முகப்பு > தமிழகம்

​உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் மரணமடைந்ததால் அதிர்ச்சி!

September 24, 2017150 கிலோ உடல் எடையை குறைக்க, அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் மரணம் அடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் நடைமுறையில் சாத்தியமா? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

உடல் எடையை குறைப்பதற்காக, திருவண்ணாமலையை சேர்ந்த 150 கிலோ எடை கொண்ட வளர்மதி என்பவர், கடந்த மாதம் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள லைப் லைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வளர்மதி மட்டுமின்றி அவருடைய மகள்கள் சரஸ்வதி, சங்கீதா மற்றும் மகன் சதீஷ் ஆகியோரும் உடல் பருமனை குறைப்பதற்காக, அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

ஒரே நேரத்தில் ஒரு குடும்பத்திற்கே அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்ததாக, பொதுமக்களிடம் தகவலை பரப்பும் விதத்தில் இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். 

மருத்துவர் ராஜ்குமார் தலைமையிலான குழு இவர்களுக்கு கடந்த மாதம் 26ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சைக்குப்பின், 4 பேரின் உடல் நிலையில் சோர்வும் மயக்க நிலையும் அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் வளர்மதியின் உடல்நிலையில் மட்டும் அடுத்தடுத்த பிரச்சனைகள் ஏற்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.  இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்த வளர்மதி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சிகிச்சை அளித்த மருத்துவமனையின் மருத்துவர் ராஜ்குமாரின் தொடர்புகொண்டு கேட்டபோது, வளர்மதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையில் எந்த பிரச்சனையும் இல்லையென்றும், சுவாசப்பிரச்னையின் காரணத்தினால் தான் அவர் இறந்திருக்கிறார் என்றும் கூறினார்.

இந்நிலையில் வளர்மதின் கணவர் அழகேசன் அளித்த புகாரை அடுத்து, கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

பொதுவாக உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சிக்கூடங்கள், உணவு கட்டுப்பாடுகள் நடைபயிற்சி, சைக்ளிங் போன்றவை சாதாரணமாக மக்களிடையே இருந்துவருகிறது. ஆனால் எடையைக்குறைக்க, அறுவை சிகிச்சை செய்துகொள்வது என்பது, சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களுமே அதிக அளவில் செய்துவருகின்றனர். 

இதை மீறி பொதுமக்கள் இந்த சிகிச்சை முறையை மேற்கொள்வது என்பது, அவர்களுடைய மன தைரியத்தை பொருத்ததே என்கிறார் இயன்முறை மருத்துவர் முருகப்பிரபு.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் இன்றைய தலைமுறையினரிடம் போதுமான விழிப்புணர்வுகள் இருந்தாலும், அதற்கான கால அவகாசத்தையும் உடல் உறுப்புகளுக்கு கொடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். 

வளர்மதி விவகாரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு கேட்டபோது, சம்பவம் குறித்து, தகவல் கோரப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் தவறு செய்திருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவித்திருக்கிறார்.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்