இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

​தணிக்கைக் குழு தணிக்கைக்குப் பிறகு இன்னொரு தணிக்கையா !!!

November 8, 2018
Image

சந்திர பாரதி

கட்டுரையாளர்

Image

மத்திய அரசின் செய்தி ஒளிபரப்பு அமைச்சரவையின் அங்கமான தணிக்கை குழு பாராளுமன்ற சட்டத்தின் படி அமைக்கப்பட்டது. சினிமடோஃகரப் சட்டம் 1952இன் படி திரைப்பட தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன அங்கீகாரம் பெற்றது.

தணிக்கை குழுவில் இடம் பெறுபவர்களுக்கான தகுதிகள் வரையறுக்கப்பட்டு தணிக்கை குழு உறுப்பினர்களால் திரைப்படங்கள் பார்க்கப்பட்டு திரையிட அனுமதி வழங்கப்படுகிறது. நீதிமன்றம், நடுவர் மன்றம், தீர்ப்பாயத்திற்கு இணையான அந்தஸ்தைப் பெற்றது திரைப்பட தணிக்கைக் குழு. தணிக்கைக் குழுவால் பார்க்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டால் மேல் முறையீடு செய்யும் வசதிகளும் பெற்றது. தணிக்கை குழுவால் முடிவெடுக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்ட பிறகு அதுவே இறுதி முடிவு. பாகுபாடுகள் காண்பிக்கப்பட்டிருந்தால் நீதிமன்ற முறையீடுகளுக்கு வழி வகை உண்டு.

திரைப்படங்களைத் தணிக்கை செய்ய தணிக்கைக் குழுவிற்கு வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தணிக்கைக் குழு திரைப்படத்தைப் பார்வையிட்டு, திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கருத்துகள், காட்சிகளின் தன்மை, வன்முறை போன்றவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தி சான்றிதழ்களை வழங்குகின்றன.

எந்த வழிகாட்டுதல்களின் அடிப்படையில் திரைப்படங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன?

1. இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் காட்சிகளோ வசனங்களோ உள்ளதா

2. அண்டை நாடுகளுடன் உள்ள நட்புறவை கெடுக்கும் வகையில் காட்சிகள் உள்ளனவா

3. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துகளோ, காட்சிகளோ உள்ளனவா

4. கண்ணியக் குறைபாடோ, நன்னடத்தைகளுக்கு விரோதமாகவோ பிரச்சாரம் செய்யப்படுகிறதா

5. தனி நபர் தூஷணைகளோ, அவதூறோ இடம் பெற்றிருக்கிறதா

6. நீதிமன்றங்களை அவமதித்து காட்சிகள் வசனங்கள் கதை கரு உள்ளதா

7. குற்றச் செயல்களை செய்ய தூண்டும் வகையில் கதையமைப்போ, காட்சிகளோ, வசனங்களோ உள்ளனவா போன்ற பல வழிகாட்டுதல்களின் அடிப்படையில் திரைப்படங்களை தணிக்கை செய்கின்றது. 

திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ்

திரைப்படத் தணிக்கைக் குழுவில் மத்திய அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, சமூக சேவகர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள், விமர்சகர்கள் என பல தரப்பட்டவர்கள் இடம் பெறுகின்றனர். தணிக்கைக் குழு எழுப்பும் கேள்விகளுக்கு திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் பதிலளிக்க வேண்டிய இடத்திலிருக்கிறார்கள். மிகுந்த பொருட்செலவுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் தணிக்கைக் குழு சான்று வழங்கிய பிறகே சந்தைக்கு வர இயலும். தணிக்கைக் குழுவின் சான்று இந்தியா முழுமைக்கும் செல்லுபடியாகக் கூடியது. ஒரு திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழின் ஆயுள் 10 ஆண்டுகள்.

தனியொருவரின் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டாலும், முறையான தணிக்கைக்குப் பிறகே பொது மக்களின் பார்வைக்கு வருகிறது. திரைப்படத்தின் வெற்றிக்காக, ரசிகர்களின் வேண்டுகோளுக்காக திரைப்படத்தின் நீளத்தை குறைப்பது வழி வழியாக நடந்து வருவது தான். வியாபரம் சம்பந்தப்பட்டது. ஆனால், திரை அரங்குகளுக்கு வந்த திரைப்படத்தில் காட்சிகளை நீக்கக் கோருவது நியாயமா என்ற கேள்வி இயல்பானது. அதுவும் அரசியல் காரணங்களுக்காக காட்சிகளை நீக்க கோருவது போராட்டம் நடத்துவது அரசியல் சாசனம் அளித்துள்ள பேச்சு, கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்ற கருத்து திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்களால் எழுப்பப்படுகிறது. இது போன்ற கோரிக்கைகள் சமீப காலங்களில் அதிகரித்து வருவது அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு அதிர்ச்சியையும் அச்சத்தையும் தோற்றுவிக்கிறது.

சமீப காலங்களில் திரைப்படங்களின் முகப்பில் பொறுப்பு துறப்பு வாசகங்கள் இடம் பெற அரம்பித்துள்ளது திரைப்படங்களுக்கு புற வெளியிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு சான்றாய் உள்ளது என்றே கூற வேண்டும். சரித்திர கதைகளை கற்பனையோடு திரைப்படமாக்கினால் எதிர்ப்பு எழுகிறது. சமூக அவலங்களைத் தோலுரித்து காட்டும் வகையில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. எந்தக் கதையும் முழுக்க முழுக்க கற்பனையாக இருந்து விட முடியாது. களத்தில் ஏற்பட்ட தாக்கமே ஒரு படைப்பாளியின் உள்ளத்தில் தீயைப் பற்ற வைக்கிறது, ஒரு படைப்பில் முடிகிறது என்பதே நிதர்சனம். 

வரலாற்று பாத்திரங்களை கையாளும் போது ஒவ்வொருவர் பாணியும் வேறுபடலாம், ஆனால் வரலாறு மாறாதல்லவா. அதே போல சமூகப் பிரச்சனைகளில் ஒவ்வொருவர்க்கும் ஒரு பார்வை இருக்கக் கூடும். ஒரு படைப்பாளியாக அந்த நபர் பிரச்சனையை அணுகும் கோணம் வேறுபடலாம். ஒரு அரசியல் சித்தாந்ததிற்கு எதிரான படைப்பாகக் கூட அமையலாம். பொது வெளிக்கு வருமுன் முன்னே குறிப்பிட்ட அளவுகோல்களின் படியே தணிக்கை செய்யப்பட்ட அனுமதிக்கப்படுகிறது என்பது கவனிக்கத் தக்கது.

ஒரு கதாபாத்திரத்தின் பெயர், நடை, உடை பாவனை ஒருவரை ஒத்திருக்கிறது என்பது தணிக்கை செய்யப்பட்ட திரைப்படத்திலிருந்து காட்சிகளை நீக்கக் கோர தகுதியான கோரிக்கையாகக் காண முடியாது. சமூக நடவடிக்கைகளை, அரசின் திட்டங்களை விமர்சிக்க சாதாரண குடிமகனுக்கும் உரிமை உண்டு. இலவசங்களால் இந்த நாடு குட்டி சுவறானது போன்ற கருத்துகள் தனி மனிதனுடைய கருத்துகள் மட்டுமல்ல, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளே கூட கடுமையான விமர்சனக்களை வைப்பதை தினம் தினம் காண்கிறோம்.

வெகு ஜன ஊடகமான திரைப்படங்கள் மூலம் தங்களது கட்சியின் கொள்கைகளை கொண்டு செல்வதை வரவேற்கத் துடிக்கும் அரசியல் கட்சிகள் மாற்றுக் கருத்தைச் சொல்லும் திரைப்படங்களைக் கண்டிப்பது சந்தர்ப்பவாதமே. திரைப்படத்தின் கருத்துக்களுக்கோ, வசனங்களுக்கோ கதாநாயகன் சொந்தக்காரர் அல்ல. அப்படியே அவரது கருத்துகள் தான் திரைப்படம் என்றால், திரைப்படத்தில் சொல்லப்பட்ட கருத்து விமர்சனத்திற்கு உரியதேன்றால் கடுமையாக விமர்சியுங்கள். கருத்துகளுக்கேற்ப அவரது நடவடிக்கைகள் வாழ்வியல் இருக்கிறதா என்று கேள்வி எழுப்புங்கள். 

கதாநாயகர் பதில் சொல்லக் கடமைப்பட்டவராகிறார். அதை விடுத்து, காட்சிகளை நீக்க சொல்லி அச்சுறுத்தலோ அழுத்தங்களோ கொடுக்காதீர்கள். அவ்வாறு கொடுக்கப்படும் அழுத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அரசியல் சாசனத்தின் மீது உறுதியளித்து உருவான கட்சிகளின் தலைமையோ, ஆட்சியில் உள்ள அமைச்சர்களோ கருத்துகள் தெரிவிப்பது சட்ட விரோதம். சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டது.

இந்திய அரசியல் சாசனம் சட்டப்படி அங்கிகரிக்கப்பட்ட தொழில் செய்ய இந்திய குடிமகனுக்கு உரிமையளித்துள்ளது. திரைப்படத் துறையும் அவ்வாறே அனுமதிக்கப்பட்ட தொழிலே. அர்சையல் நிர்பந்தங்களால் தொழில் நடத்த முடியாத நிலையை ஏபடுத்துவது அடிப்படை உரிமையை மறுக்கும் செயல். குற்றம். திரைப்படத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தங்களைப் பாதிப்பதாக கருதும் பட்சத்தில் நீதிமன்றங்களை நாடுவதே முறையான செயலாக இருக்கும். 

அச்சுறுத்துவது, அழுத்தம் கொடுப்பது கண்டிக்கத்தக்கது. அதிமுக அமைச்சர்களில் சிலர் ஜெயலலிதா உயிருடன் இருந்தால் அரசியலில் மாற்றுக் கருத்துகள் கொண்ட திரைப்படம் எடுத்து வெளியிட தயாரிப்பாளர்கள் அஞ்சுவர் என ஜெயலலிதாவை ஒருசர்வாதிகாரி போல சித்தரிப்பதும் கண்டிக்கத்தக்கதுடன் ஜனநாயகத்தை கேள்விக்குறியதாக்குவதாகும்.

இதே நிலை தொடர்ந்தால், பஞ்ச தந்திரக் கதைகளையும் ஆடும் ஓவியக் கதைகளையும் மட்டுமே தயாரிக்க முடியும். அதிலும், குறிப்பாக ஆடும் ஓவிய கதைகளிலும் கூட அரசியல் காண்பார்கள் நமது தலைவர்கள்.

வாழ்க கருத்து, பேச்சு சுதந்திரம்....

Chandra Barathi

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )