முகப்பு > அரசியல்

கேரளாவிற்கு அரசியல் சுற்றுலா மேற்கொண்டுள்ள நடிகர் கமல்ஹாசன்!

September 01, 2017நடிகர் கமல்ஹாசன் கேரள மாநிலத்திற்கு அரசியல் குறித்து தெரிந்து கொள்ள கல்விசுற்றுலா மேற்கொண்டுள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக அவருடைய ட்விட்டர் பக்கத்திலும், அவர் பங்கேற்கும் பொதுநிகழ்ச்சிகளிலும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பரபரப்பான கருத்துக்கள் தெரிவித்துவந்தார். குறிப்பாக ஆளும் அதிமுக அரசை ஊழல் அரசு என மிக கடுமையாக விமர்சித்துவந்தார். 

இந்நிலையில் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டிற்கு சென்றுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்துவருவதாக தெரிவித்தார். ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கேரளாவிற்கு வந்திருந்தாலும், கேரள அரசியல் குறித்து தெரிந்துகொள்ள ஒரு கல்வி சுற்றுலாப்போலவே வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும் கடந்த வருட ஓணம் பண்டிகையை கொண்டாடவே கேரளா வந்திருக்க வேண்டும் என்றும் ஆனால் சிறிய விபத்து ஏற்பட்டதால் வர முடியாத சூழல் இருந்ததாகவும் நடிகர் கமல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடிகர் கமல் விடையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories : அரசியல் : அரசியல்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்