இன்றைய வானிலை

  • 28 °C / 82 °F

Jallikattu Game

​ ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ் - பழைய பன்னீர்செல்வமான தருமர் - தொடரும் தர்மயுத்தம்!

November 27, 2017
Image

தேவ்பிரமோத்

கட்டுரையாளர்

Image


1996 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளம் நகரசபை தலைவராக  ஓ.பன்னீர்செல்வம் தேர்வானபோது ஆச்சரியப்பட்டவர்களுக்கு, அடுத்த ஐந்தாண்டுகளில் அவர் தமிழகத்தின் முதல்வராவார் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை .  

அதிமுகவின் சிம்மாசனத்தில் ஜெயலலிதா இருந்த போதே முதல்வரான ஒரே ஒருவர் உண்டென்றால் அது ஓ.பன்னீர்செல்வம்  தான். அந்த பன்னீர்செல்வம் தான் இன்று அதிமுகவின் அரியாசனத்தின் அருகில் இருந்தும் முதல்வரும் ஆக முடியாமல்... ஏன், கட்சி நிகழ்ச்சிகளுக்கு கூட அழைப்பில்லாமல் இருக்கிறார். 
ஓ.பன்னீர்செல்வத்தின் வாழ்க்கை வரலாறு 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி வரை மிகுந்த ஏற்றங்களை கொண்ட ஒரு பயணம்தான். 

1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 'பேச்சிமுத்து'வாக பிறந்தவர் தான் ஓ.பன்னீர்செல்வம்.  பள்ளிப்படிப்பை பெரியகுளத்தில் முடித்த பன்னீர் செல்வம் பின்னர், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்தார். பால் பண்ணை நடத்திய பன்னீர் செல்வம், தனது நண்பருடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்கடை ஆரம்பித்தார்.  

1987ல் எம்ஜிஆர் இறந்தபிறகு, அதிமுக இரண்டானபோது ஜெயலலிதாவிற்கு எதிரான ஜானகி அணியில் இடம் பெற்றார் ஓ. பன்னீர்செல்வம். கம்பம் செல்வேந்திரன் ஆதரவில் பெரியகுளம் ஜானகி அணிக்கு ஓபிஎஸ் நகர செயலாளரானார். 1989ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக பணிபுரிந்தார். 1991ல் அதிமுக ஒருங்கிணைந்தது. அப்போது தான் முதல் முறையாக ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றார் ஓ. பன்னீர் செல்வம். இதையடுத்து முதன்முதலில் பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநரானார். அங்குதான் முதன்முதலில் அதிகாரத்தை தொட்டு பார்த்தார் ஓ. பன்னீர் செல்வம்.

1996ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கால கட்டத்தில் பெரியகுளம் அதிமுக நகர செயலாளராக இருந்த ஓபிஎஸ்சுக்கு பெரியகுளம் நகர்மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட சீட் கிடைக்கவே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இவர் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தை பிரித்து தேனியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினார். தேனிக்குப் பதில் பெரியகுளத்தை தலைநகராக அறிவிக்கும்படி ஓபிஎஸ் போராட்டங்கள் நடத்தினார். 

1999ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாகவும், சின்ன எம்ஜிஆராகவும்  தேனி மாவட்டத்து அதிமுகவினரால் சொல்லப்பட்ட  டிடிவி தினகரன் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டார். தேனியில் தேர்தல் அலுவலகம் வைத்திருந்த டிடிவி தினகரன், எம்.பியான பிறகு தொகுதியில் குடியிருப்பது என முடிவெடுத்தார். இதன்படி, 2000ம் ஆண்டில் பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்சின் தம்பி ஓ.ராஜாவுக்கு சொந்தமான வீட்டிற்கு குடியேறினார். இதுவே ஓபிஎஸ்சின் வளர்ச்சிக்கு துணையாக அமைந்ததாக சொல்லப்பட்டது. அதுவரை அதிமுகவில் ஒரு சாதாரண நபராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தின் வளர்ச்சி, தினகரனின் வருகைக்குப் பின்தான் வேகமெடுத்தது.

டிடிவி தினகரனுடனான நெருக்கமே, 2001ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்ததாகவும் பேசப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக சட்டசபைக்குள் நுழைந்த ஓ. பன்னீர்செல்வம் முதல்முறையிலேயே அமைச்சரான போது அதிர்ச்சியானவர்களுக்கு  அடுத்த சில மாதங்களில் பேரதிர்ச்சி காத்திருந்தது. 

தனது 31 ஆவது வயதில் அரசியலில் அடியெடுத்து வைத்த ஓ. பன்னீர்செல்வம் 1982ல் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி துணை செயலாளர் ஆனார். 1989 ல் நகர இணைச் செயலாளராகவும் 1993ல் நகர செயலாளராகவும் ஆனார். பின்னர், 1996 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பெரியகுளம் நகராட்சி தலைவர் ஆனார். 2000-த்தில்  தேனி மாவட்டச் செயலாளராக உயர்ந்தார். இப்படியான வளர்ச்சி என்பது எல்லோருக்கும் நடந்து விடாது. எத்தனையோ மாவட்டச் செயலாளர்களின் பின்னணியில் இப்படியான வளர்ச்சிப் படிநிலைகள் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் சாத்தியமாகும் வளர்ச்சி இல்லை இது. இதுவே அசாத்திய வளர்ச்சி என்று கணிக்க தொடங்குபவர்களின் முன், கட்டப்பட்ட அத்தனை தேர்தல் அரசியல் சாதனைகளும் சுக்குநூறாய் நொறுங்கிப்போகும் ஒன்று நடந்தது. அது முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரான ஓ.பன்னீர்செல்வம் வருவாய்த் துறை அமைச்சர் ஆனதோடு மட்டுமில்லாமல், அடுத்த சில மாதங்களில் முதல்வராகவும் ஆனார்.

ஜெயலலிதாவால் முதல்வராக முடியாத நிலை ஏற்பட்டபோது, அவரால் யார் முதல்வராக்கப்பட்டிருக்க வேண்டும். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. அதாவது மேம்போக்காக பார்த்தால் எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவிலிருந்து எம்ஜிஆர் மறைவையடுத்து அதிமுகவில் பெரும்பான்மையானோர் ஜானகியை ஆதரித்தபோதும், ஜெயலலிதாவை தீவிரமாக ஆதிரித்தவர்கள் முதல்வராகியிருக்க வேண்டும். உதாரணத்திற்கு செங்கோட்டயன் போன்றோர். மக்கள் செல்வாக்கும் இருந்தது. எம்ஜிஆர் காலத்திய அமைச்சர். நெருக்கடி காலத்தில்  ஜெயலலிதாவை தீவிரமாக ஆதரித்தவர்.  அப்படியான செங்கோட்டையன் போன்றோரை தவிர்த்து விட்டு, ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். அதிமுக பிரிந்த போது தன்னை எதிர்த்து ஜானகி அணியில் இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். அதன்பின் ஆயிரம் அரசியல் - சாதிய கணக்குகள் இருந்தாலும், அதில் பன்னீர்செல்வத்தை பொறுத்திப் பார்க்க  இருக்கும் ஒரே தொடர்பு டிடிவி தினகரன். 

ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானதன் பின்னணியில் எத்தனையோ அரசியல், சாதிய காரணங்கள் இருக்கலாம். நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கலாம். யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எது எப்படி இருந்தாலும்  ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வரானர். 

2002ஆம் ஆண்டு அதிமுக கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளராகவும், பிறகு கட்சியின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார்.  2006ல்  திமுக ஆட்சி அமைத்த போது எதிர்க் கட்சித் தலைவராகவும், எதிர்க் கட்சித் துணைத் தலைவராகவும் இருந்தார் ஓ. பன்னீர்செல்வம்.

ஹெலிகாப்டரை அண்ணாந்து கும்பிடுவதிலும், கார் சக்கரத்தில் விழுந்து கும்பிடுவதிலும், பொதுக் கூட்டங்களில் பொதுச்செயலாளரிடம் வளைந்து நின்று சேதியை கேட்பதிலும் ஓபிஎஸ்க்கு நிகர் ஓ. பன்னீர்செல்வமே. 

2011ல் மீண்டும் அதிமுக ஆட்சியமைந்த போது நிதியமைச்சராகவும், அவை முன்னவராகவும் ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பு வகித்தார். வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, நிதி அமைச்சர், முதல்வர் என்று ஆட்சியில் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதிக்கம் நீண்டது போல கட்சியிலும் அவரது ஆதிக்கம் விரிவடையவே செய்தது. 2001க்குப் பிறகு நால்வரணி, மூவரணி என்று அதிமுகவின் உயர்மட்டத்திலேயே உழன்றார். 

ஆனால் என்னதான் உயர்மட்டத்திலேயே உழன்றாலும் அதிமுகவின் வேர்களில் ஒருவரான  செங்கோட்டையனைப் போல் தனித்த செல்வாக்கு மிக்கவராக ஓ. பன்னீர்செல்வம் எப்போதும் இருந்திருக்கவில்லை. சசிகலா குடும்பம் அல்லது தினகரன் ஆதரவாளராகவே ஓ. பன்னீர்செல்வம் பார்க்கப்பட்டு வந்தார், மெரினாவில் தியானம் இருக்கும் வரை!

இரண்டு முறை தன் கட்சித் தலைவர் நீதிமன்றத் தீர்ப்பால் பதவியிழக்க நேரிட்டபோது முதல்வரான ஓ. பன்னீர் செல்வம் மூன்றாவது முறை முதல்வராகும் முன்பே முதல்வருக்கான அதிகாரங்களை சுவைத்தார். 
செப்டம்பர் 22ஆம் தேதி, உடல்நிலை பாதிக்கப்பட்டு முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்  முதல்வர் வசமிருந்த துறைகள் அனைத்தும் ஓ. பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது. துறைகளற்ற முதல்வர் சிகிச்சையெடுக்க முதல்வரின் துறைகளோடு ஓபிஎஸ் வலம் வந்தார்.  முதல்வரின் மறைவுக்குப் பின் துறைகளோடு சேர்த்து முதல்வர் பதவியும் அவர் வசமாக்கப்பட்டது.  

மூன்றாம் முறை முதல்வர். கடந்த முறைபோல் இல்லாமல் இம்முறை மீளாச் சிறைக்கு சென்றுவிட்டதால் பன்னீர் செல்வம் தான் இனி முதல்வர் என்று நினைத்திருந்த சிலருக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை அந்தப் பதவி அவருக்கு இரண்டொரு மாதங்களே என்று.  

சசிகலா பொதுச்செயலாளராகி, சட்டமன்ற கட்சித் தலைவராகவும் ஆகி, தன் முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தபின் ஓ. பன்னீர் செல்வம் செய்த ”தியான அரசியல்” மீண்டும் ஒருமுறை அரசியல் கணக்குகளை உடைத்தது. அவ்வளவு நாளும் சசிகலா அல்லது தினகரன் விசுவாசி என்று சொல்லப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் தான் அவர்களுக்கெதிரான தர்ம யுத்தத்தின் போர்த் தளபதியாக உருவானார். ஒரே இரவில் எல்லாமும் மாறிப்போயிருந்தது.

தமிழக அரசியலில் பல கணக்குகள் மாறிப்போனதற்கு ஓபிஎஸ்ஸின் தியான இரவே பிரதான காரணம். அதற்கு பின்னும், பன்னீர் செல்வத்திற்கு சாரதியாக எத்தனையோ பார்த்த சாரதிகள் இருந்திருக்கலாம். ஏதாவது ஒரு பத்திரிகை ஆசிரியராகவோ அல்லது இந்தியாவின் மிகப்பெரும் கட்சியின் தலைவராகவோ இல்லை நாட்டின் தலைவராகவோ கூட இருக்கலாம். ஆனால் ஓபிஎஸ் தான் தியான அரசியலை மேற்கொண்டவர். அவர் வாயிலாகவே அது நடந்தது. 

அவரால் தான் சசிகலா முதல்வராக முடியாமல் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். ஓ. பன்னீர் செல்வம் உருவாக்கிய அரசியல் வளர்ச்சிப் படிநிலை சாதனை உடைக்கப்பட்டது. பழனிசாமியால் புதிய அரசியல் கணக்குகள் உருவாக்கப்பட்டன. பழனிசாமி முதல்வரானதன் பின்னணியிலும் சசிகலா, அவரது குடும்பம் இருப்பதாகவே பேசப்பட்டது. அதன் பிறகான அரசியல் ஆட்டம் சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்களை  கட்சியிலிருந்து விலக்கிவைத்தது.

பன்னீர்செல்வமும் பழனிசாமியும் ஒன்றானார்கள். கட்சியின் தலைமைக்கு நிகரான பொறுப்பு உருவாக்கப்பட்டது. 

கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர். எடப்பாடி பழனிசாமி துணை ஒருங்கிணைப்பாளர்.
ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வர். ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர்.  ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி பிரதானம். கட்சியில் ஓ. பன்னீர்செல்வம் பிரதானம்.

கணக்கு சரியாக இருப்பதாகத்தான் பட்டது. ஆனால் காலம் அதைப் பொய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.  
அணிகள் இணைந்தாலும், இரு அணிகளுக்கிடையிலும் பல்வேறு உரசல்கள் இன்னும் நீடித்தபடியே இருக்கின்றது. எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் கலந்துகொள்ளும் விழாக்களில் இரு அணியினரும் தனித்தனியே பேனர்களை வைக்கின்றனர். 

ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், இரு அணிகளுக்கும் இடையில் தற்போதும் நீடிக்கும் இடைவெளியை போட்டுடைத்திருக்கிறார். அதிமுக விழாக்களில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முறையாக அழைப்பு கூட விடுக்கப்படுவதில்லை. மதுரையிலேயே இதுதான் நிலைமையென்றால், கொங்கு மண்டலத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை?
காலம் காலமாக முதல்வரையே கட்சித் தலைவராக, கட்சித் தலைவரையே முதல்வரக பார்த்துப் பழகிப்போன தமிழகத்து மக்கள், அதிமுக தொண்டர்கள் அதையே பிரதிபலித்தார்கள். எங்கும் எதிலும் எடப்பாடி பழனிசாமியே பிரதானம். வர்தா புயல் நேரத்தில்  வேட்டியை மடித்துக்கட்டி களம் கண்ட ஓபிஎஸ், பழைய பன்னீர்செல்வமாகியிருக்கிறார்.

முன்பு இரண்டாவது இடத்திலிருப்பதற்கும், இப்போது இரண்டாவது இடத்திலிருப்பதற்குமான வேறுபாட்டை நிச்சயம் ஓ.பன்னீர்செல்வம் உணர்ந்து கொண்டு இருப்பார்.  இரண்டாவது இடத்தில்தான் இருக்க வேண்டும் என்றால் சசிகலாவிற்கே இருந்திருக்கலாம் என்று ஒருவேளை யோசித்திருக்கலாம். அவர் சிறை சென்ற பிறகு நான்காவது முறையாக முதல்வராகியிருக்கலாம். தான் ஆதர்சமாக நினைத்தவருக்கு இரண்டாமிடத்திலிருப்பதற்கும், தன் அமைச்சரவையில் இருந்த ஒருவருக்கு, இரண்டாமிடத்திலிருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. 

சிம்மாசனம் நிறைந்திருந்த போதே அரியாசனைத்திலேறிய  ஓ.பன்னீர்செல்வம் இப்போது என்ன யோசிப்பார். இப்போதே இவ்வளவு அவமரியாதை, போகப் போக என்னவெல்லாம் நடக்கும் என்று யோசிப்பாரா? இல்லை  துணை முதல்வர் பொறுப்பே போதும், எவ்வளவு இக்கட்டுகள் வந்தாலும் சமாளித்து, சகித்து,  இப்படியே நீடித்து விடலாம் என்று யோசிப்பாரா?  அல்லது தமக்கு உருவான செல்வாக்கை தக்கவைத்து, வளர்த்தெடுத்து புதுக் கணக்கை உருவாக்குவாரா ?
ஒருவேளை மீண்டும் தியான அரசியல் தொடரலாம்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )