முகப்பு > வணிகம்

கார்கள் மீது 2 முதல் 7 சதவீத கூடுதல் ஜிஎஸ்டி செஸ் வரி விதிக்க மத்திய அரசு முடிவு

September 10, 2017

கார்கள் மீது 2 முதல் 7 சதவீத கூடுதல் ஜிஎஸ்டி செஸ் வரி விதிக்க மத்திய அரசு முடிவு


கார்கள் மீது ஜிஎஸ்டி செஸ் வரிகளை கூடுதலாக விதிக்க, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நேற்று நடந்த ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 21வது கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்.யு.வி. உயர் ரக கார்களுக்கு கூடுதலாக 7 சதவீதம் செஸ் வரி விதிக்கப்படுகிறது. 

பெரிய கார்களுக்கு 5 சதவீத செஸ் வரியும், நடுத்தர கார்களுக்கு கூடுதலாக 2 சதவீத செஸ் வரியும் விதிக்கப்படவுள்ளது. எனினும் 1200 CCக்கு குறைவான திறன்கொண்ட சிறிய ரக பெட்ரோல், டீசல் கார்கள் மீது கூடுதல் வரி எதுவும் விதிக்கப்படவில்லை. 

மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில், ஜிஎஸ்டி அமலான முதல் 5 ஆண்டுகளுக்கு செஸ் வரி விதிக்க, ஜிஎஸ்டி சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, இட்லி, தோசை மாவு, புளி, ரெயின் கோட், கேஸ் லைட்டர் உட்பட 30 விதமான பொருட்கள் மீதான வரியை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 10ம் தேதி வரை நீட்டிப்பது என்றும், ஜிஎஸ்டியால் ஏற்படும் பாதகங்களை கண்காணிக்க அமைச்சர்கள் குழுவை அமைக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்