முகப்பு > அரசியல்

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியலில் தனது பயணம் இருக்கும் என தீபா பேட்டி!

January 07, 2017

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியலில் தனது பயணம் இருக்கும் என தீபா பேட்டி!


மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியலில் தனது பயணம் இருக்கும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

ஜெயலலிதா மரணமடைந்த நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக வி.கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

மேலும் தீபாவே அதிமுகவின் பொதுச் செயலாளராக வேண்டும் எனவும் அவர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக வேண்டும் எனவும் அதிமுக தொண்டர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தீபா ஜெயக்குமார் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் அவர் புதிய கட்சியை தொடங்குவாரா அல்லது வேறு ஏதேனும் கட்சியில் இணைவாரா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் இன்று சென்னையில் தனது வீட்டில் வைத்து தீபா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, மக்களுக்கான பணியை தொடர காத்திருப்பதாகவும் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்றும், ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி பயணம் தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் ஜெயலலிதாவின் பேரையும் புகழையும் காக்க வேண்டிய கடமை அவருக்கு இருப்பதாகவும், விரைவில் தீர்க்கமான முடிவுகளையும் விளக்கங்களையும் அறிவிக்க இருப்பதாகவும் கூறினார். ஜெயலலிதா மீது தொண்டர்கள், மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, மரியாதையை புரிந்துகொள்ள முடிவதாகவும் மக்கள் விருப்பத்திற்காகதான் அனைத்தும் நடந்து வருவதாகவும், மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரவிருப்பதாகவும் கூறினார்.

மேலும் சசிகலாவை எதிர்த்து போட்டியிடும் எண்ணம் எதும் இல்லை என்றும் மக்கள் மற்றும் தொண்டர்களிடம் கலந்து ஆலோசித்து எதிர்கால முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்