இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​விஜய் எனும் அரசியல்வாதி!

October 3, 2018
Image

அபுல்கலாம் ஜெய்லானி

ஊடகவியலாளர்

Image

சர்கார் மேடையில் தனது சர்கார் அமைக்கும் ஆசைக்கான முக்கியமான புள்ளியை வைத்திருக்கிறார் நடிகர் விஜய், இல்லை இல்லை தளபதி விஜய். 

விஜய்யின் சர்கார் ஆசைக்கான முதல் புள்ளியை எப்போதோ அவர் வைத்து விட்டார். ஆனால் முக்கியமான புள்ளியை அவர் வைத்திருக்கும் இடமும், அந்த மேடையும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. அந்த மேடையில் அவர் பேசிய பேச்சு நிச்சயம் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். யாரைக் குறிப்பிட்டும் பேசவில்லை என்று விஜய் சொன்னாலும், அவர் யாரைக் குறித்து அப்படி பேசினார் என்ற கேள்விகள் தவிர்க்க முடியாததாகிறது. 

சர்கார் மேடைக்கு முன்பே விஜய்யை அரசியல் தீண்டியிருக்கிறது. விஜய்யை அரசியல் தீண்டியது என்பதை விட தாக்கியது என்று சொல்வது தான் சரியாக இருக்கும். விஜய்யை நெருங்கிய போதெல்லாம் அரசியல் காற்று தென்றலாக அல்லாமல் புயலாகவே இருந்தது. தனக்கு வாய்ப்பு கிடைத்த தருணங்களில் எல்லாம் விஜய் தன் அரசியல் ஆசையை மறைமுகமாக வெளிப்படுத்தி தான் வந்திருக்கிறார். 

விஜய்க்கு அரசியல் ஆசை வருவதற்கு காரணம் இருக்கிறது. நடிகர் விஜய் தமிழகத்தில் பெரும்பாலானோரால் விரும்பப்படும் நடிகர். குறிப்பாக குழந்தைகளால் விரும்பப்படுபவர் அவர். குழந்தைகளால் ஒரு நடிகர் விரும்பப்படும் நடிகராக இருப்பது சாதாரணமானது அல்ல. ரஜினிக்குப் பிறகு விஜய்க்கு மட்டுமே அது அமைந்தது. அவரது ரசிகர்களால் தளபதி எனக் கொண்டாடப்படுபவர். இவற்றை எல்லாம் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது. விஜய்யை தமிழ்ச்சமூகம் ஒரு நடிகராக மட்டும் பார்க்கவில்லை. 

அதனால் தான் தமிழகத்தின் பல்வேறு ஜீவாதார பிரச்சனைகளில் விஜய்யின் குரல் ஒலித்தது. அதனால் தான் ஜல்லிக்கட்டிற்காக மெரினாவில் நடந்த போராட்டத்தில் கர்சீப்பால் மறைக்கப்பட்ட விஜய்யின் முகம் தெரிந்தது. நீட் கொடுமையினால் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் அனிதாவினுடைய தந்தையின் கரங்களை ஆதரவாக பற்றச் செய்தது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற தமிழகத்தின் தென் கோடிக்கு அவரை போக வைத்தது. ஆம் தமிழகத்தின் பல குடும்பங்களால் தங்கள் வீட்டு மகனாகவும், பல தங்கைகளாலும், தம்பிகளாலும் அண்ணனாகவும் பார்க்கப்படுபவர் விஜய். ஒரு மகன் போல் வந்து எங்கள் துன்பத்தில் விஜய் பங்கெடுத்துக் கொண்டார் என தூத்துக்குடி மக்கள் சொன்ன வார்த்தைகள் அதற்கு சாட்சி. 

விஜய் மக்களுக்கு பிடித்தமானவராக இருப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. எப்படி இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்தமானவராக இருக்கிறாரோ, அது போலவே பிரச்சனைகளுக்கும் பிடித்தமானவராக இருக்கிறார் விஜய். எப்படி தமிழ்க்குடும்பங்கள் தங்களில் ஒருவராக விஜய்யைப் பார்க்கின்றதோ அப்படித்தான் பிரச்சனைகளும் தங்களுக்கு நெருக்கமானவராக அவரைப் பார்க்கின்றன. சர்ச்சைகள் இல்லாமல் அவரது படங்கள் வெளியாவது அரிதிலும், அரிதான நிகழ்வு. படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் போதே இதில் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என யோசிக்கும் மனநிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். விஜய் படங்களுக்கு பிரச்சனை வருவதற்கான முக்கியமான காரணம் அவரது அரசியல் ஈடுபாடு. 

அரசியல் ஒன்றும் அவருக்கு புதிதல்ல. விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் திமுகவின் ஆதரவாளராக அறியப்பட்டவர். திமுக ஆட்சியில் திரைத்துறை சார்ந்து அமைக்கப்படும் குழுக்களில் பிரதானமானவராக எஸ்.ஏ.சந்திரசேகர் இருந்திருக்கிறார். அதே போல் விஜய்யும் திமுகவின் ஆதரவாளராக அறியப்பட்டவர் தான். கடந்த 2006ம் ஆண்டு டெல்லியில் நடந்த விழா ஒன்றில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட ஸ்டாம்பை விஜய் பெற்றுக் கொண்டார். அப்போது தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனும் அந்த விழாவில் கலந்து கொண்டார். விஜய்க்கு அந்த வாய்ப்பு கிடைத்ததன் பின்னணியில் திமுக இருந்ததாகவும், விஜய் திமுகவில் சேரப்போவதாகவும் அப்போது தகவல் வெளியானது. 

பின்னர் காவலன் படத்தின் போது விஜய்க்கும் திமுகவிற்கும் பிரச்சனை வந்ததும், அவர் அதிமுக ஆதரவாளராக மாறியதையும் தமிழகம் அறியும். தலைவா படத்தின் போது விஜய்க்கும் அதிமுகவிற்கும் பிரச்சனை ஏற்பட்டது. ஈழப்பிரச்சனைக்கு நாகப்பட்டினத்தில் உண்ணாவிரதம் இருந்தது, லோக்பாலுக்காக உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேவுக்கு நேரில் ஆதரவு அளித்தது என விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்ந்தன. 

இந்த நிலையில் தான் தனது தேர்தல் அரசியல் ஆசையை வெளிப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிய சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது தான் முக்கியமானது. தான் முதல்வரானால் நடிக்க மாட்டேன் உண்மையாக இருப்பேன் என்ற விஜய்யின் கருத்து அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. நேற்று விஜய் பேசியது தற்செயல் நிகழ்வு போல தெரியவில்லை. மிகச் சிறப்பான ஒரு எக்சிகியூசனாக அவரது பேச்சு இருந்தது. 

லஞ்சம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற விஜய்யின் கருத்தும், தலைமை சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்ற கருத்தும் அதிமுகவை குறிவைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது அதிமுகவை மட்டும் குறிவைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது பலரின் வாதம். காரணம் மன்னர் உப்பை இலவசமாக வாங்கினால், பரிவாரங்கள் ஊரைக் கொள்ளயடிக்கும் என்ற கருத்துடைய குட்டிக் கதையை கூறிவிட்டு தலைமை குறித்து பேசியிருந்தார் விஜய். 

சமீப காலங்களில் பிரியாணிக் கடை, பியூட்டி பார்லர், பேன்சி ஸ்டோர் போன்ற இடங்களில் திமுகவினர் பிரச்சனை செய்த விவகாரங்கள் சர்ச்சையாகின. அந்த சம்பவங்களோடு விஜய்யின் பேச்சை ஒப்பிட்டால், அவர் திமுகவையும் விமர்சித்தாரோ என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அவர் திமுகவை விமர்சித்தார் என்பது உண்மை என்று வைத்துக் கொள்ளும் போது தான் அவர் பேசிய மேடை யாருக்குரியது என்பது முக்கியத்துவம் பெறுகிறது. 

திமுகவின் உட்கட்சி அல்லது உள்குடும்ப பிரச்சனையில் ட்ர்ம்ப் கார்டாக விஜய் பயன்படுத்தப்படுகிறாரோ என்ற கேள்வி எழுகிறது. அதற்கு வலு சேர்க்கும் சில முன் உதாரண சம்பவங்கள் இருக்கின்றன. இளைய தளபதியாக இருந்த நடிகர் விஜய் திடீரென ஒரு நாள் மெர்சல் படத்தில் தளபதியாக மாறினார். அதற்கடுத்த படமே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமிட்டானார் விஜய். அந்தப் படத்திலும் விஜய் தளபதி எனக் குறிப்பிடப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. 

தளபதி என்ற பட்டத்திற்கு திராவிட இயக்கத்தில் இருந்த பாரம்பரியம் அந்த சர்ச்சைக்கு அகரம் தீட்டியது. பேரறிஞர் அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரிசாமி, கி.வீரமணி ஆகியோர் அதற்கு முன்பு தளபதி என அழைக்கப்பட்டவர்கள். சில நேரங்களில் கலைஞர் கருணாநிதியும் தளபதி என அழைக்கப்பட்டிருக்கிறார். விஜய்யை தளபதி எனக் குறிப்பிட்டு சன்பிக்சர்ஸ் பட அறிவிப்பு வெளியான போது கலைஞர் கருணாநிதி உயிரோடு இருந்தார். அப்போது திமுக செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் தளபதி என அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார். 

அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி, கி.வீரமணி, கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரின் வரிசையில் விஜய்யை தளபதியாக சன் பிக்சர்ஸ் அங்கீகரிக்கிறதா என விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் விஜய் தொடர்ந்து தளபதியாகவே குறிப்பிடப்பட்டு வந்தார். இப்போது சன் பிக்சர்ஸ் மேடையிலேயே தளபதியிலிருந்து தலைவராக மாறும் தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். 

திமுகவில் தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளுக்காக திமுக தலைமைக்கு எதிரான தங்கள் குரலாக விஜய்யை மாறன் சகோதரர்கள் பயன்படுத்துகிறார்களா? அல்லது அதிமுகவிற்கு எதிரான திமுகவின் குரலா விஜய் என்பதும் மில்லியன் டாலர் கேள்வி. 

தளபதிகள் பலர் தலைவர்களாக மாறியதை தமிழக அரசியல் வரலாறு பல இடங்களில் பதிவு செய்திருக்கிறது. இளைய தளபதியிலிருந்து தளபதியாக விஜய் எளிதாக பிரமோட் ஆனார். தளபதி என்ற இடத்திலிருந்து விஜய் தலைவராக மாறுவாரா என்பதை காலம் தீர்மானிக்கட்டும். 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )