ஹந்தூராஸ் நாட்டில் வறட்சி: 5 லட்சம் மக்கள் திண்டாடும் நிலை

December 04, 2014 1 view Posted By : suryaAuthors

ஹந்தூராஸ் நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக சுமார் 5 லட்சம் மக்கள் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஹந்தூராஸ் நாட்டின் இன்டிபூகா என்ற பகுதியில் கடும் வறட்சி நிலவுவதாகவும், இதனால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும், ஐஎஃப்ஆர்சியும் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உலக சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இந்த அமைப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ளன. 
ஹந்தூராசின் 18 மாகாணங்களில் 10 மாகாணங்கள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பொது மக்களில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹந்தூராஸ் நாட்டில் 22.6 சதவிகித மக்கள் அதாவது சுமார்  85 லட்சம் பேர் ஊட்டச் சத்துக் குறைபாட்டுடன் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
வறட்சி மட்டுமல்லாமல், தூய்மையான குடிநீர் கிடைக்காமல்  ஹந்தூராஸ் நாட்டைச் சேர்ந்த சுமார் 19 சதவிகித மக்கள் அவதிப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்டை நாடான கௌதமாலாவிலும் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories: World
Image
Subscribe to Honduras