இன்றைய வானிலை

  • 28 °C / 82 °F

Jallikattu Game

​திரும்புகிறதா வரலாறு!

December 7, 2017
Image

ஜெப அருள் ராபின்சன்

கட்டுரையாளர்

Image

வாழ்க்கை வரலாறு

நேசமணி விளவங்கோடு வட்டத்தை சார்ந்த பள்ளியாடி என்னும் இடத்தில் 12 ஜூன் 1895ம் ஆண்டு அப்பாவு-ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்து மாறாங்கோணம் என்னும் இடத்தில் பிறந்தார். இதனால் இவருக்கு திருவிதாங்கூர் மாகாணத்தில் இருந்த நாயர்களின் அடக்குமுறையை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்து. 

நேசமணி இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர். திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்து ஆசிரியர் தொழிலில் ஈடுபட்ட இவர், பின்னர் திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் சேர்ந்து பி.எல். பட்டம் பெற்றார். பின்னர் நாகர்கோவில் கோர்ட்டில் 1921 ஆம் ஆண்டு வக்கீலாகப் பதிவு செய்து பணியாற்றினார். நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆதிக்க சாதி வழக்கறிஞர்கள் உட்கார நாற்காலியும் ஒடுக்கப்பட்ட சாதி வழக்கறிஞர்களுக்கு குந்துமனையும் (Stool) இடப்பட்டிருந்ததை, முதல் நாளன்றே காலால் உதைத்துத் தள்ளிவிட்டு, நாற்காலியால் உட்கார்ந்து நீதிமன்றத்தில் சாதி்க் கொடுமையை ஒழித்தார். அதேப் போன்று நாகர்கோவில் Bar Association-ல் ஆதிக்க சாதி வக்கீல்களுக்கும் ஒடுக்கப்பட்ட சாதி வக்கீல்களுக்கும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்த குடிநீர்ப் பானையை உடைத்துவிட்டு, அனைத்து வக்கீல்களுக்கும் பொதுவாக ஒரே பானையை வைத்தார். அந்த அளவிற்கு சமுதாய சீர்திருத்தத்தில் அக்கறை எடுத்துக்கொண்டார். பொது வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பு நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் இருந்தார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாகி சட்டசபைக்கும் சென்றார். தொடர்ந்து நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக தான் இறக்கும் வரை பணியாற்றினார்.

குமரி விடுதலைப் போராட்டம்

“குமரி விடுதலைப் போராட்டம்” அல்லது “தெற்கு எல்லைப் போராட்டம்” என்பது தமிழ் பேசும் குமரி மக்கள் திருவிதாங்கூரிலிருந்து குமரி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க திரு மார்சல் ஏ. நேசமணி தலைமையில் 1947 முதல் 1956 வரை நடத்தியப் தொடர் போராட்டத்தைக் குறிக்கும் . இப்போராட்டத்தின் விளைவாக நவம்பர் 1, 1956 ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. இப் போராட்டத்தை தலைமைதாங்கி வழிநடத்தி வெற்றி பெற்றதனால் குமரி மக்கள், நேசமணியை குமரித் தந்தை என்று அழைக்கின்றனர்.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. ஆனால், அங்கு பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்தனர். இவர்கள், இம்மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க விரும்பினர். இதற்கான போராட்டம் வெடித்தபோது, அதை அடக்க, கேரள அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டது. நேசமணி தலைமையில் இந்த போராட்டம் எழுச்சி பெற்றது. தமிழர்கள் பெரும்பாலாக வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தெற்குப் பகுதிகளான கல்குளம், விளவங்கோடு, தோவாளை, மற்றும் அகஸ்தீசுவரம் ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க மூன்று முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது.

முதல் காரணம்

இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் ஒருங்கினைந்த வளர்ச்சிக்காக ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து செயல்படுத்தியது. இதன்படி முதலாவது ஐந்தாண்டு திட்டம் 1950 முதல் 1955 வரை செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் தீட்டப்பட்டது. அவை பெருஞ்சாணி அணைத் திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய்த் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், குழித்துறை நீரேற்றுப்பாசனம் (Lift irrigation) திட்டம், ஆகியன ஆகும். இம்முக்கிய நீராதாரத் திட்டங்களை சுதந்திர திருவிதாங்கூர் அரசு செயல் படுத்தவில்லை. இதனால் மக்கள் இந்த அரசு மீது வெறுப்படைந்தனர். ஐந்தாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த திட்டங்களையும் செயல்படுத்த முன்வரவில்லை. மக்கள் தலைவர்கள் பலமுறை வேண்டிக்கேட்டுக் கொண்டும், இப்பகுதி வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேண்டுமென்றே வட திருவிதாங்கூர் வளர்ச்சிக்கென திருப்பிவிட்டது. இதனால் தென் திருவிதாங்கூர் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளை முற்றிலும் புறக்கணித்தது பட்டம் தாணு பிள்ளையின் அரசு. இத்தகைய தென் பொருளாதார வளர்ச்சிப் புறக்கணிப்பு, தாய் தமிழகத்துடன் இணைவதற்கான கோரிக்கை வலுவடைய முக்கிய காரணியாக அமைந்தது.

இரண்டாம் காரணம்

திருவிதாங்கூர் நாடு இந்து ஆகம அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டமையால் சாதிக் கோட்ப்பாடுகள் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. உயர் இந்துக்கள், இழிவு இந்துக்கள் என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும், நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுபடுத்தினர். இந்த நிலை மாற திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து செல்ல தமிழர்கள் விரும்பினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது.

மூன்றாம் காரணம் 

பட்டம் தாணு பிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் முதலமைச்சராக அப்போது செயலாற்றி வந்தார். இவர் ஒடுக்கப்பட்ட சமூகம் என கருதப்பட்டவர்களின் மேல் கடுமையான அடக்குமுறைகளை பயன்படுத்தினார். மங்காட்டில் தேவசகாயத்தையும், கீழ்குளத்தில் செல்லையன் என்பவரையும் மலையாளக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து இரு சாதிகாரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. நாயர்களுக்கு தாணுபிள்ளையின் அரசு ஆதரவு அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் முழுவதிலும் விடுதலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்தில் பட்டம் தாணு பிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின் படி தமிழக மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் மார்த்தாண்டத்தில் ஆறு பேரும், புதுக்கடையில் ஐவரும் குண்டடிப்பட்டு இறந்தனர். இவர்களில் ஐந்துபேர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க தாணுபிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அன்று முதல் (11-08-1954) தாணுபிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02-1955), அதாவது 188 நாட்கள், விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுக்காக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது காவல் துறையினர் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இதுவும் பிரிவினைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நேசமணியின் பொதுப்பணி

நேசமணி அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட பின்பு தமிழக காங்கிரசின் தலைவராகவும் ஆனார். பின்னர் நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமர் நேருவால் பாராட்டப்பட்டார். விடுபட்டுப் போன தமிழ்ப் பகுதிகளான செங்கோட்டை மேற்குப் பகுதி, தேவிக்குளம்-பீர்மேடு, நெய்யாற்றின்கரை மற்றும் சித்தூர் ஆகியவற்றைத் தமிழகத்துடன் இணைப்பதற்கு இந்தியப் பாராளுமன்றத்தில் 3 நாட்கள் தன்னந்தனியாக நின்று போராடினார். ஆனால் அதில் வெற்றிக் கிட்டவில்லை.

சுப்பிரமணிப்பிள்ளை என்ற பி. எஸ். மணியின் குமரித் தந்தை பட்டம்

சுப்பிரமணிப்பிள்ளை என்ற பி.எஸ்.மணி. கூறுகிறார்: “கழிந்த 30 ஆண்டுகளாக நான் உங்களை (நேசமணியை) அறிவேன். இதில் கழிந்த 17 ஆண்டுகளாக நான் உங்களுடன் சேர்ந்தும், பிரிந்தும், தூர நின்றும் உங்களை கவனித்திருக்கிறேன். குமரி மாவட்ட மக்களில் பெரும்பான்மையோர் உங்களிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருப்பதை காணுகிறேன். நீங்களும் இனி கட்சிசார்பற்ற உயரிய நிலையில் குமரி மக்களின் தந்தையாக அறிவுரை கொடுப்பவராக இருக்க வேண்டுமென்பது என் எதிர்பார்ப்பு”. பி. எஸ். மணி நேசமணிக்கு “குமரித் தந்தை” என்ற பட்டத்தை அளித்தார்.

திருவிதாங்கூர் அரசிடம் போராடி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை இன்று அதே பகுதி மக்களே கேரளாவுடன் மீண்டும் இணைத்துவிடுங்கள் என்று கோரிக்கைவிடுக்கின்றனர், தமிழக அரசு தங்களையும், தங்கள் வாழ்வாதாரத்தையும் கண்டுகொள்ளவில்லை என்பதையே இதற்கு காரணமாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வரலாறு திரும்புகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )