இந்தி நடிகர்!

June 03, 2018 0 views Posted By : shanmugapriyaAuthors
Image

ஐபிஎல் சூதாட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டதை பிரபல இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கான் ஒப்புக்கொண்டுள்ளார். 

ஐபில் போட்டிகளில் சூதாட்டத்தை நடத்தியதாக சூதாட்டத் தரகர் சோனு ஜலான் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலம் தானே போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கான் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 

தானே போலீசார் அர்பாஸ் கானையும் சோனு ஜலானையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்து விசாரணை நடத்தினர். அப்போது ஐபிஎல் சூதாட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டதை அர்பாஸ் கான் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த சூதாட்டத்தினால் கிட்டத்தட்ட 2 கோடியே 80 லட்சம் ரூபாய் தொகையை தோற்றுள்ளதாகவும், ஆனால் அந்த தொகையை இதுவரை அவர் செலுத்தவில்லை எனவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பாலிவுட் நடிகர்கள் ஐபிஎல் பெட்டிங்கில் ஈடுபட்டது குறித்தும் இந்த விசாரணையில் அம்பலமானதாகக் கூறப்படுகிறது. ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட பல்வேறு நவீன யுக்திகளை கையாண்ட சூதாட்ட தரகர் சோனு ஜலான் சிறிய தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் போல் செயல்படும் நவீன கருவி ஒன்றையும் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

Categories: India
Image

வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கே தெரியாமல் நடந்த பணப்பரிவர்த்தனை!

May 26, 2018 2 views Posted By : shanmugapriyaAuthors
Image

கோவை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களின் வங்கிக்கணக்கில் அவர்களுக்கே தெரியாமல் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பின்னர் எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பைக் ஏற்படுத்தியுள்ளது. 

கோவை நீலாம்பூரில் உள்ள கனரா வங்கியின் கிளையில், அந்த பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவி குழுவினர், கணக்கு வைத்துள்ளனர். இந்த கணக்குகளில், திடீர் திடீரென லட்சக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதாகவும், 2  தினங்களில் அந்த பணம் திரும்ப எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், வரவு வைக்கப்பட்ட பணத்திற்கு. வட்டி என்ற பெயரில், மகளிர் சுயஉதவிக் குழுவினரின் பணத்தையும் வங்கி நிர்வாகம் எடுத்துக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அண்மையில், தங்களது கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதாகவும், இரு தினங்களில் வட்டியுடன் சேர்த்து, வங்கி நிர்வாகத்தினர் கூடுதலாக பணத்தை எடுத்துக்கொண்டதாகவும் மகளிர் சுயஉதவி குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து, வங்கி அதிகாரிகளிடம் கேட்டால், மழுப்பலாக பதில் அளிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

கடன் பெற்ற  பயனாளிகள் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டது தொடர்பாக  விளக்கம்கேட்டு கடந்த 10ம் தேதி வங்கி மேலாளருக்கு கடிதம் எழுதியபோதிலும் இதுவரை இந்த பதிலும் இல்லை என்றும் இது தொடர்பாக ஆர்பிஐ, சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமமூர்த்தி தெரிவித்தார். 
 
இது குறித்து நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்த கோவை கனரா வங்கியின் மண்டல மேலாளர் கணேஷ் ,வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் பணப்பரிவர்த்தனை செய்தது, வங்கியின் தவறுதான் எனவும் அவர்களிடம் பிடித்தம் செய்த வட்டித்தொகையக் திரும்ப வழங்கப்படும் என்றும் கூறினார். வங்கி மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.. 

Categories: Tamilnadu
Image

மோசடியில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

May 18, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

ஓமலூர் அருகே மோசடியில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காருவள்ளி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு ஏராளமான வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்பிச் செல்கின்றனர். 

இந்நிலையில், இந்த பெட்ரோல் பங்க் மீது சந்தேகம் எழுந்ததால், ஒரு லிட்டர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றுமாறு வாடிக்கையாளர் ஒருவர் கேட்டுள்ளார். முதலில், மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், பலரும் தகராறில் ஈடுபட்டதால் பெட்ரோல் ஊற்றியுள்ளனர். அப்போது, பாட்டிலில் 750 மில்லி லிட்டர் மட்டுமே பெட்ரோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு குவிந்த மக்கள், பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார், பெட்ரோல் பங்க் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Categories: Tamilnadu
Image

சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி பல கோடி மோசடி!

April 13, 2018 5 views Posted By : krishnaAuthors
Image

சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி பல கோடி மோசடி செய்த நபர், மாங்காடு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதனையடுத்து ஏலச்சீட்டு கட்டி பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பாக திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மாங்காட்டை சேர்ந்தவர் பழனி, 1 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரையிலான மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். அவரிடம் மாங்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள  பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர்.

பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்த இவர், கடந்த சில மாதங்களாக ஏலச்சீட்டு முடிந்தவர்களுக்கு உரிய பணத்தை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சீட்டு போட்டவர்கள் பழனி வீட்டிற்கு சென்று பணம் கேட்டதால், வீட்டை பூட்டி விட்டு திடீர் தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த பழனி, தான் எலச்சீட்டு நடத்தி திவாலாகி விட்டதாக கூறி மாங்காடு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த தகவல் அறிந்ததும் ஏலச்சீட்டு கட்டியவர்கள் 200க்கும் மேற்பட்டோர் மாங்காடு போலீஸ் நிலையம் முன்பு ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களை பொருளாதார குற்றவியல் பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்க அறிவுறுத்தினர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் தங்கள் மனுக்களை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் அளித்தனர். 

Categories: Tamilnadu
Image

திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி என எம்.பி அன்வர் ராஜா மகன் மீது இளம்பெண் புகார்!

March 23, 2018 4 views Posted By : elangoAuthors
Image

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 50 லட்ச ரூபாய் அளவுக்கு மோசடி செய்து விட்டதாக சின்னத்திரை பெண் தொகுப்பாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சின்னத்திரை தொகுப்பாளரும், ரேடியோ வர்ணனையாளருமான சென்னையை சேர்ந்த ரொபினா, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக எம்பி அன்வர் ராஜா, அவரது மகன் நாசர் அலி உள்ளிட்டோர் மீது புகார் அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலிக்கும், தமக்கும்  2015-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் காதல் மலர்ந்ததாகவும் கூறினார். திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் நாசர் அலியுடன் ஒரே வீட்டில் வசித்ததாகவும், நாசர் அலி திரைப்படத்தில் நடிப்பதற்காக ரூ.50 லட்சம் பணமும், ரூ.12 லட்சம் மதிப்பிலான நகைகளும் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன் தம்மிடம் இருந்து விலகிய நாசர் அலிக்கு வரும் 25-ந் தேதி வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும், இது குறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுவதாகவும் புகாரில் ரொபினா குறிப்பிட்டுள்ளார்.

Categories: Tamilnadu
Image

VGN டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

February 17, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

சென்னையில், வங்கி மோசடி புகாரில், தனியார் கட்டுமான நிறுவனத்திற்குச் சொந்தமான 115 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி, அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் விஜிஎன் கட்டுமான நிறுவனம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனம், மத்திய அரசு நிறுவனத்திற்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்திற்கான மதிப்பீட்டில் மோசடி செய்ததாக கடந்த 2016ல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த மோசடி புகாரில், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சென்னை கிண்டியில் உள்ள விஜிஎன் நிறுவனத்திற்குச் சொந்தமான 115 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

Categories: Tamilnadu
Image

​சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் அதிர்ச்சியளிக்கும் பரபரப்பு தகவல்கள்!

February 17, 2018 0 views Posted By : elangoAuthors
Image

நீரவ் மோடிக்கு பஞ்சாப் தேசிய வங்கி பெயரில் அளிக்கப்பட்ட புரிந்துணர்வுக் கடிதங்களில் (LoU) பெரும்பான்மையானவை 2017-18ம் ஆண்டு காலத்தில் வழங்கப்பட்டவை என சிபிஐ தெரிவித்துள்ளது.

நீரவ் மோடிக்கு கடன் வழங்கியது முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் என்பதால் இந்த மோசடிக்கு காங்கிரஸே பொறுப்பு என பாஜகவும், நீரவ் மோடியை பாஜக தப்ப வைத்துள்ளதாகவும், அதனால் பாஜக தான் காரணம் என பாஜகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வரும் சூழலில், நீரவ் மோடி மோசடிக்கு பயன்படுத்திய வங்கி புரிந்துணர்வுக் கடிதங்கள் 2017-ல் புதுப்பிக்கப்பட்டுள்ளதை சிபிஐ வெளிப்படுத்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வங்கி மோசடியான பஞ்சாப் தேசிய வங்கி மோசடி வழக்கில் வியாழக்கிழமை புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள நீரவ் மோடியின் மாமா மெகுல் சோக்ஸி மற்றும் அவரது 3 நிறுவனங்கள் மீது சிபிஐ, புரிந்துணர்வுக் கடிதங்கள் மூலம் ரூ.4,886.72 கோடி 2017-18ல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் மட்டும் பிற வங்கிகள் பணம் வழங்குவதற்கான 143 வங்கி புரிந்துணவுக் கடிதங்களை பஞ்சாப் தேசிய வங்கி அளித்துள்ளதாக சிபிஐ கூறியுள்ளது.

ரூ.11,400 கோடி மோசடி தொடர்பான வங்கி புரிந்துணர்வுக் கடிதங்களில் பெரும்பான்மையானவை 2017-18 வழங்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது. ஜனவரி 31ம் தேதி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள, ரூ.280.7 கோடி மோசடி நடைபெற காரணமாக இருந்த 8 புரிந்துணர்வுக் கடிதங்கள் 2017ல் வழங்கப்பட்டவை. 

பஞ்சாப் தேசிய வங்கி அளித்துள்ள கூடுதல் விவரங்கள், ஆவணங்கள் அடிப்படையில் புதிதாக போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் மோசடி நடைபெற்ற தொகையாக ரூ.6,498 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த மோசடித் தொகை சுமார் ரூ.11,400 கோடி என பஞ்சாப் தேசிய வங்கித் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

2014 முதல் 2017 வரையிலான காலத்தில் நீரவ் மோடி மற்றும் அவரது நிறுவனங்களுடன் மோசடிக்கு உடைந்தையாக இருந்ததாக கருதப்படும் 4 வங்கி அதிகாரிகளிடம் சிபிஐ நேற்று பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டுள்ளது. 

2015-17 அக்டோபர் வரை பஞ்சாப் தேசிய வங்கியின் மும்பை நரிமன் பாயிண்ட் கிளை முதன்மை மேலாளராக இருந்த பெச்சு பி திவாரி, துணை பொதுமேலாளர் சஞ்சய் குமார் பிரசாத், கூடுதல் பொதுமேலாளர் மகேந்தர் கே சஹ்ர்மா, ஆடிட்டர் மனோஜ் காரத் உள்ளிட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். 

மோசடி தொடர்பாக, மெகுல் சோக்ஸி, அவருடைய கீதாஞ்சலி ரத்தினங்கள், கிலி இந்தியா மற்றும் நக்‌ஷத்ரா பிராண்ட் நிறுவனங்கள் மற்றும் ஒரு நிர்வாக இயக்குநர், 10 இயக்குநர்கள் மற்றும் பஞ்சாப் தேசிய வங்கி அதிகாரிகள் 2 பேர் என 16 பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 143 புரிந்துணர்வுக் கடிதங்கள் மட்டுமல்லாது, FLCs எனப்படும் கடன் அளிப்பதற்கான வெளிநாட்டு கடிதங்கள் (Foreign Letters of Credit) 224ஐ பஞ்சாப் தேசிய வங்கியில் இருந்து சோக்ஸிக்கு வழங்கியது தொடர்பாகவும் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. 

2017-18ல் நடைபெற்ற ரூ.4,886.72 கோடி மோசடி நடைபெற காரணமாக இருந்த போலியான LoU-களை வழங்க உதவியதாக வங்கி அதிகாரிகள் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் காரத் மீது முதல் தகவல் அறிக்கையில் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. மோசடி வெளித்தெரியாமல் இருப்பதற்காக ‘Core Banking System’ எனப்படும் மைய வங்கி அமைப்பில் மெகுல் சோக்ஸிக்கு LoU-கள் வழங்கப்பட்டது தொடர்பான விவரங்களை பதிவு செய்யாமல் புறக்கணித்ததாக இருவர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகள் படி, வைரம், நகைகள் உள்ளிட்டவைகளை வெளிநாடுகளில் வாங்குவதற்காக வழங்கப்படும் புரிந்துணர்வுக் கடிதங்கள் (LoU) 90 நாட்கள் கால அவகாசம் கொண்டவை. ஆனால், பஞ்சாப் தேசிய வங்கி வழங்கியுள்ள LoU-கள் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை கால அவகாசத்துடன் வழங்கப்பட்டுள்ளதும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பஞ்சாப் தேசிய வங்கி மோசடி தொடர்பாக, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸியுடன் தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. மும்பை, புனே (மகாராஷ்டிரா), சூரத் (குஜராத்), ஜெய்பூர் (ராஜஸ்தான்), ஹைதராபாத் (தெலுங்கானா), கோயம்புத்தூர் (தமிழ்நாடு) என 5 மாநிலங்களைச் சேர்ந்த 6 நகரங்களின் சுமார் 26 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. அமலாக்கத்துறை 11 மாநிலங்களில் 35 இடங்களில் சோதனை மேற்கொண்டது. இதில், ரூ.549 கோடி மதிப்பிலான வைரங்கள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Categories: India
Image
Subscribe to மோசடி