முகப்பு > தமிழகம்

பழைய அங்கன்வாடி பள்ளியை ஹைடெக் அங்கன்வாடி பள்ளியாக மாற்றி இளைஞர்கள் அசத்தல்..!!

August 01, 2017சேலத்தில் சிதிலமடைந்த பழைய அங்கன்வாடி பள்ளியை, ஹைடெக் அங்கன்வாடி பள்ளியாக மாற்றியுள்ளனர் இளைஞர்கள் சிலர்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை, பெரிய எழுத்துக்கார தெருவில் எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளி ஒன்று மிகவும் பழுதடைந்த நிலையில் அலங்கோலமாக காட்சியளித்தது. 

இதனை கண்ட சேலத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தங்கள் செலவில் புனரமைக்க முடிவு செய்து அரசிடம் முறைப்படி அனுமதி பெற்று பழுது பார்க்கும் பணிகளை துவக்கினர். 2 இலட்சத்து 40 ஆயிரம் செலவில், பழுதடைந்த சேலம் செவ்வாய்ப்பேட்டை அங்கன்வாடி பள்ளியை ஹைடெக் அங்கன்வாடி பள்ளியாக, ஒரு தனியார் கிண்டர்கார்டன் பள்ளி போல மாற்றியமைத்து அசத்தியுள்ளனர் இந்த இளைஞர்கள்

குழந்தைகளுக்கான அழகிய வண்ணங்கள் பூசப்பட்டுள்ளன. சமையலறை நவீனமாக்கப்பட்டு புதிய பாத்திரங்கள் வாங்கி தரப்பட்டுள்ளன. குழந்தைகள் விளையாட புல்தரை அமைக்கப்பட்டுள்ளது. கல்விக்கான விளையாட்டு கருவிகள், பொம்மைகள் வாங்கி தரப்பட்டுள்ளது. 

ஆரம்பக் கல்வியை, விளையாட்டுடன் கூடிய ஆரோக்கியத்தை போதிக்கும் இடமாக இந்த அங்கன்வாடி மையத்தை மாற்றியது தங்களுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது என்கிறார் இளைஞர்களை ஒருங்கிணைத்த ஈசன் கார்த்திக்.

எலித்தொல்லை, மழை பெய்தால் தண்ணீர் ஒழுகும் நிலை என்றிருந்த அங்கன்வாடி மையம், இளைஞர்களின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றுள்ளதாகவும், அதனால் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் ஆர்வமுடன் கல்வி கற்று வருவதாகவும் தெரிவிக்கிறார் இதன் பொறுப்பாளர் தாமரைச் செல்வி.

சீரமைக்கப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்தில் விரைவில், மின் இணைப்பு, குடிநீர் வசதி போன்றவற்றை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார் சீரமைப்பணிகளை ஒருங்கிணைத்த செந்தில்குமார்.

சேலம் மாவட்டத்தில் 2826 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருவதாக கூறும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பாலாம்பிகை, அரசின் உதவியை மட்டும் எதிர்பாராமல், தங்களுடைய பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

அடித்தட்டு மக்களின் ஆரம்பக் கல்வி கனவை நனவாக்கும் அங்கன்வாடி மையத்தை சீரமைத்த சேலம் இளைஞர்கள் போன்று பிற பகுதிகளிலும் இது போன்ற முயற்சிகளை இளைஞர்கள் முன்வரவேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.

Categories : தமிழகம் : தமிழகம் , #அங்கன்வாடி

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்