முகப்பு > இந்தியா

​மாட்டின் ’பஞ்சகவ்யத்தை’ ஆராய ஆர்.எஸ்.எஸ் அடங்கிய தேசிய குழு!

July 17, 2017

​மாட்டின் ’பஞ்சகவ்யத்தை’ ஆராய ஆர்.எஸ்.எஸ் அடங்கிய தேசிய குழு!மாட்டுக்கறி சர்ச்சை, ’பசு பாதுகாவலர்கள்’ என்ற பெயரில் மாட்டுக்குண்டர்கள் நடத்தும் தாக்குதல்கள் காரணமாக நாடு முழுவதும் வன்முறைகளும் சர்ச்சைகளும் அரங்கேறி வருகின்றன. பிரதமர் மோடியே பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ‘மாட்டுக் குண்டர்கள்’ பற்றி கருத்து தெரிவிக்கும் அளவிற்கு பிரச்னை தேசம் முழுவதும் பரவி வருகிறது. மாடுகளின் பலன்கள் பற்றியும், பராமரிப்பு பற்றியும் பொருளாதார ரீதியில் விவாதங்கள் நடந்து வருகிறது. 

மாட்டிலிருந்து கிடைக்கும் சிறுநீர் (கோமியம்), சாணம், பால், பாலிலிருந்து கிடைக்கும்  தயிர், நெய் ஆகியவற்றின் மூலம் பஞ்சகவ்யம் தயாரிக்கப்படுகிறது. இந்து மதத்தினர் இந்த பஞ்சகவ்யம் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்துக்களின் பூஜையில் பயன்படுத்தப்படும் இந்த ‘பஞ்சகவ்யம்’ பற்றியும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் பல குறிப்புகள் சொல்லப்படுகின்றன. 

இந்நிலையில், மாட்டின் பயன்கள் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் மாட்டிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்யம் பற்றி ஆராய தேசிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமை வகிப்பார். மேலும், இந்த குழுவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மரபுசாரா ஆற்றல் ஆகிய அமைச்சரவையின் செயலாளர்களும் டெல்லி ஐ.ஐ.டி அறிவியல் ஆராய்ச்சி துறை இயக்குநர் ஆர்.ஏ.மஷேல்கர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், இந்த குழுவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அறிவியல் பிரிவான ‘விக்யன் பார்தி’ அமைப்பின் தலைவர் விஜய் பட்கர், ஆர்.எஸ்.எஸ்-ன் கிளை அமைப்பான விஷ்வ ஹிந்த் பரிஷத்தின் பொதுச்செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் விஜய் பட்கர் நளந்தா பல்கலையின் வேந்தர் என்பது, இந்தியாவின் சூப்பர் கம்யூட்டரான ‘பரம்’ வகையை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ‘பஞ்சகவ்யத்தின்’ பலன்கள், விவசாய வளர்ச்சிக்கான சாத்தியங்கள் என பல்வேறு மட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளது.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்