முகப்பு > உலகம்

​அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விடை பெறும் ஒபாமா கடைசி உரை..!

January 11, 2017

​அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விடை பெறும் ஒபாமா கடைசி உரை..!


அமெரிக்க மக்கள்தான் தன்னை சிறந்த அதிபராக மாற்றியதாக, அதிபர் பதவியிலிருந்து விடைபெறவுள்ள ஒபாமா, தனது கடைசி உரையில் உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விடைபெறவுள்ள ஒபாமா, சிகாகோவில் இன்று தனது நிறைவு உரையை நிகழ்த்தினார். அப்போது தன்மீதும், தனது குடும்பத்தின்மீதும் அமெரிக்க மக்கள் காட்டிய அன்பு அளவிட முடியாதது என அவர் கூறினார். 

தான் அதிபராக பொறுப்பேற்றபோது இருந்ததை விட, தற்போது வலுவான நிலையில் அமெரிக்கா இருப்பதாகவும் ஒபாமா கூறினார். சாதாரண மக்களும் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே மாற்றங்கள் ஏற்படும் என, தான் கற்றுக் கொண்டதாகவும் ஒபாமா தெரிவித்தார். 

இன்னும் 10 தினங்களில் அடுத்த அதிபர் பொறுப்பேற்க உள்ளதாகவும், அதிபர் பதவி மாற்றம் சுமுகமாக நடைபெறும் என உறுதியளிப்பதாகவும் ஒபாமா குறிப்பிட்டார். அமெரிக்கா முஸ்லிம்கள் மீது எப்போதுமே பாகுபாடு காட்டவில்லை எனவும் ஒபாமா தனது உரையில் குறிப்பிட்டார். 

இனவாதம் அமெரிக்க சமூகத்தில், இன்னமும் பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு சக்தியாக உள்ளது எனவும் ஒபாமா, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தீவிரவாதம் பற்றி தனது உரையில்  குறிப்பிட்ட ஒபாமா, கடந்த 8 ஆண்டுகளில் எந்த ஒரு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பும், அமெரிக்காவில் தாக்குதல் நடத்தமுடியவில்லை எனவும் தெரிவித்தார்.

சர்வதேச பயங்கரவாத தலைவன் ஒசாமா பின்லேடன் உட்பட, பல்லாயிரம் தீவிரவாதிகளை அழித்திருப்பதாகவும் ஒபாமா பெருமிதம் தெரிவித்தார்.  ஐ.எஸ்.தீவிரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த தீவிரவாத அமைப்பும் அமெரிக்காவை மிரட்ட முடியாது எனவும் ஒபாமா உறுதியளித்தார். 

அவரது உரையின்போது, மேலும் ஓராண்டுக்கு அதிபராக நீடிக்க வேண்டுமென பொதுமக்கள் உணர்ச்சி பொங்க குரல் எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஒபாமா, அதிபர் பதவியை தொடர விரும்பவில்லை என கூறினார். 

அமெரிக்க வளர்ச்சியில் குடியேறியவர்களின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிட்ட ஒபாமா, குடியேறியவர்களின் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்