முகப்பு > உலகம்

​அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்தால் மெக்ஸிகோ மக்களுக்கு பாதிப்பு?

January 03, 2017

​அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்தால் மெக்ஸிகோ மக்களுக்கு பாதிப்பு?


அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்ட ட்ரம்ப் மெக்சிகோவுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தினால் அங்கு ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மெக்சிகோவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் அகதிகளாக நுழைந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மெக்சிகோவில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்பும் பண உதவியால் ஏராளமான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. வாகனங்கள் வாங்கிப் பயன்படுத்துதல், வீடு கட்டுதல் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் அகதிகள் நுழைவதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதற்காக இரு நாட்டு எல்லையில் சுவர் எழுப்பவேண்டும் என்றும், அதற்கான செலவுகளை மெக்சிகோ அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். 

எல்லையில் சுவர் எழுப்புவதற்கு மெக்சிகோ அரசு நிதி அளிக்காவிட்டால், அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்து பணம் சம்பாதித்து மெக்சிகோவுக்கு அனுப்புவது தடை செய்யப்படும் என்றும் எச்சரித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவுக்கு பணம் அனுப்புவது முற்றிலும் தடைபடும் என அஞ்சப்படுகிறது. இது மெக்ஸிகோ பொருளாதாரத்தைப் பாதிக்கும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

இருப்பினும், தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப், மெக்சிகோ நாட்டவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதில்லை எனத் தெரிகிறது. அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம் குறித்து அவரது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் படி, புதிதாக 10 விதிகள் நடைமுறைப்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதில் மெக்சிகோ மக்கள் கவலைப்படும் அளவுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்