முகப்பு > இந்தியா

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் நியமன ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

January 09, 2017

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் நியமன ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு


டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக 11 பேரை தமிழக அரசு நியமித்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன், பாமகவின் பாலு உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. 

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹார் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. 

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, உரிய விதிமுறைகளின்படியே டிஎன்பிஎஸ்சி 11 அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதைக்கேட்ட தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹார், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் நியமித்ததில் விதிமீறல் நடந்துள்ளதால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என உத்தரவிட்டனர். 

இந்த நியமனத்துக்கு தகுதியில்லாதவர்களை நியமித்ததுடன், உரிய விளம்பரம் செய்யப்படாமல் ஒரே முறையில் நியமித்தது தவறானது எனவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மாநில நலனை பாதிக்கும் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு கண்டனத்துக்குரியது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை 11 பேரையும் தற்காலிகமாக பதவியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்கிற தமிழக அரசின் கோரிக்கையையும் நிராகரித்த நீதிபதிகள், புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும்போது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமமூர்த்தி மீண்டும் விண்ணப்பிக்கக்கூடாது என்று தங்களது உத்தரவில் கூறினர்.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்