முகப்பு > அரசியல்

அரசியல் குறித்து பேச விரும்பாத நடிகர் ரஜினிகாந்த்!

June 19, 2017

அரசியல் குறித்து பேச விரும்பாத நடிகர் ரஜினிகாந்த்!


அரசியல் குறித்து பேசவிருமபவில்லை என நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியிருப்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடிகர் ரஜினி காந்த் விரைவில் முடிவை அறிவிப்பார் என அவரைச் சந்தித்த பின் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தை, அர்ஜூன் சம்பத் நேரில் சந்தித்துப் பேசினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத், தமிழகத்தில் சீர்கெட்டுள்ள அரசியல் அமைப்பை சரி செய்ய ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என தான் கேட்டுக்கொண்டதாகக் கூறினார். அப்போது, அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்றும், அரசியலுக்கு வருவது குறித்து தான் தீர்க்கமாக யோசித்துக் கொண்டிருப்பதாகவும் ரஜினி கூறியதாக அர்ஜூன் சம்பத் தெரிவித்தார். 

தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த தான் பேருதவியாக நிச்சயம் இருப்பேன் என ரஜினி குறிப்பிட்டதாகவும், நம்பிக்கையை வீணாக்க மாட்டேன் என கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ஆனால் மரியாதை நிமித்தமாகவே இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் தன்னை சந்தித்ததாகவும், சந்திப்பின் போது தான் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடைய அரசியல் வருகை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அரசியல் குறித்து தான் எதுவும் பேச விரும்பவில்லை என அவர் தெரிவித்தார். கடந்த மே மாதம் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களை சந்தித்தப்போது அரசியல் குறித்து அவருடைய கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் போருக்கு எல்லாரும் தயாராக இருங்கள் எனவும் தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் கெட்டுப்போய்விட்டதாகவும் கூறினார். 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என கூறியதால் அவருடைய அரசியல் நிலைப்பாடு குறித்து அவருடைய ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். 

Categories : அரசியல் : அரசியல்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்