முகப்பு > தமிழகம்

TNPL கிரிக்கெட் : இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தூத்துக்குடி அணி!

August 15, 2017

TNPL கிரிக்கெட்  : இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தூத்துக்குடி அணி!


நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, அரையிறுதியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது சீசன் நடைபெற்றுவருகிறது. இதன் அரையிறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் இன்று மோதின. 

டாஸ் வென்ற சேப்பாக்கம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கோபிநாத் மற்றும் தலைவன் சர்குணம் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 2.3 ஓவரில் தூத்துக்குடி அணியின் முருகானந்தனிடம் கோபிநாத், தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து நிதானமாக விளையாடிய சேப்பாக்கம் அணி, ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறியது.  இந்நிலையில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்த சேப்பாக்கம் அணி 20 ஓவர் முடிவில், 10 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை எடுத்தது.

115 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி களமிறங்கியது. வாஷிங்டன் சுந்தர் மற்றும் கௌஷிக் காந்தி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தை தொடங்கியது முதலே பந்துகளை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட வாஷிங்டன் சுந்தர்,  15 பந்துகளிலேயே 50 ரன்களை கடந்தார். இதன் மூலம் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில், குறைந்த பந்துகளில் 50 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளா சுந்தர். இதனால் அணியின் ரன்கள் 10வது ஓவரிலேயே 90ஐ கடந்தது. இதையடுத்து 12.3வது ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் . இந்த டி.என்.பி.எல் தொடரில், விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள தூத்துக்குடி அணி, இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்