முகப்பு > தமிழகம்

இஸ்லாமிய ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்காலத் தடை!

January 11, 2017

இஸ்லாமிய ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்காலத் தடை!


தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் ஹாஜிக்கள் தலாக் விவகாரத்து சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை எனவும், மூன்று முறை தலாக் கூறும் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ், ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு கருத்துக்கள் வழங்க மட்டுமே முடியும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே கவுல், சுந்தேரஷ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இஸ்லாமிய திருமணங்களை ரத்து செய்யும் தலாக் சான்றிதழுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் ஏதும் இல்லை எனவும், தமிழகத்தில் உள்ள ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர். 

மேலும் இது தொடர்பாக அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பும் படியும், நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தார். 

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்