முகப்பு > தமிழகம்

பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனக் கோரி இளைஞர்கள் பேரணி

January 11, 2017

பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனக் கோரி இளைஞர்கள் பேரணி


ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி மதுரை ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்ற கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி மதுரை அவனியாபுரத்தில் கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையிலிருந்து விமான நிலையம் மற்றும் தூத்துக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கல்லூரி மாணவர்களுடன் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதேபோல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசர சட்டம் கொண்டு வரக் கோரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் திருச்சியில் கண்டனப் பேரணி நடத்தினர். திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த பேரணியின் போது விலங்குகள் நல அமைப்பான பீட்டாவுக்கு எதிராகவும் இளைஞர்கள் 
கோஷங்களை எழுப்பினர். 

தமிழகத்தில் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசர சட்டம் கொண்டுவர வேண்டும், பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டது.

பேரணியின் போது ஜல்லிக்கட்டு காளையை திடீரென இளைஞர்கள் பேரணி நடைபெற்ற இடத்திற்கு கொண்டு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்