முகப்பு > தமிழகம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்!

January 11, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்!


ஜல்லிக்கட்டுக்கான தடையை அகற்ற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாளையங்கோட்டை பேருந்துநிலையம் அருகே கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி, தமிழகத்தில் மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர். 

மதுரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள், காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள், தனியார் கல்லூரி மாணவர்கள் இணைந்து அமைதி பேரணி நடத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற  அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர். 

தொடர்ந்து, கோரிப்பாளையம் பகுதியில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதை அடுத்து, 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். 

இதனிடையே மதுரை மாவட்டம் வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 68 கிராமங்களை சேர்ந்த மக்கள், ஜல்லிகட்டு மீதான தடையை நீக்க கோரி, கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதேபோல் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரக்கோரி, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் திருச்சியில் கண்டனப் பேரணி நடத்தினர். திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த பேரணியின்போது விலங்குகள் நல அமைப்பான பீட்டாவுக்கு எதிராகவும் இளைஞர்கள் கோஷங்களை எழுப்பினர். பேரணியின் போது ஜல்லிக்கட்டு காளையை திடீரென இளைஞர்கள் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்