இன்றைய வானிலை

  • 28 °C / 82 °F

Jallikattu Game

“நிரந்தர புரட்சி கருத்தியலை நிரூபித்த 1917 ரஷ்ய புரட்சி!”

November 7, 2017
Image

சஜித்

ஒருங்கிணைப்பாளர், புதிய பொதுவுடமை இயக்கம்

Image

ரஷ்யா புரட்சியின் தலைவர்களுள் ஒருவரான ட்ரொட்ஸ்கி முன்வைத்த 'நிரந்தர புரட்சி' பற்றி சில வரிகள்:

லியோன் ட்ரொட்ஸ்கி, சர்வதேசிய போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தலைவர். பாட்டாளி வர்க்க அமைப்புகளான சோவியத்துகள் அரசு அதிகாரத்தை கையிலெடுத்த அக்டோபர் ரஷ்ய புரட்சியை லெனினுடன் இனைந்து நடத்தி, செம்படை (Red Army) கட்டி - ஒடுக்குமுறை அமைப்பை நிலைநிறுத்த முனைந்த எதிர் புரட்சியாளர்களை (counter revolutionaries) வீழ்த்தி சோவியத் தொழிலாளர் அரசின் அரணாக செயல்பட்டு, சோவியத் அரசின் முக்கியமான அனைத்து நடைமுறை வேலைகளிலும் முனைப்புடன் பணியாற்றிய ட்ரொட்ஸ்கி (1926 பின்னர் ஸ்டாலினின் எதேச்சதிகாரத்தால்  சோவியத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்) கருத்தியல் தளத்திலும் பாட்டாளி வர்க்க அரசியலுக்கு பெரும்பங்காற்றியுள்ளார். இதில் 'நிரந்தர புரட்சி' (Permanent Revolution) கருத்தியல் முக்கியமான ஒன்றாகும்.

1905 ரஷ்ய புரட்சி காலகட்டத்தில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (St Petersburg) சோவியத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்து பெற்ற கள அனுபவங்கள் தந்த உறுதியான புரிதலில் ட்ரொட்ஸ்கி - 1906ல் எழுதிய 'Results and Prospects' (முடிவுகள் மற்றும் வாய்ப்புகள்) மற்றும் 1929-ல் வெளியிட்ட 'The Permanent Revolution' என்ற புத்தகங்களின் மூலம் 'நிரந்தர புரட்சி' கருத்தியல் வடிவம் பெறுகிறது. 


நிரந்தர புரட்சியின் வரலாற்று பின்னணி

1900-களில் ரஷ்யாவில் சார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சி - பலவிதமான கொந்தளிப்புகளின் நடுவே, வெகு மக்களின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாது நடந்து கொண்டிருந்தது!

“Second International” என்ற உலக தொழிலாளர்களுக்கான கூட்டமைப்பான இரண்டாம் அகிலம் - அதை சார்ந்த மார்க்சியர்களும் மற்றும் தொழிலாளர் கட்சியினரும் ரஷ்யாவில் நடந்தேற வேண்டியது முதலாளித்துவ புரட்சிதான் என்பதில் உறுதியாக இருந்தனர். அதுவரை ரஷ்ய மார்க்சியத்தின் தந்தை என்றழைக்கபட்ட ப்ளக்கானோவ் (Plekhanov) மற்றும் ரஷ்ய தொழிலாளர் கட்சியின் மென்சிவிக்குகள் (Mensheviks) பிரிவும் இந்த சனநாயக முதலாளித்துவ புரட்சியின் செயல்பாடுகளை முதலாளிகளே முன்னெடுத்து செல்ல முடியும் என்பதை முன்வைத்தனர். தொழிலாளர் வர்க்கம் மற்றும் அதை சார்ந்த அமைப்புகள் சனநாயக  புரட்சிக்கு முதலாளிகள் அடங்கிய முற்போக்கு முன்னணியின் பாகமாக, பிற்போக்குவாதத்திற்கு எதிராக, மற்றும் முதலாளிகளை எதிர்த்து வாழ்வாதாரத்துக்காக போராடும் தொழிலாளர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடே மேலோங்கி இருந்தது.

அதற்கு முந்தைய காலகட்டத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற தொழிற்வளர்ச்சியடைந்த நாடுகளில் நிலப்பிரபுக்களையும், அவர்களது அமைப்பையும் எதிர்த்து வளரவேண்டிய சூழல் முதலாளிகளுக்கு. பெருமக்களை திரட்டி பிரபுத்துவத்தையும், மதகுருமார்களின் மேலாதிக்கத்தையும், சக்கரவர்த்திகளின் எதோச்சதிகாரத்தையும் எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது முதலாளி வர்க்கம்.

இதனாலேயே, நிலப்பிரபுத்துவத்திற்கெதிரான சனநாயக போராட்டத்தின் தலைமையேற்கக்கூடிய  புரட்சிகர வர்க்கமாக முதலாளிகள் இருந்தார்கள் என்பது பரவலான புரிதல்!

லெனினும் மற்றும் ட்ரொட்ஸ்க்கியும் ரஷ்யாவில் நடைபெறவேண்டிய சனநாயக புரட்சியின் இலக்குகள் - அதுவரை உள்ள சமூக பொருளாதார அடிப்படையை புரட்டிப்போடுவதின் மூலமே என்றனர். ரஷ்யாவில் நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க வேண்டுமென்றால் முழுமையான நிலசீர்திருத்தம் நடைபெறவேண்டும், விவசாயிகளுக்கு உழும் நிலம் சொந்தமாகவேண்டும். சார் மன்னரின் ஆட்சி ஒழிந்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஆட்சி அமையவேண்டும்!

ஆனால் இதையெல்லாம் முன்னெடுத்து செய்யக்கூடிய திறன் அற்றதாக விளங்கியது ரஷ்ய முதலாளி வர்க்கம். சார் மன்னரையோ, பெரும் நிலவுடைமையாளர்களையோ மொத்தமாக எதிர்க்க பணம் படைத்த ரஷ்ய முதலாளிகள் தயாராக இல்லை! பல விதங்களில் ரஷ்ய முதலாளிகளின் நலன் பிரபுத்துவத்தின் நலனோடும் அதே வேலையில் அங்கிருந்த பாட்டாளி வர்க்கத்தின் நலனெக்கெதிராகவும் இருந்தது. ஆகவே அமைப்புக்கெதிராக நடந்த 1905 ரஷ்ய புரட்சியின் ஆரம்பத்தில், சார் மன்னராட்சியை எதிர்த்த முதலாளி வர்க்கம், பிறகு சார் மன்னர் அளித்த முகத்துடைப்பு சமரச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்களை ஏற்று, பின்மாறியது. ஆனால் ரஷ்யா தொழிலாளர்களும் மற்ற ஒடுக்கப்பட்ட மக்களும் தொடர்ந்து போராடினார்கள்! புரட்சி தோற்கடிக்கப்பட்டாலும் தொழிலாளர்களின் உறுதியும், அவர்களின் போரட்ட திறனையும் - அந்த வரலாற்று நிகழ்வு மீண்டும் தெளிவுபடுத்தியது.

இந்த தெளிவின் அடிப்படையில் தான் ட்ரொட்ஸ்கி 'நிரந்தர புரட்சி’ கருத்தியலை முன்வைத்தார். அதிலிருந்து சில முக்கியமான கூறுகள்:

1. பின்தங்கிய நாடுகளில் தொழிலாளர் தலைமையிலான புரட்சி

மார்க்சிய வரலாற்று பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டு, நிலப்பிரபுத்துவத்திற்கு அடுத்து முதலாளித்துவம், பிறகு பொதுவுடைமை சமுதாயத்திற்கான “சோசியலிச புரட்சி” என்று வரலாற்றை தட்டையாக நேர்கோடாக அணுகாமல், அப்போதைய சூழ்நிலைகள், வர்க்கங்களின் தன்மை, போராட்ட சக்திகளின் நிலை போன்றவற்றை உணர்ந்து ஒரு பின்தங்கிய நாடான  ரஷ்யாவில் சனநாயக புரட்சிக்கான செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லக்கூடிய திறன் தொழிலாளர் வர்கத்திற்கே உண்டு என்கிறார் ட்ரொட்ஸ்கி! இவ்வாறு தொழிலாளர்கள் தலைமையில் நடைபெறும் புரட்சி, மற்றும் தொழிலாளர்களின் அரசு செயல்படுத்தும் சனநாயக சமுதாயத்தின் வேலைத்திட்டங்கள் வெறும் அந்த கட்டத்தோடு தேங்கி நிற்காமல், ஓர் பொதுவுடமை சமுதாயத்திற்கான முன்னோடியாக தொடரும். இந்த இடையீடு இல்லாத தன்மை தொழிலாளர்கள் முன்னெடுத்து செல்லும் புரட்சிக்கு ஒரு நிரந்தர பண்பை உறுதி செய்கிறது.

2. பொதுவுடமை புரட்சி

மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும். தொடர்ந்து சமுதாய உள் போராட்டங்களும், சமூக உறவுகளிடையே மாற்றங்களும் நடந்து கொண்டிருக்கும். சமுதாயமும் தன்னை மாற்றி கொண்டிருக்கும். இந்த மாற்றங்கள் எல்லாம் அரசியல் தன்மை கொண்டதாகவும் இருக்கும். பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், சமூக பார்வைகள், சட்டங்கள், தினசரி வாழ்க்கை முதற்கொண்டு அனைத்தும் பலவிதமாக மற்றும் ஒன்றையொன்று தொடர்புள்ள வகையில் தாக்கங்களை ஏற்படுத்தி சமுதாய வளர்ச்சியின் அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும். இந்த நிரந்தர தொடர்ச்சியே பொதுவுடைமை சமுதாயத்திற்கான புரட்சிக்காக தொழிலாளர்களின் அரசை செலுத்தும்.

3. சர்வதேசியம்

பொதுவுடைமை புரட்சி ஒரு நாட்டிற்குள், ஒரு தேசத்தின் எல்லைக்குள் துவங்கலாம். ஆனால் அது அங்கேயே முடிவடைந்துவிடாது! தொழிலாளர்களின் அரசும், ஒரு பொதுவுடமை புரட்சி நடைபெற்று கொண்டிருக்கும் தேசமும் பல முரண்களை, பல தரப்பிலிருந்து பல கட்டங்களில் எதிர்கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையில், நடேந்தேறிய புரட்சியை பாதுகாக்க வேண்டிய அவசியம் எழுகிறது. உலக முதலாளிகளுக்கெதிராக, உலக தொழிலாளர்களின் எழுச்சியும், மற்ற தேசங்களில் அதுவும் குறிப்பாக வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படும் புரட்சியும் அவசியமாகிறது! ஒரு நாட்டிற்குள் சோசலிசம் கட்டிய முயற்சிகளுக்கு நியாயம் கற்பிப்பவர்கள், ஒரு தேசத்தின் எல்லையை தாண்டி தொடரும் புரட்சியின் நிரந்தர தன்மையின் தேவையை உணர வேண்டும். 

4. நிரந்தர புரட்சி கருத்தியலை நிரூபித்த அக்டோபர் புரட்சி

1917 பிப்ரவரி புரட்சிக்கு பிறகு சார் மன்னரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த, பாட்டாளிகளின் சோவியத்துக்கள், முதலாளிகளின் இடைக்கால அரசுடன் அதிகாரப் பகிர்வை செய்கிறது. ஆனால், முதலாளிகளுடனான அதிகாரப் பகிர்வை (Dual Power) விடுத்து அனைத்து அதிகாரத்தையும் பாட்டாளி வர்க்கம் கைப்பற்ற வேண்டும் (All power to the Soviets) என்ற முழக்கத்தை லெனின் ஏப்ரல் அறிக்கையில் வைத்தார். ட்ரொட்ஸ்கி ஆதரித்த அந்த அறிக்கை (April Thesis) அக்டோபர் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தது. பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கையிலெடுத்தது.

சோவியத் அரசு நிலப்பிரபுக்களிடம் குவிந்திருந்த நிலத்தை தேசிய மயமாக்கியது. நிலமில்லா விவசாயிகளுக்கு நிலத்தை அளித்தது. சோவியத் மக்களுக்கு அதுவரை முதலாளித்துவம் அளிக்காத உச்சபட்ச ஜனநாயகத்தை உறுதி செய்தது. இலவச கல்வி மற்றும் மருத்துவம் அளிக்கும் மக்கள் நல அரசை அமைத்தது. வங்கிகள், தொழிற்கூடங்கள், போக்குவரத்து போன்ற உற்பத்தி சக்திகளை பொதுவுடமையாக்கியது. ரஷ்யாவில் நடந்த புரட்சியை காப்பாற்றவும், பின் தங்கிய நாடான ரஷ்யாவிற்கு மற்ற வளர்ந்த நாடுகளின் மேம்பட்ட பொருளாதார திறனை பெற்றிடவும் முக்கியமாக சர்வதேசிய தோழமையுணர்வுடன் மற்ற நாடுகளின் பாட்டாளிகளை ஒடுக்குமுறை சுரண்டலில் இருந்து விடுவிக்கவும் - சோவியத் அரசு மூன்றாம் அகிலத்தை அமைத்தது. இவ்வாறு பாட்டாளிகளின் தலைமையில் பின்தங்கிய நாடான ரஷ்யாவில் நடந்த அக்டோபர் புரட்சி, ரஷ்யாவின் ஒடுக்குமுறை நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை புரட்சிகரமாக மாற்றியமைத்து, பொதுவுடமை புரட்சிக்கான செயல்பாடுகளை முன்னெடுத்து, சர்வதேசியத்தை மூன்றாம் அகிலம் அமைத்து நிலைநாட்டியது.

5. நிரந்தர புரட்சி - ட்ரொட்ஸ்கியத்தின் அடித்தளம்

'நிரந்தர புரட்சி' கோட்பாட்டை மட்டுமன்றி, ரஷ்ய புரட்சியின் காலகட்டத்திலும், அதற்கு பிற்பாடும் பல முக்கியமான கருத்தியலை முன்வைத்து போராடினார் ட்ரொட்ஸ்கி. ஆனால் இன்றளவும் 'நிரந்தர புரட்சி' கருத்தியல் பாட்டாளி வர்க்க போராட்டத்திற்கான அவசியமான மார்க்சிய கண்ணோட்டமாக உள்ளது. குறிப்பாக இந்தியா போன்ற  பின்தங்கிய நாடுகளின் பாட்டாளி வர்க்க தலைமைகள் என்று சொல்லக்கூடிய பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகளின் - முதலாளித்துவ ஆதரவு கட்சிகளுடனான சந்தர்ப்பவாத கூட்டணிகளின் வெற்று அரசியலை அம்பலப்படுத்தி இங்குள்ள இடதுசாரி ஆதரவாளர்களை சரியாக வழிநடத்தக்கூடிய ஒரு புரட்சிகர மார்க்சிய கருத்தியலான 'நிரந்தர புரட்சி' இன்றைய சர்வதேசிய அரசியல் சூழலிலும் கூட ட்ரொட்ஸ்கியத்தின் மிக முக்கியமான பங்களிப்பாக உள்ளது!

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )