முகப்பு > தமிழகம்

பாஜக அமைச்சரவையில் ​ அதிமுக இணைகிறது ?

September 01, 2017

 பாஜக அமைச்சரவையில் ​ அதிமுக இணைகிறது ?மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜிவ் பிரதாப் ரூடி, ஃபாகன் சிங் குலஸ்தி, உமா பாரதி, மகேந்திர பாண்டே உள்ளிட்டோர் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ராஜினாமாக்களை அடுத்து, மத்திய அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகுமத்திய அமைச்சரவையை பெரிய அளவில் மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், புதிய அமைச்சரவையில் பாஜகவைச் சேர்ந்த புபேந்திர யாதவ், பிரகலாத் ஜோஷி, சுரேஷ் அங்காடி ஆகியோர் இடம் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிதாக சேர்ந்துள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில், ஆர்.சி.பி. சிங், சந்தோஷ் குமார் ஆகிய இருவர் அமைச்சர்களாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில், தரைவழிப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் வசம் ரயில்வே துறை ஒப்படைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ரயில்வே அமைச்சரான சுரேஷ் பிரபுவுக்கு சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

இந்த அமைச்சரவை மாற்றத்தின் முக்கிய நகர்வாக அதிமுக மத்திய பாஜக அமைச்சரவையில் இணையக்கூடும் என்று கூறப்படுகிறது. தற்போது துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை, ஓ.பி.எஸ் தனி அணியாக செயல்பட்டபோது அவருக்கு டெல்லியில் வலதுகரமாக செயல்பட்ட மைத்ரேயன் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவை பதவி வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், அதிமுக எம்.பி. வேணுகோபாலுக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று தம்பிதுரை அமித் ஷாவைச் சந்தித்து பேசியுள்ள நிலையில் இதுபோன்ற தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், நேற்று அதிகாலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்ற அமைச்சர் செங்கோட்டையனிடமும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், இந்தத்தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இன்று மாலை அல்லது நாளை மத்திய அமைச்சரவை மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற செப்டம்பர் 5ம் தேதி முதல் ஹிந்து நம்பிக்கையில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ‘ஷ்ரத்’ என்கிற மூதாதையருக்கு நன்றி செலுத்தும் பிண்டம் கொடுக்கும் நிகழ்வு தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் ஹிந்துக்கள் முக்கிய மாற்றங்கள், கொடுக்கல் வாங்கல், திருமணம் உள்ளிட்டவற்றை செய்யமாட்டார்கள். எனவே, இந்த வாரத்திற்குள் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

Categories : தமிழகம் : தமிழகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்