இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​டிரில்லியன் டாலர் ‘ஆப்பிள்’..!

August 3, 2018
Image

கா.அருண்

கட்டுரையாளர்

Image

முன்னோடி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், உலகின் முதல் ஒரு டிரில்லியன் ( Trillion) டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 68 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பு பெருமானமுள்ள நிறுவனம் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை படைத்துள்ளது. 

கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டின் முடிவில், தங்களது எதிர்பார்ப்பையும் விஞ்சிய லாபத்தை அடைந்துள்ளதாகவும், 20 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அந்நிறுவனத்தின் பங்குகளை மீண்டும் வாங்கியுள்ளதாகவும் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஆப்பிள் நிறுவனம், நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது. 

இந்த அறிவிப்புக்குப் பின்னர், அந்நிறுவனத்தின் பங்குகள் கடுமையான ஏற்றத்தை சந்தித்தது, பங்கு ஒன்றின் விலை அதிகபட்சமாக 207.05 டாலர்கள் அளவுக்கு அதிகரித்து, 2.8% அளவுக்கு பங்குகள் ஏற்றத்தை சந்தித்தன. இதன் மூலம் நிறுவன மதிப்பில் ஒட்டுமொத்தமாக 9 சதவீத வளர்ச்சியை சந்தித்தது.

கேரேஜில் தொடங்கப்பட்ட ஆப்பிள்:

1976ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ், Steve Wozniak மற்றும் Ronald Wayne என்ற  மூவர் கூட்டணியில், வீட்டின் பின்புறம் உள்ள கேரேஜ் ஒன்றில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று சில நாடுகளின் பொருளாதாரத்தைக் காட்டிலும் மிஞ்சிய வருமானம் பெரும் நிறுவனமாக மாறியுள்ளது.

ஒரு காலத்தில் அமெரிக்காவின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்த ExxonMobil, Procter & Gamble மற்றும் AT&T ஆகிய நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்பைக் காட்டிலும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு தற்போது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்க பங்குச்சந்தையில் தற்போது ஆப்பிள் நிறுவனம் மட்டுமே 4% பங்களிப்பை கொண்டுள்ளது.

கிட்டத்தட்ட 17 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகம். அதாவது நெதர்லாந்து, துருக்கி, சவூதி அரேபியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் ஜாப்ஸ்:

ஆப்பிள் நிறுவனத்தை பொருத்தமட்டில் இந்த வளர்ச்சியில் ஸ்டீவ் ஜாப்ஸின் பங்கு மகத்தானது என்றே குறிப்பிட வேண்டும். 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் இருந்து 1980ஆம் ஆண்டின் மத்தியில் ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேற்றப்பட்டார். பின்னர் திவால் நிலைக்குச் சென்ற அந்நிறுவனத்தை மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து ஸ்டீவ் ஜாப்ஸ் நிமிரச் செய்தார். 

2007ஆம் ஆண்டு ‘ஆப்பிள் கம்யூட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தின் பெயரை ஆப்பிள் என மாற்றியமைத்தார். பின்னர் வளர்ந்து வரும் மொபைல் சந்தையை கருத்தில் கொண்டு அதே ஆண்டில் ஐ-போனை அறிமுகம் செய்தார். அதன் பின்னர் நோக்கியா, மைக்ரோசாஃப்ட், இண்டெல், சாம்சங் ஆகிய முன்னணி நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளியதுடன், 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னணி நிறுவனமாக விளங்கிய ExxonMobil-யை பின்னுக்குத்தள்ளிவிட்டு அமெரிக்க வர்த்தக நிறுவன ஜாம்பவான் என்ற அந்தஸ்தை அடைந்தது. ஒட்டுமொத்தத்தில் ஐ-போன் தொழில்நுட்ப சாதனங்களில் மைல்கல்லாகவே மாறியது.

2011ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவையடுத்து டிம் குக், ஆப்பிள் நிறுவன தலைமை பொறுப்புக்கு வந்தார், அவரின் தலைமையின் கீழ் ஆப்பிள் நிறுவனம் இரட்டிப்பு வளர்ச்சியை சாத்தியமாக்கியது, இருப்பினும் ஐ-போனுக்கு அடுத்த கட்ட தொழில்நுட்ப சாதனத்தை உருவாக்காதது ஒரு குறையாகவே தற்போதும் இருந்து வருகிறது. சமீப காலமாக ஐ-போனின் விற்பனை சரிவை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அமேசான் முந்துமா?

ஆப்பிள் நிறுவனம் அசுர வளர்ச்சியை சந்தித்து வரும் அதே வேளையில் ஸ்மார்ட் போன்களுக்கான தேவை, குறையத் தொடங்கியதையடுத்து ஐ-போன் போன்று தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்தவல்ல ஒரு சாதனத்தை ஆப்பிள் உருவாக்கத் தவறுப்பட்சத்தில் Alphabet Inc அல்லது Amazon போன்ற நிறுவனங்களிடம் தனது முதல் இட அரியணையை ஆப்பிள் இழக்க நேரிடும் என்பதும் கவனிக்கத்தக்கது.

1976ல் 800 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் 10% பங்குகளின் இன்றைய விலை தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களுள் ஒருவரான Ronald Wayne, 1976ஆம் ஆண்டிலேயே அந்நிறுவனத்தில் வைத்திருந்த 10% பங்குகளை 800 டாலர்களுக்கு ( இன்றைய மதிப்பில் 54,000 ரூபாய்) விற்பனை செய்தார். ஸ்டீவ் ஜாப்ஸை விடவும் 21 ஆண்டுகள் வயதில் மூத்தவரான Ronald Wayne தான் ஆப்பிள் நிறுவனத்தின் லோகோவை உருவாக்கிய்வர் ஆவார்.

கம்யூட்டர்கள் மீது தனக்கு விருப்பம் இல்லை என்பதாலேயே பங்குகளை விற்றுவிட்டு ஆப்பிளில் இருந்து வெளியேறியதாக குறிப்பிடும் Ronald Wayne,1976ல் 800 டாலர்களுக்கு விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்தின் 10% பங்குகளின் தற்போதைய மதிப்பு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதில் சுவாரஸ்யம் அளிக்கும் வகையில் வாழ்க்கையில் ஒரு முறை கூட ஆப்பிள் ஐ-போனை பயன்படுத்தியது இல்லை என்று கூறுகிறார் Wayne, ஒரு முறை தனக்கு பரிசாக கிடைத்த ஐ-பேடை கூட தனது மகனிடம் கொடுத்துவிட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். 

சில நாடுகளின் பொருளாதாரத்தைக் காட்டிலும் கூடுதலான மதிப்பு கொண்டதாக மாறியுள்ள ‘ஆப்பிள்’ எனும் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிவிட்டு மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் ஆசைப்பட்டது போன்று, அந்நிறுவனம் தொழில்நுட்ப புரட்சியை எதிர்காலத்திலும் படைக்கும் என நம்பலாம்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )