இன்றைய வானிலை

  • 34 °C / 94 °F

Jallikattu Game

“பியாதிலெத்கா அல்லது ஐந்தாண்டு திட்டம்!” : ஜவஹர்லால் நேரு

November 14, 2017
Image

ஜவஹர்லால் நேரு

முன்னாள் பிரதமர்

Image

இந்தியாவின் முதல் பிரதமரும், நாட்டின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவருமான ஜவஹர்லால் நேரு, தான் வாழ்ந்த சமகாலத்தின் பல்வேறு நிகழ்வுகளையும் பதிவு செய்தவர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களை மட்டுமல்லாது, அண்டை நாடுகளின் நிகழ்வுகளையும் கூர்ந்து நோக்கியவர். அதனை தனது எளிய எழுத்தின் மூலம் பதிவு செய்தவர். 1933 ஜூலை 9-ல் நேரு எழுதிய “தி பியாதிலெக்கா அல்லது ஐந்தாண்டு திட்டம்” எனும் இக்கட்டுரை  உலக விவகாரங்களில் நேருவின் பரீட்சயத்தை எடுத்துக்காட்டும் வகையில் தமிழாக்கம் செய்து வெளியிடப்படுகிறது. 

ரஷ்யாவின் ஐந்தாண்டு திட்டம் உருவான காலகட்டம், அதன் வளர்ச்சி மற்றும் போராட்டங்களையும், சோதனை-சாதனையையும் பதிவு செய்யும் இக்கட்டுரை, புரட்சியாளர்கள் டிராட்ஸ்கி-ஸ்டாலின் இடையிலான கருத்தியல் போராட்டம் குறித்தும், அதன் பரிணாமங்கள் குறித்தும் கூர்மையாக பதிவு செய்துள்ளது. “The glimpse of world history” நூலில் இடம்பெற்றுள்ள இக்கட்டுரையை காலத்தின் தேவைக்கருதி ராஜசங்கீதன் தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார்.

*****

வாழ்ந்த வரை சோவியத் ரஷியாவின் தன்னிகரற்ற தலைவராக திகழ்ந்தவர் லெனின். கட்சிக்குள் என்ன பிரச்சினை வந்தாலும் அவரது வார்த்தைதான் இறுதியானது. எல்லோரும் அவர் வார்த்தைக்கு கட்டுப்படுவார்கள். அவரின் இறப்புக்கு பிறகுதான் குழப்பம் ஏற்பட்டது. தலைமை பொறுப்பு ஏற்க கொள்கை முரண்பாடு கொண்ட குழுக்களிடையே மோதல் எழுந்தது. வெளியுலகத்துக்கும் சரி, ரஷியாவில் குறிப்பிட்ட அளவுக்கும் சரி லெனினுக்கு பிறகான ஆளுமையாக அறியப்பட்டவர் ட்ராட்ஸ்கி. அக்டோபர் புரட்சியில் தலைமை பொறுப்பு தாங்கியவர் ட்ராட்ஸ்கிதான். பல இடர்களை தாண்டி அவர் உருவாக்கிய செஞ்சேனையின் உதவியால்தான் உள்நாட்டுப்போரில் தலையிட முயன்ற அந்நிய சக்திகளை தடுக்க முடிந்தது. ட்ராட்ஸ்கி போல்ஷ்விக் கட்சிக்கு புதியவர் என்பதால், லெனினை தவிர மற்ற எவரும் அவரை நம்பவில்லை. விரும்பவும் இல்லை. பின்னாளில் ஸ்டாலின், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரானார். ட்ராட்ஸ்கிக்கும் ஸ்டாலினுக்கும் ஆகவே ஆகாது. ஒருவரையொருவர் கடுமையாக வெறுத்தனர். 


ட்ராட்ஸ்கி ஒரு நல்ல எழுத்தாளர் மற்றும் நல்ல பேச்சாளர். சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தவர். எல்லா காரியங்களிலும் தானும் நேரடியாக பங்கெடுத்து செயல்பட்டவர். அறிவுக்கூர்மை கொண்டவர். புரட்சிக்கான கருத்தியல்களை உருவாக்கும் வல்லமை படைத்தவர். விவாதங்களில் சாட்டைகளாகவும் தேள்களாகவும் எதிரிகளை தாக்கும் வகையில் தன் வாதங்களை வைப்பவர். ஸ்டாலின் ஒரு சராசரி மனிதர். அமைதியானவர். திணிப்பு வேலை செய்யாதவர். அறிவார்ந்த தளத்தில் இயங்காதவர். ஆனால் அவரும் சிறந்த ஒருங்கிணைப்பாளர். திறமை வாய்ந்த போராளி. உறுதியான லட்சிய வேட்கை கொண்டவர். பிற்காலத்தில் எஃகு போல் உறுதியானவர் என பெயரெடுத்தவர். ட்ராட்ஸ்கி போற்றப்பட்டாலும் ஸ்டாலினால்தான் நம்பிக்கையை பெற முடிந்தது. ஜார்ஜிய விவசாயக்குடும்பம் ஒன்றில் பிறந்து, வெகுமக்களின் பிரதிபலிப்போடு திகழ்ந்தவர். இந்த இருபெரும் ஆளுமைகளுக்கும் இடையே கடும் போட்டி கம்யூனிஸ்ட் கட்சியில் நிலவியது.


ஸ்டாலினுக்கும் ட்ராட்ஸ்கியும் இடையேயான மோதல் தனிப்பட்ட காரணத்துக்காக இருந்தாலும், அதை தாண்டியும் மோதல் வளர்ந்தது. இருவரும் இருவகை கொள்கைகளை கொண்டிருந்தனர். புரட்சியை வென்றெடுக்க வேறுபட்ட வழிகளை இருவரும் கொண்டிருந்தனர். புரட்சிக்கு பல காலத்துக்கு முன்னமே, ‘நிரந்தர புரட்சி’ என்ற கருத்தியலை ட்ராட்ஸ்கி உருவாக்கி இருந்தார். அவரை பொறுத்தவரை ஒரு நாட்டில் மட்டும் புரட்சி செய்தால் சோஷலிசத்தை அடைய முடியாது. உலக புரட்சியின் மூலம் மட்டும்தான் முழு சோஷலிசத்தை நிறுவி, தொழிலாளர் வர்க்கத்துக்கு நியாயத்தை ஏற்படுத்த முடியும். பொருளாதார வளர்ச்சி கட்டங்களில் முதலாளித்துவத்துக்கு அடுத்தது சோஷலிசம். முதலாளித்துவம் உலகமயமாகுகையில், அது உடையத் துவங்கும். இன்று நாம் உலகின் பெரும்பகுதியில் காண்பதும் இதைத்தான். சோஷலிசத்தால் மட்டும்தான் இந்த உலகமய சட்டகத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். அப்படித்தான் சோஷலிசம் தவிர்க்க முடியாததாகிறது என்பதுதான் மார்க்ஸிய கருத்தியல். அதே நேரம், சோஷலிசத்தை உலகளவில் உருவாக்காமல் ஒரு நாட்டில் மட்டும் உருவாக்கினால் அது பொருளாதார வளர்ச்சி கட்டங்களில் கீழ்நோக்கி போவதாகிவிடும். 


சோஷலிச வளர்ச்சியை உள்ளடக்கிய எல்லா வளர்ச்சிகளுக்கும் சர்வதேசியம்தான் சரியான அடிப்படையாக இருக்க முடியும். அப்போதுதான் சர்வதேசியத்தில் இருந்து மீண்டும் பழைய பாணிக்கு போவதென்பது சாத்தியமில்லாத விஷயமாக ஆக்க முடியும். அதனால்தான் சோவியத் யூனியன் போன்ற தனி நாட்டில் கூட சோஷலிசத்தை நிறுவுவதென்பது பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை என்கிறார் ட்ராட்ஸ்கி. தொழில் நாடுகள் இருக்கும் மேற்கு ஐரோப்பாவை சோவியத் மக்களின் வாழ்க்கை பெருமளவுக்கு சார்ந்திருந்தது; நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையில் இருக்கும் சார்பை போல. மேற்கத்திய நாடுகளை நகரம் என கொண்டால் ரஷியா பெருமளவுக்கு கிராம வாழ்க்கையை கொண்டது. அரசியல்ரீதியாகவுமே முதலாளித்துவ உலகச்சூழலில் சோஷலிச நாடு அதிக நாட்களுக்கு நீடிக்க முடியாது என ட்ராட்ஸ்கி நம்பினார். முதலாளித்துவமும் சோஷலிசமும் எந்தளவுக்கு பொருந்தாதவை என்பதை நாமும் பார்த்துவிட்டோம். ஒன்று, முதலாளித்துவ நாடுகள் சோஷலிச நாட்டை உடைத்துவிடும். அல்லது மற்ற நாடுகளில் புரட்சி வெடித்து சோஷலிசம் எல்லா இடங்களில் நிறுவப்படும். ஆனால், கொஞ்ச காலத்துக்கு இரண்டு உற்பத்தி முறைகளும் ஒன்றுக்கொன்று முரணாக சமநிலையற்று இருக்கவே செய்யும்.


புரட்சிக்கு முன்னும் பிறகும் போல்ஷ்விக் தலைவர்கள் பலருக்கும் இதுவே கருத்தாக இருந்தது. அவர்கள் உலக புரட்சிக்கு காத்திருந்தனர். குறைந்தபட்சம் ஐரோப்பிய நாடுகளிலேனும் புரட்சிகள் தோன்றும் என எதிர்பார்த்திருந்தனர். பல மாதங்களுக்கு ஐரோப்பாவில் புரட்சிக்கான இடிமுழக்கங்கள் கேட்டன. ஆனால் வெடிக்காமலேயே அப்புயல் கரை கடந்தது. ரஷியா தன் புதிய பொருளாதார கொள்கையுடனும் ஓரளவுக்கு சுவாரஸ்யமான வாழ்க்கையுடனும் இயங்க ஆரம்பித்தது. உலகப்புரட்சியை நிர்ப்பந்திக்கும் தீவிர கொள்கைகள் உருவாக்கப்படவில்லையெனில் வென்றெடுத்த புரட்சி நீடிக்காது என எச்சரிக்கை விடுத்தார் ட்ராட்ஸ்கி. இது மிகப்பெரும் மோதலை ஸ்டாலினுக்கும் ட்ராட்ஸ்கிக்கும் இடையே உருவாக்கியது. பல ஆண்டுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மோதல் நீடித்தது. கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்ததால் மோதலில் ஸ்டாலினே வென்றார். ட்ராட்ஸ்கியும் அவரின் ஆதரவாளர்களும் புரட்சிக்கு எதிரானவர்களாக நடத்தப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ட்ராட்ஸ்கிதான் முதலில் சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டார். பின், நாடு கடத்தப்பட்டார்.


விவசாயிகளை சோஷலிசத்துக்கு வென்றெடுக்க ஸ்டாலின் அறிவித்த விவசாயக் கொள்கைதான் ட்ராட்ஸ்கியுடனான மோதலுக்கு வித்திட்டது. ரஷ்யாவில் சோஷலிசத்தை நிறுவ, அறிவிக்கப்பட்ட கொள்கை இது. மற்ற நாடுகளின் சூழல் பொருட்படுத்தப்படவில்லை. ஆனால், ட்ராட்ஸ்கி ஸ்டாலினின் முடிவை நிராகரித்தார். விவசாயிகளை சோஷலிசத்துக்கு வென்றெடுக்க, அவர் சொன்ன “நிரந்தர புரட்சி”யால் மட்டுமே சாத்தியம் என்றார். சொல்லப்போனால், ட்ராட்ஸ்கியின் பல யோசனைகளை ஸ்டாலின் செயல்படுத்தவே செய்தார். ஆனால் அவற்றை ஸ்டாலின் தன் வழியில் செயல்படுத்தினார். இதை சுட்டிக்காட்டும் ட்ராட்ஸ்கி, தன் சுயசரிதையில், “அரசியலில் ‘எதை’ என்பதைவிட, ‘யாரால்’, ‘எப்படி’ என்பவையே ஒரு விஷயம் சரியாக செயல்படுத்தப்படுவதை தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன” என்கிறார்.


ஆக, இரண்டு பெரும் ஆளுமைகளுக்கு இடையிலான போர் ஓய்ந்தது. வீரம் மற்றும் அறிவுசெறிந்த பங்காற்றிய ட்ராட்ஸ்கி மேடையிலிருந்து தள்ளி விடப்பட்டார். தான் கட்டியெழுப்பிய சோவியத் யூனியனை விட்டு ட்ராட்ஸ்கி வெளியேற்றப்பட்டார். கிட்டத்தட்ட எல்லா முதலாளித்துவ நாடுகளும் ட்ராட்ஸ்கி போன்ற ஆளுமைக்கு அஞ்சி, அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தன. இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் அவரை ஏற்க மறுத்தன. கடைசியில் துருக்கியின் சிறிய தீவான பிரிங்கிப்போவில் (Prinkipo) தற்காலிக அடைக்கலம் கிடைத்தது. தன்னை எழுத்துக்கு அர்ப்பணித்துகொண்டு, History of the Russion Revolution என்ற ஆகச்சிறந்த படைப்பை கொடுத்தார். ஸ்டாலின் மீதான வெறுப்பு மட்டும் ட்ராட்ஸ்கியை விட்டு நீங்கவே இல்லை. தொடர்ந்து விமர்சித்துக்கொண்டும் தன் கடுமொழியால் தாக்கிக்கொண்டும்தான் இருந்தார். உலகின் சில இடங்களில் ட்ராட்ஸ்கிய கட்சிகள் உருவாகின. சோவியத் அரசையும் அகிலம் முன்மொழிந்த அதிகாரப்பூர்வமான கம்யூனிசத்தையும் அவை எதிர்த்தன.


ட்ராட்ஸ்கியை அப்புறப்படுத்தியபிறகு, விவசாயக் கொள்கையை தீவிரத்துடனும் அபரிமிதமான துணிவுடனும் அமல்படுத்தினார் ஸ்டாலின். கடினமான சூழலை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அறிவார்ந்தவர்கள் மத்தியில் துயரமும் வேலையின்மையும் நிலவியது. தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டங்களையும் நடத்தினர். Kulak-குகள் எனப்படும் பணக்கார விவசாயிகளுக்கு அதிகமாக வரி விதித்தார் ஸ்டாலின். அதில் கிடைத்த பணத்தை கொண்டு கிராமப்புற கூட்டுறவு பண்ணைகளை அமைத்தார். விவசாயிகள் ஏராளமானோர் இந்த கூட்டுறவு பண்ணையில் ஒன்றிணைந்து பணியாற்றி, கிடைத்த லாபத்தை பகிர்ந்துகொண்டனர். குலக்குகளுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் இந்த கொள்கை கோபமூட்டியது. அவர்கள் சோவியத் அரசிடம் கடும் கோபம் கொண்டனர். அவர்களின் கால்நடைகளும் விவசாயப்பொருட்களும் அண்டையில் வசித்த ஏழைகளுடன் வாழ்வாதாரத்துடன் இணைக்கப்பட்டுவிடுமோ என அஞ்சினர். அதனாலேயே தங்களின் கால்நடைகளை அவர்கள் அழிக்கவும் செய்தனர். இந்த அழிப்பு மிக அதிகமாக இருந்ததால் அடுத்த வருடத்தில் உணவுப்பொருட்களுக்கும், கறிக்கும், பால் பொருட்களுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டது.


ஸ்டாலினுக்கு இது எதிர்பாராத அடியாக இருந்தது. ஆனாலும் அவரின் திட்டத்தில் அவர் விடாப்பிடியாக இருந்தார். அத்திட்டத்தை இன்னும் வலுவான திட்டமாக மேம்படுத்தி மொத்த நாட்டின் விவசாயத்துக்கும் தொழிலுக்கும் அதை விரிவுபடுத்தினார். அரசுப்பண்ணைகள் மற்றும் கூட்டுறவு பண்ணைகளின் உதவியுடன் தொழில்துறைக்கு நெருக்கமாக விவசாயி கொண்டுவரப்படவிருந்தான். பெரிய தொழிற்சாலைகளும் நீர் மின்சார அமைப்புகளும், சுரங்கங்களும் உருவாக்கப்பட்டு மொத்த நாடும் தொழில்மயமாக்கப்படவிருந்தது. கல்வி, அறிவியல், கூட்டுறவு வாங்கல் மற்றும் விற்றல், பல லட்ச தொழிலாளர்களுக்கான வீடு கட்டுமானம் மற்றும் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்த்துவது போன்ற வேலைகளும் கூடவே மேற்கொள்ளப்படவிருந்தன. இதுதான் பிரசித்தி பெற்ற, ‘ஐந்தாண்டு திட்டம்’ ஆகும். ரஷியர்கள் அழைத்த ‘பியாதிலெத்கா’ (Piatiletka) இதுதான். முன்னேறிய பணக்கார நாடுகளுக்கும் கடினமாக இருக்கக்கூடிய மாபெரும் லட்சியப்பூர்வ திட்டமாகும். பின்தங்கிய ஏழை நாடான ரஷியா இத்திட்டத்தை முயற்சிப்பது முட்டாள்தனத்தின் உச்சமாக பார்க்கப்பட்டது.


அதிக கவனம் மற்றும் ஆராய்ச்சிக்கும் பிறகே இந்த ஐந்தாண்டு கால திட்டம் வடிவமைக்கப்பட்டது. மொத்த நாடும் பல பொறியியலாளர்களாலும் பல அறிவியலாளர்களாலும் இன்னும் பல நிபுணர்களாலும் ஆய்வு செய்யப்பட்டு திட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் மற்ற பகுதிகளுடன் பொருந்தும் வகையில் விவாதிக்கப்பட்டிருந்தது. மூலப்பொருட்கள் இல்லாமல் பெரிய தொழிற்சாலை அமைக்கப்படுவதில் அர்த்தம் இருக்கவில்லை. அப்படியே மூலப்பொருட்கள் இருப்பினும் அவை தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு போக்குவரத்து சிக்கல் தீர்க்கப்பட வேண்டும். ரயில் பாதைகள் கட்டப்பட வேண்டியிருந்தது. ரயில்கள் இயங்க வேண்டுமெனில் நிலக்கரி சுரங்கங்கள் இயங்க வேண்டும். தொழிற்சாலை இயங்கவே மின்சாரம் தேவைப்படும். அணைகளில் உற்பத்தியான மின்சாரம் அதற்கு பயன்படுத்தப்பட்டது. கம்பிகளின் வழியாக தொழிற்சாலைகளுக்கும் பண்ணைகளுக்கும் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் நீர் மின்சாரம் அனுப்பப்பட வேண்டும். இவையெல்லாவற்றுக்கும் தேர்ந்த பொறியியல் வல்லுநர்களும் இயந்திர வல்லுநர்களும் தேவை. பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான ஆண் மற்றும் பெண் வல்லுநர்கள் குறுகிய காலத்தில் கிடைப்பதும் நடக்காத காரியம். மோட்டார் டிராக்டர்கள் பண்ணைகளுக்கு அனுப்பப்பட்டாலும் அவற்றில் பணியாற்றுவதற்கு ஆட்களுக்கு எங்கே போவது?


ஐந்தாண்டு திட்டம் கொடுக்கக்கூடிய சிக்கல்களை உங்களுக்கு புரிய வைக்க கொடுக்கப்பட்ட சில உதாரணங்கள்தான் இவை. ஒரு சிறு தவறும் சிக்கலாக்கிவிடும். பலவீனமான ஒரு நிகழ்வும் கூட மொத்த நிகழ்வுகளின் தொடர் இயக்கத்தை நிறுத்திவிடும். ஆனால் முதலாளித்துவ நாடுகளை விட ரஷியாவுக்கு முக்கியமான பலம் ஒன்று இருந்தது. முதலாளித்துவத்தில் இந்த எல்லா நடவடிக்கைகளும் தனிநபரின் முயற்சிக்கும் வாய்ப்புக்கும் விடப்படும். அந்த முயற்சியும் வாய்ப்பும்கூட போட்டியில் வீணடிக்கப்படலாம். பலதரப்பட்ட உற்பத்தியாளர்களுக்கு இடையிலோ பலதரப்பட்ட தொழிலாளிகளுக்கு இடையிலோ ஒருங்கிணைவு இருக்காது. வியாபாரிகளும் வாங்குவோரும் ஒரே சந்தைக்கு வருவதில் மட்டும் வேண்டுமானால் ஒருங்கிணைவு இருக்கும். சுருக்கமாக சொல்வதெனில், பரந்த அளவுக்கான திட்டமிடுதல் இருக்காது. தனித்தனி அக்கறையின் பேரில் திட்டமிடுதல்கள் நேரலாம். இந்த தனித்திட்டமிடுதல்களும் கூட மற்ற தனி திட்டமிடுதல்களை விஞ்சவோ அவற்றில் சிறந்ததை வென்றெடுக்கவோதான் நிகழ்த்தப்படுகின்றன. தேசிய அளவிலான திட்டமிடுதலுக்கு எதிரான பயனையே இது விளைவிக்கும். உபரியையும் உடைமை மனநிலையையுமே உருவாக்கும். எல்லா தொழிற்சாலைகளையும் நாட்டின் எல்லா நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தக்கூடிய ஆதாயம் சோவியத் அரசுக்கு இருந்தது. அதனால் எல்லா நடவடிக்கைகளும் சரியான இடத்தை வகிக்கும் ஒருங்கிணைந்த திட்டத்தை வகுக்கும் வாய்ப்பும் அதற்கு இருந்தது. இங்கு விரயம் இருக்காது. ஒருவேளை விரயம் ஏற்பட்டாலும் அது திட்டமிடுதலிலும் செயல்படுத்துதலிலும் ஏற்படும் தவறுகளாக மட்டுமே இருக்கும். ஒருமுகப்பட்ட கட்டுப்பாட்டால் அந்த தவறுகளையும் குறுகிய காலத்தில் சரி செய்துவிட முடியும்.


சோவியத் யூனியனை தொழில்மயமாக்குவதற்கான அடித்தளத்தை நிறுவுவதே திட்டத்தின் நோக்கம் ஆகும். அனைவருக்கும் தேவையான துணி முதலிய பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலைகளை நிறுவுவதல்ல. இதுதான் நோக்கமெனில் வெளிநாட்டில் இருந்து இயந்திரங்களை தருவித்து மிக எளிமையாக இந்தியாவில் நடப்பது போல் செய்துவிட முடியும். நுகர்வு பொருட்களை உற்பத்தி செய்யும் இதுபோன்ற தொழிற்சாலைகள் இலகு தொழிற்சாலைகள் என்றழைக்கப்படும். இரும்பு, எஃகு உற்பத்தி செய்யும் கனரக தொழிற்சாலைகள் ஆகும். இலகு தொழிற்சாலைகள் இயங்க தேவையான இயந்திரங்களுக்கு அவை கனரக தொழிற்சாலைகளை சார்ந்திருக்கும். சோவியத் அரசு, தொலைநோக்குடன் சிந்தித்து, இந்த அடிப்படையான கனரக தொழிற்சாலைகளில் தம் ஐந்தாண்டு திட்டத்தின் கவனத்தை செலுத்த தீர்மானித்திருந்தது. அப்போதுதான்  தொழில்மயமாக்கம் அழுத்தமாக நிறுவப்பட்டு பிற்காலத்தில் இலகு தொழிற்சாலைகள் அமையவும் ஏதுவாக இருக்கும். கனரக தொழிற்சாலைகளின் நிர்மாணம் மூலம் இயந்திரங்களுக்கும் போர் உபகரணங்களுக்கும் வெளிநாடுகளை ரஷியா சார்ந்திருக்கவும் வேண்டியிருக்காது.


கனரக தொழிற்சாலைகளுக்கு ஏதுவான நிலை சரியாக தெரிந்தாலும் அதற்கு அளப்பரிய முயற்சி தேவைப்பட்டது. மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. இலகு தொழிற்சாலைகளை காட்டிலும் கனரக தொழிற்சாலைகளுக்கான செலவு அதிகம். முக்கியமாக, அவை நீண்ட காலத்துக்கு வருமானத்தையும் ஈட்ட முடியாது. ஒரு ஜவுளி தொழிற்சாலை துணி உற்பத்தி செய்ததும் மக்களுக்கு விற்றுவிட முடியும். நுகர்வு பொருட்கள் உற்பத்தி செய்யும் எல்லா இலகு தொழிற்சாலைகளிலும் இதுபோல் உடனடி வருவாய் ஈட்டிவிட முடியும். ஆனால் இரும்பு மற்றும் எஃகு உற்பத்திசாலை, இருப்புப்பாதையையும் ரயில் எஞ்சின்களையும்தான் உற்பத்தி செய்யும். ரயில் வழித்தடம் அமைக்கப்படும் வரை இவற்றை நுகரவும் முடியாது; உபயோகிக்கக்கூட முடியாது. அதற்கு காலம் எடுக்கும். அதுவரை பெருமளவு பணம் அம்முயற்சியில் மாட்டியிருக்கும். அதன் விளைவாக நாடு ஏழ்மை கொள்ள வேண்டியதிருக்கும். 


கனரக தொழிற்சாலைகளை துரிதமாக நிர்மாணிக்க, ரஷியா மிகப்பெரும் தியாகம் செய்ய வேண்டியதிருக்கும். வெளியிலிருந்து வரும் அனைத்து நிர்மாணங்களும் இயந்திரங்களும் செலவீனம் கொண்டவை. தங்கத்திலும் ரொக்கத்திலும் பணம் செலுத்த வேண்டும். இது எப்படி சாத்தியப்படும்? சோவியத் யூனியனின் மக்கள் வயிறுகளை சுருக்கிக்கொண்டனர். பட்டினி கிடந்தனர். வெளிநாட்டுக்கு பணம் செலுத்தும் பொருட்டு அத்தியாவசியங்களையும் தியாகம் செய்தனர். உணவுப்பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்று அதில் கிடைத்த பணத்தை இயந்திரங்கள் பெற கொடுத்தனர். விற்க முடிந்த எல்லாவற்றையும் அவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பினர். கோதுமை, கம்பு, பார்லி, சோளம், காய்கறிகள், கனிகள், முட்டைகள், வெண்ணெய், கறி, கோழிகள், தேன், மீன், சர்க்கரை, எண்ணெய்கள் என எல்லாவற்றையுமே விற்றனர். ரஷியர்களிடம் வெண்ணெய் இல்லை. அல்லது குறைவாகவே இருந்தது. ஏனெனில் இயந்திரங்கள் வாங்க அவை வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டது. இன்னும் பல பொருட்களுக்கும் இதுதான் கதி.


இந்த பெருமுயற்சியை தன்னகத்தே கொண்டிருந்த ஐந்தாண்டு திட்டம் 1929ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மீண்டும் புரட்சிக்கான உணர்வு மேலோங்கியது. லட்சியத்துக்கான அறைகூவல் மக்களை பரபரப்பாக்கி அவர்களின் முழு ஆற்றலையும் புதிய போராட்டத்துக்கு அர்ப்பணிக்க வைத்தது. அந்த போராட்டம் எதிரி நாட்டுடனோ அல்லது உள்நாட்டு எதிரியுடனோ அல்ல. அப்போராட்டம் ரஷியாவில் மிஞ்சியிருந்த முதலாளித்துவத்தை எதிர்த்தும், நிலவி வந்த பிற்போக்கு நிலைகளை எதிர்த்தும், வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்குமான போராட்டம். உற்சாகத்துடன் மக்களும் தியாகங்களை ஏற்றுக்கொண்டனர். கடினமான, துறவுக்கு நிகரான வாழ்க்கை வாழ்ந்தனர். அவர்களுக்கு காட்டப்பட்ட அற்புதமான எதிர்காலத்துக்காக தங்களின் நிகழ்காலத்தை இழந்தனர். அந்த எதிர்காலத்தை கட்டுபவர்களாக பெருமையும் கொண்டனர்.


இதுவரையில் தேசங்கள் தங்களின் மொத்த முயற்சிகளையும் போர் போன்ற ஒற்றை பெரிய இலக்குக்குத்தான் குவித்திருக்கின்றன. ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உலகப்போர் காலத்தில் ஒற்றை நோக்கத்துக்காக மட்டுமே வாழ்ந்தன - போர் வெற்றி. அந்த நோக்கத்துக்காக மற்ற எல்லாமே இரண்டாம் பட்சம் ஆக்கப்பட்டன. வரலாற்றிலேயே முதன்முறையாக, சோவியத் ரஷியா மட்டுமே தன்னுடைய மொத்த பலத்தையும் அழிவுசக்தியாக பயன்படுத்தாமல் ஆக்கசக்தியாக பயன்படுத்தியது.

பிற்போக்கான நாடொன்றை சோஷலிச கட்டமைப்பில் தொழில்மயமாக்க சமாதானமுறையில் அச்சக்தியை பயன்படுத்தியது. ஆனால் மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்கள் பட்ட பெருந்துன்பங்கள் அந்த லட்சியவாத திட்டத்தையும் சோவியத் அரசையேயும் கூட ஒரேயடியாக வீழ்த்திவிடுமோ என்ற ஐயம் எழாமல் இருக்கவில்லை. முயற்சியில் நிலைத்திருக்க அளப்பரிய தைரியம் தேவைப்பட்டது. விவசாயக்கொள்கை கொடுத்த துயரமும் பாதிப்பும் அதிகமாக இருப்பதாகவும் ஓரளவுக்காவது இறுக்கம் தளர்த்தப்பட வேண்டுமெனவும் பல முன்னணி போல்ஷ்விக்குகளே கருதினர். ஸ்டாலின் அப்படி நினைக்கவில்லை. கடுமையுடனும் அமைதியுடனும் அவர் தொடர்ந்தார். அவர் அதிகம் பேச மாட்டார். பொது இடங்களில் கூட அதிகம் பேசியவரில்லை அவர். தீர்மானிக்கப்பட்ட இலக்கை நோக்கி சென்றுகொண்டிருக்கும் தவிர்க்க முடியாத அந்த லட்சியப்பயணத்தின் இரும்பு சித்திரமாக அவர் இருந்தார். அவரின் தைரியமும் உறுதியும் கம்யூனிஸ்ட் கட்சியினரிடமும் ரஷியாவின் இதர தொழிலாளர்களிடமும் பரவியது.


ஐந்தாண்டு திட்டத்துக்கு ஏதுவான பிரச்சாரம் மக்களிடையே உற்சாகத்தை நீடிக்க வைத்தது. முயற்சிகளை தொடர்ந்து கொண்டிருக்க வைத்திருந்தது. நீர் மின்சார அமைப்புகளையும் பாலங்களையும் தொழிற்சாலைகளையும் கூட்டுறவு பண்ணைகளையும் நிர்மாணிப்பதற்கான பொதுமக்களின் ஆர்வம் பெருமளவுக்கு இருந்தது. 


பொறியியல்தான் பிரபலமான உத்தியோகமாக இருந்தது. செய்தித்தாள்கள் எல்லாம் பெரும் கட்டடங்களை கட்டுவதற்கான பொறியியல் தகவல்களை கொண்டிருந்தன. பாலைவனங்களும் புல்வெளிகளும் மக்களால் நிரம்பின. ஒவ்வொரு பெரிய தொழிற்சாலைக்கும் அருகே இருந்த புது நகரங்கள் யாவும் வளர்ந்தது. புது சாலைகள், புது கால்வாய்கள், பெரும்பாலும் மின்சார ரயில்பாதைகள் கொண்ட புது ரயில்பாதைகள் நிறுவப்பட்டு சேவைகள் மேம்படுத்தப்பட்டன. ரசாயன தொழிற்சாலையும் போர்க்கருவி உற்பத்திச்சாலையும் கட்டியெழுப்பப்பட்டன. ட்ராக்டர்களையும் தானியங்கி வாகனங்களையும், அதிக மின்சார ரயில் எஞ்சின்களையும், மோட்டார் எஞ்சின்களையும் விசையாழிகளையும், விமானங்களையும் சோவியத் யூனியன் உற்பத்தி செய்யத் தொடங்கியது. மின்சாரம் பரவலாக்கப்பட்டது. வானொலி பொது பயன்பாட்டுக்கு வந்தது. வேலையில்லா திண்டாட்டம் முற்றாக ஒழிந்தது. கட்டப்பட வேண்டிய கட்டடங்கள் மற்றும் இன்னும் பல பணிகள் நிமித்தமாக எல்லா தொழிலாளர்களுக்கும் வேலை இருந்தது. தகுதி வாய்ந்த பல பொறியியல் வல்லுநர்கள் வெளிநாடுகளில் இருந்து வருவிக்கப்பட்டனர். இந்த காலத்தில்தான் பொருளாதார அழுத்தம் மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் எல்லா பகுதிகளுக்கும் பரவியது என்பதும் வேலையில்லா திண்டாட்டம் பெருமளவுக்கு பெருகியது என்பதும் குறிப்பிடத்தக்கவை.


ஐந்தாண்டு திட்டப்பணிகள் சுமூகமாக நடக்கவில்லை. பல சமயங்களில் நிறைய சிக்கல்களும் ஒத்துழைப்பின்மையும் அதிருப்தியும் விரயமும் ஏற்பட்டன. ஆனாலும் பணிகளின் வேகம் அதிகரித்தபடியேதான் இருந்தது. வேலைகளுக்கான தேவையும் அதிகரித்துக் கொண்டு இருந்தது. அதற்கு பிறகுதான் இந்த அற்புதமான திட்டத்துக்கு ஐந்தாண்டு காலம் அதிகம் என்பதுபோல்,‘நான்கு வருடங்களில் ஐந்தாண்டு திட்டம்’ என்ற கோஷம் வந்தது. அதிகாரப்பூர்வமாக இத்திட்டம் டிசம்பர் 31, 1932ம் ஆண்டு முடிந்தது. அதாவது நான்கு வருடங்களின் முடிவில். தொடர்ந்து ஜனவரி 1, 1933ம் ஆண்டு புதிய ஐந்தாண்டு திட்டம் தொடங்கப்பட்டது.


பொதுவாக மக்கள், ஐந்தாண்டு திட்டத்தை பற்றி பல விவாதங்களை கொண்டிருந்தனர். சிலர் அதை வெற்றி என்றும் சிலர் திட்டம் தோல்வியடைந்தது என்றும் கூறினர். பல நிலைகளில் எதிர்பார்த்த அளவுக்கு விளைவு இல்லை என்பதிலிருந்தே மிக எளிதாக சொல்ல முடிந்திருந்தது திட்டம் தோல்வி அடைந்து விட்டது என்று. இன்றைய ரஷியாவில் பல விஷயங்கள் சமமற்று இருப்பதற்கு முக்கியமான காரணம் பயிற்சி பெற்ற, திறமையான தொழிலாளிகள் இல்லாமல் போனதே. தகுதி வாய்ந்த தொழிலாளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக தொழிற்சாலைகள் இருக்கின்றன. தேர்ந்த சமையற்காரர்கள் எண்ணிக்கையைவிட அதிகமான உணவகங்கள் இருக்கின்றன. இந்த சமமற்ற நிலைகள் சீக்கிரமே களையப்படும் என்பதில் சந்தேகமில்லை.


ஆனால் ஒன்று நிச்சயம். ஐந்தாண்டு திட்டம் ரஷியாவின் முகத்தை முற்றிலும் மாற்றி அமைத்தது. நிலப்பிரபுத்துவ நாடாக இருந்த ரஷியா திடீரென முன்னேறிய தொழில்மய நாடாக மாறியது. ஆச்சரியமூட்டும் கலாச்சார முன்னேற்றமும் நேர்ந்திருந்தது. அனைவரையும் உள்ளடக்கிய பொதுச்சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் விபத்து காப்பீடு யாவும் உலகிலேயே அதுவரை எங்கும் காணாதது. மிகவும் மேம்பட்டது. இன்னல்களையும் விருப்பத்தையும் தவிர்த்து பார்த்தால், மற்ற நாடுகளின் தொழிலாளர்கள் மத்தியில் நிலவிய வேலையிழக்கும் பயமும் பட்டினியும் சோவியத்தில் இல்லாமல் போனது. புதுவகை பொருளாதார பாதுகாப்பு உணர்வு மக்களிடம் தோன்றியிருந்தது.


ஐந்தாண்டு திட்டம் வெற்றியா இல்லையா என்ற கேள்வி அர்த்தமற்ற ஒன்று. அதற்கான விடையாக சோவியத் யூனியனின் தற்போதைய நிலையை காணலாம். அந்த திட்டம் அதனளவில் புது உலகை பற்றிய கற்பனையில் உருவாக்கப்பட்டதையும் விடையாக கொள்ளலாம். எல்லாரும் இன்று ஐந்தாண்டு திட்டம், மூன்றாண்டு திட்டம், பத்தாண்டு திட்டம் என பேசிக் கொண்டிருக்கிறோம். சோவியத்துகள்தான் அந்த வார்த்தைக்கே அர்த்தம் கொடுத்தவர்கள்.    

Image தொடர்புடைய செய்திகள்
தற்போதைய செய்திகள் Jul 16
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 79.93 /Ltr (₹ 0.06 )
  • டீசல்
    ₹ 72.48 /Ltr (₹ 0.05 )