முகப்பு > இந்தியா

விறுவிறுப்பாக நடைப்பெற்றுவரும் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு!

July 17, 2017

விறுவிறுப்பாக நடைப்பெற்றுவரும் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு!


நாட்டின் 14வது குடியரசு தலைவருக்கான தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சபாநாயகர் மற்றும் பிரதமர், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மத்திய அமைச்சர்கள் வெங்கய்யா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் வாக்களித்தனர். அதே போல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூனா கார்கே உளிட்டோரும் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களில் 232 பேர் தங்களது வாக்குகளை அளித்தனர். மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கேரளாவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோரும் சென்னையில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். திமுக தலைவர் கருணாநிதி, இந்த தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்யவில்லை. உடல் நலக் குறைவு காரணமாக அவரால் வாக்களிக்க இயலாது என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இருந்தபோதிலும், சென்னையில் வாக்களிக்க இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உட்பட அனைவரும் வாக்களித்துவிட்டதால், வாக்குப்பதிவு நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் இருக்கும் கமிட்டி ஹாலில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காலை 10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அதைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி வாக்களித்தார். அதனை தொடர்ந்து காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

நாட்டின் மிகப்பெரும் மாநிலமான பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் உமா பாரதி ஆகியோர் வாக்களித்தனர். உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இதேபோல் மத்தியபிரதேசத்தில் சட்டசபை வளாகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலையொட்டி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் தனது வாக்கை செலுத்தினார். இந்நிலையில் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ்வாதி கட்சித்தலைவர் மாயாவதி குடியரசுத் தலைவராக யார் வெற்றி பெறப்போகிறார் என்பது முக்கியமில்லை, யாராக இருந்தாலும் அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதே மகிழ்ச்சியான விஷயம் எனக் கூறினார்.  

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்