முகப்பு > இந்தியா

மும்பை - அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டம் தொடக்கம்!

September 14, 2017

மும்பை - அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டம் தொடக்கம்!


மும்பை - அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் சின்சோ அபே ஆகியோர் அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

மகாராஷ்டிர தலைநகர் மும்பை முதல் குஜராத்தின் அகமதாபாத் வரை புல்லட் ரயில் பாதை அமைத்து ரயில்கள் இயக்கும் திட்டம் ஜப்பான் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் சின்சோ அபே ஆகியோர் அடிக்கல் நாட்டி புல்லட் ரயில் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தனர். 

508 கிலோமீட்டர் தொலைவுக்கான புல்லட் ரயில் திட்டம் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. திட்டமதிப்பீட்டில் 81விழுக்காட்டை ஜப்பான் வழங்குகிறது. இதை மிகக் குறைந்த வட்டிவீதத்தில் அடுத்த ஐம்பதாண்டுகளில் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டும். 92% பாதை உயர்மட்டப் பாலத்திலும் 6% பாதை குகை வழியாகவும் 2% பாதை தரையிலும் அமையும்.

புல்லட் ரயில் சராசரியாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்திலும் அதிகப்பட்சம் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லும். இந்தத் திட்டத்தில் நாட்டிலேயே மிக நீளமான குகைப்பாதை 21கிலோமீட்டர் நீளத்துக்குக் கடலுக்கடியில் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்பட்டு 2022ஆம் ஆண்டு புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்