முகப்பு > இந்தியா

உதய் மின் திட்டத்தில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தமிழகம்!

January 09, 2017

உதய் மின் திட்டத்தில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தமிழகம்!


மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இணைந்து கையெழுத்திட்டனர். இதன் மூலம் மின்வாரியத்திற்கு சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசின் மின்தொகுப்பு திட்டமான உதய் திட்டத்தில் இணைவது தொடர்பாக, மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இரண்டு தரப்புக்கு இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டத்தை அடுத்து உதய் திட்டத்தில் 21 மாநிலமாக தமிழகம் இன்று இணைந்துள்ளது. 

உதய் திட்டத்தில் இணைந்ததன் மூலம் தமிழக மின்வாரியத்திற்கு நிதிச் சுமையும் குறையும் என்று எதிர்பார்பார்க்கப்படுகிறது. மேலும் மின்வாரியத்தின் கடனை அடைப்பதில் உதய் திட்டம் தமிழகத்திற்கு பெரும் உதவிகரமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில் உதய் திட்டத்தில் இணைவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி,  நிலக்கரி இறக்குமதி கொள்கையில் தேவையான மாற்றங்கள் செய்து, தமிழக அனல் மின் நிலையங்களுக்கு போதிய  நிலக்கரி கிடைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

நாடு முழுவதும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்ற இலக்கை நிறைவேற்றவே உதய் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியதாக மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார். தமிழகத்தில் மின்சார உற்பத்தியை அதிகரிக்கவும் மின் கட்டணத்தை கட்டுக்குள் வைக்கவும் உதய் திட்டம் உதவிகரமாக இருக்கும் என்றும் பியூஸ் கோயல் கூறினார்.

உதய் திட்டத்தில் இணைவதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி குறைந்த விலையில் கிடைக்கும் என்றும், மின்வாரியத்திற்கு சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்