முகப்பு > இந்தியா

போர் வந்தால் 20 நாட்களில் வெடிபொருள் தீர்ந்துவிடும்? - தடங்கல் ஏற்பட்டால் அவசர நடவடிக்கை - நிர்மலா விளக்கம்!

September 12, 2017

போர் வந்தால் 20 நாட்களில் வெடிபொருள் தீர்ந்துவிடும்? - தடங்கல் ஏற்பட்டால் அவசர நடவடிக்கை - நிர்மலா விளக்கம்!


இந்திய ராணுவத்துக்கான வெடிபொருட்கள் கொள்முதல் குறித்து சிஏஜி சமர்ப்பித்த அறிக்கை தவறானது என தாம் கூறவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

“முழுவீச்சில் போர் ஏற்பட்டால் 20 நாள்களுக்குள்  இந்திய ராணுவத்திடம் உள்ள வெடிபொருள்கள் தீர்ந்துவிடும் என சிஏஜி-யின் அறிக்கை அளித்திருந்தது. இந்த அறிக்கை தவறானது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், இந்திய ராணுவத்துக்கான வெடிபொருள் கொள்முதல் குறித்து மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) சமர்ப்பித்த அறிக்கை தவறானது என்று கூறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவின் வியூகம் குறித்து கட்சியின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த மாநிலத் தலைநகர் காந்தி நகருக்கு வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“ராஜஸ்தான் மாநிலம், பார்மர் நகருக்கு நான் ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தபோது, இந்திய ராணுவத்துக்கு வெடிபொருள்கள் வாங்குவதில் உள்ள குறைபாடு பற்றி என்னிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நான், "வெடிபொருள்களும், தளவாடங்களும் வாங்குவது தொடர்ச்சியாக நடைபெறும் செயல்முறையாகும். அந்தத் தொடர் நடவடிக்கையில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால், அந்தத் தடங்கல் அவசரக்கால அடிப்படையில் சரிசெய்ப்படும்' என்று பதிலளித்தேன். "முழுவீச்சில் போர் ஏற்பட்டால் 20 நாள்களுக்குள் தீர்ந்துவிடும் அளவுக்குத்தான் இந்திய ராணுவத்திடம் வெடிபொருள்கள் உள்ளன' என்ற சிஏஜி-யின் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியதும் உண்மைதான். ஆனால், அப்போது மேலும் பல கேள்விகளும் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளுக்குத்தான் நான் இவ்வாறு பதிலளித்தேன். எனினும், நான் சிஏஜி அறிக்கையே தவறு என்று கூறியதாக ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியாகியுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். என்னுடைய எந்தப் பதிலிலும் நான் சிஏஜி குறித்து குறிப்பிடவேயில்லை” என்றார் நிர்மலா சீதாராமன்.

Categories : இந்தியா : இந்தியா

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்