முகப்பு > உலகம்

பிரியாவிடை நிகழ்ச்சியில் மனைவி மிஷல் குறித்து ஒபாமா உருக்கம்!

January 11, 2017

பிரியாவிடை நிகழ்ச்சியில் மனைவி மிஷல் குறித்து ஒபாமா உருக்கம்!


அமெரிக்க அதிபரை வழியனுப்பும் விதமாக சிகாகோவில் நடந்த நிகழ்ச்சியில், தமது மனைவி மிஷலால் அமெரிக்கா பெருமையடைந்துள்ளதாக பராக் ஒபாமா உருக்கமாகக் கூறினார்.

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து பராக் ஒபாமா வரும் 20ம் தேதி ஓய்வுபெறவுள்ளார். ஒபாமாவை வழியனுப்ப பொதுமக்கள் நடத்திய நிகழ்ச்சி சிகாகோவில் நடைபெற்றது. இதில் பேசிய ஒபாமா, கடந்த 25 ஆண்டுகளாக தமது மனைவியாகவும், இரண்டு மகள்களின் தாயாகவும் தலைசிறந்த முறையில் மிஷல் செயல்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் பேசினார்.

இன்றைய இளைய சமுதாயத்துக்கு முன்னோடியாக மிஷல் திகழ்வதாகக் கூறிய ஒபாமா, அனைவரிடமும் அன்புடனும், மகிழ்ச்சியுடன் அவர் நடந்துகொண்ட விதம் குறித்து பாராட்டினார். ஒரு குடும்பத் தலைவியாக மிஷல் நடந்துகொண்ட விதத்தினால் அமெரிக்காவுக்கே பெருமை கிடைத்திருப்பதாக கூறிய போது ஒபாமா கண்கலங்கினார். இது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியது.

மேடையில் அதிபர் ஒபாமா பேசிக்கொண்டிருந்தபோது அவரது மனைவி மிஷல் மற்றும் மூத்த மகள் மலியா ஆகியோர் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்தனர். 

ஒபாமாவின் கண்கள் கலங்கியதைப் பார்த்த மலியாவும் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்ததைத் தடுக்கமுடியவில்லை. அந்த உணர்ச்சிப்பூர்வமான நேரத்தில் அவரது தோளில் கை போட்டு மிஷல் ஒபாமா ஆறுதல் படுத்தினார். அதிபரின் குடும்பத்தினரைப் பார்த்த பார்வையாளர்கள் உணர்ச்சிப்பெருக்கால் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்