முகப்பு > விளையாட்டு

“இந்திய அணிக்கு தோனியின் பங்களிப்பு மகத்தானது” : எம்.எஸ்.தோனியை புகழும் யுவராஜ் சிங்

January 10, 2017

“இந்திய அணிக்கு தோனியின் பங்களிப்பு மகத்தானது” : எம்.எஸ்.தோனியை புகழும் யுவராஜ் சிங்


இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள யுவராஜ்சிங், கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள எம்.எஸ்.தோனியை புகழ்ந்து பேசியுள்ளார்.

50 ஓவர் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்துவந்த தோனி, சமீபத்தில் தனது கேப்டன் பதவியினை ராஜினாமா செய்தார். வரும் உலகக் கோப்பை தொடரை இளம் வீரர் ஒருவர் தலைமையில் இந்திய அணி எதிர்கொள்ளும் வகையில் தோனி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பிசிசிஐ இணை செயலாளர் அமிதாப் சவுத்திரியின் அழுத்தம் காரணமாகவே தோனி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நேற்று பஞ்சாப் கிரிக்கெட் அசோஷியேசன் செயலாளர் ஆதித்யா வெர்மா குற்றம்சாட்டியிருந்தார். 

இதனிடையே, நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ள யுவராஜ்சிங், தோனியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் இளம் வீரரான விராட்கோலி தலைமையேற்க தோனி வழிவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார்.

தோனிக்கு முன்பாகவே 2000ம் ஆண்டுகளிலேயே நான் இந்திய அணிக்காக விளையாட தொடங்கியிருந்த போதிலும், 2004ல் களம் கண்ட தோனி தன்னுடன் இணைந்து மிகச்சிறப்பாக பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக யுவராஜ்சிங் புகழ்ந்துள்ளார். இனிவரும் தொடர்களிலும் தங்கள் இருவரும் இணைந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்ததை நினைவுக்கூர்ந்த யுவராஜ் சிங், இரு உலகக் கோப்பைகளை நாட்டுக்காக தோனி வென்றுக்காட்டியுள்ளதாகவும், இத்தகைய சாதனைகளை வேறு எந்த கேப்டனும் செய்ததாக தனக்கு நினைவில்லை என்றும் கூறியுள்ளார்.

Categories : விளையாட்டு : விளையாட்டு

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்