முகப்பு > தமிழகம்

இபிஎஸ், ஓபிஎஸ்க்கு டிடிவி தினகரன் இறுதி எச்சரிக்கை

September 12, 2017தமிழக மக்களின் நலன் கருதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை கலைக்க தாங்கள் தயாராகிவிட்டதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.   

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இன்று அதிமுகவின் பொதுக் குழுவைக் கூட்டியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் கடுமையாக விமர்சித்தார். 

பொதுச் செயலாளர் இல்லாமல் பொதுக் குழுவை கூட்டுவது கட்சி விதிகளின்படி தவறானது என்று கூறிய டிடிவி தினகரன் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மீது இதற்காக தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். 

பதவி இல்லாமல் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தூக்கம் வராது என்று கூறிய டிடிவி தினகரன், தர்மயுத்தம் நடத்துவதாகக் கூறிய ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவிக்காக அதனைக் கைவிட்டுவிட்டதாகக் கூறினார். 

தற்போது தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா காட்டிய வழியில் நடக்கும் ஆட்சியல்ல என்று கூறிய டிடிவி தினகரன், துரோகம், சுயநலம் உள்ளவர்களால் நல்லாட்சியை வழங்க முடியாது என்றார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கலைக்கப்பட வேண்டும் என மக்கள் விரும்பவதாகவும் அவர் கூறினார். 

எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்காவிட்டால் மக்கள் விருப்பப்படி அவரது அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் டிடிவி தினகரன் எச்சரித்தார். 
அதிமுகவை தாங்கள் நிச்சயம் மீட்டெடுப்போம் என்று கூறிய டிடிவி தினகரன், தற்போது உள்ள அரசு கலைக்கப்பட்டாலும் பொதுமக்கள், தொண்டர்கள் ஆதரவுடன் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார்.

இதற்கிடையே சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள சித்தர் முத்துவடுகநாதரின் ஜீவ சமாதி அமைந்துள்ள ஆலயத்திற்கு திடீரென வந்த டிடிவி தினகரன் சிதறு தேங்காய்கள் உடைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.   

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்