​காவலர் மீது தாக்குதல் நடத்திய ரவுடியை சுட்டுக்கொன்ற போலீசார்!

July 04, 2018 2 views Posted By : shanmugapriyaAuthors
Image

சென்னையில் காவலர் ராஜவேலு மீது தாக்குதல் நடத்திய ஆனந்த் என்ற ரவுடி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்ட முயன்றதால் அவரை சுட்டுக்கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சென்னை ராயப்பேட்டையில் பி.எம் தர்கா அருகே நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த கலைந்து செல்லுமாறு கூறிய காவலர் ராஜவேலுவை, பத்து பேர் கொண்ட கும்பல், திடீரென சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டியது. இதில், தலை, கன்னம், காது உள்ளிட்ட இடங்களில் பலத்தக் காயமடைந்த ராஜவேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே காவலர் ராஜவேலுவை தாக்கிய ரவுடிக்கும்பலை பிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில், அரவிந்தன், ஜிந்தா, வேல்முருகன், அஜித்குமார், சீனு, மகேஷ் ஆகிய ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். 

ஆனந்த் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை ஆனந்த் பிடிபட்டார். காவலர் ராஜவேலுவைத் தாக்கியபோது, அவரது வாக்கி டாக்கியை ஆனந்த் பறித்துகொண்டார். இதனால், அந்த வாக்கி டாக்கியையும், ராஜவேலுவை தாக்க பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்வதற்காக, ஆனந்த்தை மத்திய கைலாஷ் அருகே உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரிக்கு, போலீசார் அழைத்து சென்றனர், கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் சுதர்சன், மயிலாப்பூர் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா ஆகியோர் தலைமையிலான போலீசார், ஆனந்தை அழைத்துச் சென்றனர். கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில், வாக்கி டாக்கி மற்றும் கத்தியை மறைத்துவைத்திருப்பதாக ஆனந்த் கூறினார். 

பின்னர் மரத்தில் இருந்து வாக்கி டாக்கியை எடுத்த அவர், திடீரேன கீழே நின்று கொண்டிருந்த உதவி ஆய்வாளர் இளையராஜாவை, கத்தியால் வெட்டினார். இதில், இளையராஜாவின் கையில் வெட்டு விழுந்தது. இதனால் சுதாரித்துகொண்ட கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன், தனது துப்பாக்கியால் ஆனந்தை சுட்டார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆனந்த், உயிரிழந்தார். இதனையடுத்து சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்க்காக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரவுடி ஆனந்தை தற்காப்புக்காக சுட்டதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட ஆனந்த் மீது, ஏற்கனவே கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன. மேலும், ஏற்கனவே 7 முறை சிறையில் அடைப்பட்டிருந்த ஆனநத், இரண்டு முறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார். 

Categories: Tamilnadu
Image

​டெல்லியில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் 4 ரவுடிகள் சுட்டுக்கொலை!

June 10, 2018 1 view Posted By : shanmugapriyaAuthors
Image

டெல்லியில் கொலை, கொள்ளை உள்பட 25 வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ராஜேஸ் பார்தி மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 

டெல்லி மற்றும் ஹரியானாவில் பல்வேறு கொடிய குற்றங்களை நிகழ்த்திய ராஜேஸ் பார்தி அம்மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த 10 முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக இருந்தார். ஹரியானா போலீசாரால் கைது செய்யப்பட்ட ராஜேஸ் பார்தி பின்னர் அவர்கள் வசமிருந்து தப்பி தலைமறைவானார். 

இந்நிலையில், அவரை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு அறிக்கப்பட்டது. இந்நிலையில் தெற்கு டெல்லியின் சதர்பூர் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்த ராஜேஸ் பார்தியையும், அவரது கூட்டாளிகளையும் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் சுற்றிவளைத்தனர். அவர்களை சரணடையுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் ராஜேஸ் பார்தி கும்பல் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். 

இதையடுத்து இரு தரப்பிற்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. இந்த மோதலில் ராஜேஸ் பார்தி மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 6 ரவுடிகள் காயம் அடைந்தனர். மோதலில் 4 போலீசாரும் காயம் அடைந்தனர். 

Categories: India
Image

என்கவுன்டரில் தப்பிய ரவுடி கஞ்சாவுடன் கைது!

May 05, 2018 4 views Posted By : nandhakumarAuthors
Image

மதுரை என்கவுன்டரில் தப்பிய பிரபல ரவுடி மாயக்கண்ணனை, 6கிலோ கஞ்சாவுடன் சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரையில் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி நடந்த என்கவுன்டரில் பிரலப ரவுடிகளான சகுனி கார்த்திக் மற்றும் முத்து இருளாண்டி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இந்த சம்பவத்தில் உடனிருந்த சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி மாயகண்ணன் தப்பிச்சென்று விருதுநகர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த அவர், பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே தனிப்படை போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி மாயக்கண்ணனை கைது செய்த போலீசார், காரில் இருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மாயக்கண்ணன் மீது, கொலை, கொள்ளை, கடத்தல் உட்பட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  

Categories: Tamilnadu
Image

போலீஸ் துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பியோடிய ரவுடி நீதிமன்றத்தில் சரண்!

March 04, 2018 1 view Posted By : krishnaAuthors
Image

மதுரையில் போலீஸ் என்கவுண்டரில் இருந்து தப்பியோடிய ரவுடி மாயகண்ணன், விருதுநகர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 

மதுரை சிக்கந்தர் சாவடியில் நேற்று முன்தினம் ரவுடிகளை பிடிக்கச் சென்ற போலீசாரை நோக்கி, ரவுடிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீசார் நடத்திய எதிர் தாக்குதலில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகிய இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது, மாயக் கண்ணன் என்ற ரவுடி தப்பியோடிவிட்டார். 
தலைமறைவான ரவுடி மாயக்கண்ணனை காவல்துறையினர் தேடிவந்த நிலையில், விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில், மாயக்கண்ணன் நேற்று சரண் அடைந்தார்.

அவரை இரு தினங்கள் விருதுநகர் மாவட்ட சிறையில்  அடைக்க உத்தரவிட்ட நீதிபதி மும்தாஜ்,  வழக்கு தொடர்பாக, வரும் 5ஆம் தேதி வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

Categories: Tamilnadu
Image

மதுரையில் என்கவுன்ட்டரில் இரு ரவுடிகள் சுட்டுக் கொலை!

March 01, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

மதுரையில் என்கவுன்ட்டரில் இரு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கூடல்நகரை அடுத்த சிக்கந்தர் சாவடியில் மாயக்கண்ணன் என்பவர் வீட்டில் ரவுடிகள் சிலர் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, செல்லூர் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் மாயக்கண்ணன் வீட்டைச் சுற்றி வளைத்தனர்.

அப்போது வெளியே வந்த முத்துஇருளாண்டி என்ற ரவுடி கையில் வைத்திருந்த துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. இதில் 2 போலீஸார் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் சுதாரித்துக் கொண்டு திருப்பிச் சுட்டதில் முத்துஇருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய ரவுடிகள் உயிரிழந்தனர். 

மாயக்கண்ணன் தப்பிச் சென்று விட்டார். மேலும் அவரது மனைவியும், வீட்டில் இருந்த மற்றொரு ரவுடியுமான ரவிசங்கர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் பொட்டப்பனையூரை சேர்ந்த முத்து இருளாண்டி மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த சகுனி கார்த்திக் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Categories: Tamilnadu
Image

பிரபல ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை!

April 14, 2017 1 view Posted By : krishnaAuthors
Image

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிரபல ரவுடியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.   

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடிபங்கு கிராமத்தை சேர்ந்த ரவுடி கோவிந்தன் மீது கொலை, கொள்ளை உள்பட 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து ரவுடி கோவிந்தனை தேடி வந்தனர்.

கொடிபங்கு அருகே கோவிந்தன் பதுங்கி இருப்பதாக வந்த கிடைத்த தகவலையடுத்து, அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர்.  அப்போது, மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காவல்துறை தலைமை காவலர் சௌந்தபாண்டியனை தாக்கியதுடன், உதவி ஆய்வாளர் தங்கமுனியசாமியை வெட்டி விட்டு தப்பிக்க முயன்ற போது கோவிந்தனை தற்காப்புக்காக காவல்துறையினர் சுட்டனர். இதில் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலே பலியானார்.

காயமடைந்த உதவி ஆய்வளார் மற்றும் தலைமை காவலர் இரண்டு பேரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிந்தன் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அதனை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

Categories: Tamilnadu
Image

சிவகங்கை அருகே காவலரை வெட்டிய ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

January 11, 2017 0 views Posted By : elangoAuthors
Image

சிவகங்கை அருகே காவலரை வெட்டிய ரவுடி கார்த்திகை சாமி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

நேற்று நள்ளிரவில் மதுரையில் உள்ள வங்கி ஒன்றில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயன்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குற்றவாளிகள்,  சிவகங்கை மாவட்டத்திற்கு சென்றதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, சிவகங்கையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். 

இந்நிலையில் கோவனூர் அருகே காரில் சென்ற குற்றவாளிகளை காட்டுப் பகுதியில் போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். அப்போது திடீரென குற்றவாளிகள் இருவர் காவலர் வேல்முருகனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். 

இதனிடையே போலீசாரை வெட்டிய ரவுடி கார்த்திகை சாமியை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுகொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories: Tamilnadu
Image

ஆந்திர என்கவுண்டர்: முக்கிய சாட்சிகளிடம் திருப்பதியில் விசாரணை

July 21, 2015 1 view Posted By : arunAuthors
Image

ஆந்திராவில் என்கவுன்டரில் 20 தமிழர்கள் சுட்டுக்கொன்ற வழக்கில் முக்கிய சாட்சிகளிடம் சிறப்பு புலனாய்வு குழு திருப்பதியில் இன்று விசாரணை நடத்தியது.

திருப்பதியில் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி செம்மரம் கடத்தியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 20 பேரை திருப்பதி செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சுட்டு கொன்றனர்.

இது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், சிறப்பு புலனாய்வு குழு  அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து, மக்கள் கண்காணிப்பு அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள சாட்சிகளை திருப்பதியில் உள்ள பத்மாவதி கல்லூரி விருந்தினர் மாளிகையில் வைத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர்.

அப்போது தமிழத்திலிருந்து வந்த காவல்துறையினர் மற்றும் மக்கள் கண்காணிப்பு குழுவினரை உள்ளே அனுமதிக்கவில்லை. 3 மணி நேர விசாரணைக்கு பின் சாட்சிகளை மக்கள் கண்காணிப்பு குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

Categories: India
Image

ரவுடி புல்லட் நாகராஜ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

September 08, 2018 5 views Posted By : wasimAuthors
Image

சிறைத்துறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து புல்லட் நாகராஜை கைது செய்ய தனிப்படை போலீசார் பெரியகுளம் விரைந்துள்ளனர். 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்களத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜ்.  இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் புல்லட் நாகராஜ் வாட்ஸ் ஆப்பில் ஆடியோ பதிவு மூலம் மதுரை சிறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் மதுரை மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா உள்ளிட்ட அதிகாரிகளை கொலை செய்து விடுவோம் என பேசிய அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளார். 

இதையடுத்து மதுரை மத்திய சிறைச்சாலை அலுவலர் ஜெயராமன், மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்திடம், புகார் மனு அளித்தார். அந்த மனுவில் புல்லட் நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். 

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மதுரை மாநகர காவல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் புல்லட் நாகராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன், அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தேனி விரைந்துள்ளனர்.

Categories: Tamilnadu
Image

​திருப்பதி என்கவுண்டர் விசாரணையை திசை திருப்ப முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

July 22, 2015 1 view Posted By : arunAuthors
Image

ஆந்திர மாநிலத்தில் செம்மரம் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மூவரை திசை திருப்ப முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தமிழகத்தை சேர்ந்த அப்பாவி கூலி தொழிலாளர்கள் இருபது பேர் அம்மாநில காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  

இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஆந்திர காவல்துறையினர் திருவண்ணாமலையை சேர்ந்த பாலசந்தர், இளங்கோ, சேகர் ஆகிய மூவரை அழைத்து சென்றனர். இதில், இளங்கோ, சேகர் ஆகியோரை திருப்பதிக்கு அனுப்பிய ஆந்திர போலீசார், பாலசந்திரனை மட்டும் புத்தூர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் வழக்கை திசை திருப்பும் நோக்குடன் காவல்துறை விசாரணை நடத்துவதாகக் கூறி, மூவருடன் அங்கு சென்ற மக்கள் கண்காணிப்பு அமைப்பின் வழக்கறிஞர் ரவி, சித்தூர் டி.எஸ்.பி கட்டாரி ரகுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது. இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் அவர்கள் மூவரும் தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Categories: India
Image
Subscribe to encounter