முகப்பு > அரசியல்

​சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தை கைப்பற்ற அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்கள் முயற்சி

January 01, 2017

​சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தை கைப்பற்ற அகிலேஷ் யாதவ் ஆதரவாளர்கள் முயற்சி


சமாஜ்வாதி கட்சியில் உள்கட்சிப் பூசல் அதிகரித்துள்ளதை அடுத்து, அகிலேஷ் யாதவ் மற்றும் சிவ்பால் யாதவ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச முதலமைச்சரான அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவராக இன்று தேர்வு  செய்யப்பட்டார். அக்கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத் தலைவர் சிவ்பால் யாதவ் ஆகியோருக்கு எதிராக, லக்னோவில் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம் கோபால் யாதவ் கூட்டியிருந்த இக்கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவராக முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், ஷிவ்பால் யாதவ், அமர் சிங் ஆகிய இருவரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கவும் தேசிய செயற்குழு கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.

இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உரை நிகழ்த்திய அகிலேஷ் யாதவ், கட்சியின் தேசிய தலைவராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தமது தலைவர் தனது தந்தை முலாயம் சிங் யாதவ் தான் எனக் கூறினார். முலாயம் சிங் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் நலனுக்கு எதிராக சதி நடப்பதாகக் கூறிய அகிலேஷ் யாதவ், இந்த தருணத்தில் கட்சியையும், தனது தந்தையையும் பாதுகாக்க எந்த முடிவையும் எடுக்க தயங்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார். 

சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் தலைநகர் லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்த சிவ்பால் யாதவின் பெயர்பலகையையும் அவர்கள் அகற்றினர். 

இதனால், அகிலேஷ் ஆதரவாளர்களுக்கும், சிவ்பால் யாதவ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதனையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். கட்சி அலுவலகம் முன்பாக கூடியுள்ள தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பியும், இசைக் கருவிகளை வாசித்தும் வருகின்றனர். இதனால், அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. 

Categories : அரசியல் : அரசியல்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்