இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

​ஆங்கிலேயனிடமிருந்த அக்கறை நமக்கு இல்லாமல் போனது ஏன்?

August 23, 2018
Image

லாவண்யா

செய்தியாளர்

Image

மாஸ்கோவில் மழை பெய்தால், மதுரையில் குடைபிடிப்பார்கள் என்று மார்க்சிஸ்ட்டுகளைப் பார்த்து சொல்வது வழக்கம். இன்று மார்க்சிஸ்ட்டுகள் ஆளும் மாநிலமான கேரளாவை புரட்டிப் போட்ட வெள்ளத்தில் இருந்து, பாடம் பெற வேண்டிய சூழலுக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவ மழை இந்த ஆண்டு கடவுளின் தேசத்தை முற்றுலுமாக புரட்டிப்போட்டு, கடவுளால் கை விடப்பட்ட தேசமாக மாற்றி விட்டது. இது ஒருபுறமிருக்க மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழையினால் உருவாகும் நீர் கர்நாடகாவில் இருந்து, தமிழகத்திற்கு வரும் போது, தமிழகம் அந்த மழைநீரின் மூலம் பயனடைவதற்குப் பதிலாக, கூடுதல் தண்ணீரால் ஆபத்துகளைச் சந்திக்கும் மாநிலமாக மாறியுள்ளது.

குடகில் பிறக்கும் காவிரி ஆறு டெல்டா மாவட்டங்களை வந்தடையும் வழியில்,  மிக முக்கிய அணையாக கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை திகழ்ந்து வருகிறது. அதன் வடிவத்தையும் பிரம்மாண்டத்தையும் வியந்து புகழ்ந்த ஆங்கிலேயர்கள், நீர் மேலாண்மைக்கு கூடுதல் வலு சேர்க்க, சர் ஆர்தர் காட்டன் என்ற பிரிட்டிஷ் பொறியாளரால் காவிரியின் குறுக்கே ஓர் அணை கட்டுகின்றனர். 

பொங்கி வரும் காவிரியின் வேகத்தை  மட்டுப்படுத்துவதற்காக அந்த அணை கட்டப்பட்டது. மேல் அணை எனப்படும் முக்கொம்பு அணைதான் அது. இந்த முக்கொம்பு மேலணை 1836ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையின் மேல், சாலை அமைக்கப்பட்டு, சிறிய ரக வாகனங்கள் குறிப்பாக இரு சக்கர வாகனங்கள், குறுக்கு வழியாக செல்ல இந்த அணைச் சாலையை பயன்படுத்தி வந்தனர். வாத்தலை மற்றும் முக்கொம்பு  பகுதிகளை இணைக்கும் பாலமாக இந்த மேலணை சாலை விளங்கியது.

காவிரியில் ஏற்படும் வெள்ள நீரை கொள்ளும் இடம் கொள்ளிடம். காவிரி நீர் முக்கொம்பை வந்து அடையும் போது அது காவிரியாகவும் கொள்ளிடமாகவும் பிரிகிறது. கொள்ளிடத்தின் நீர் பெரும்பாலும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. 

இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகமாக பெய்தது. இதன் விளைவாக காவிரியில் 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக நீர் திறந்துவிடப்பட்டது. இப்படியாக கடந்த ஒரு மாத காலமாக காவிரியில் நீர் திறந்து விடப்பட்ட நிலையில், நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் முக்கொம்பு மேலணையின் 7 மதகுகள் அடித்து செல்லப்பட்டு, கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்தது. 

கண் இமைக்கும் நேரத்தில் மேலும் இரண்டு மதகுகளும் ஆற்றோடு அடித்து செல்லப்பட்டது. கிட்டதட்ட 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலம் இடிந்தது. பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளாததே இதற்குக் காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

அணைகளின் பாதுகாப்பில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அக்கறை செலுத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் முறையான பராபரிப்பு பணிகள் எதுவும் இங்கு மேற்கொள்ளப்படவில்லை. 

இதுகுறித்து ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் வீரப்பன் அவர்களிடம் கேட்ட பொது, அதிக அளவில் நீர் தேக்கம் உள்ள அணைகளை பராமரித்து பாதுகாப்பது மிக மிக அவசியம் என்கிறார். மேலும் மேட்டூர், வைகை, பவானி சாகர் போன்ற அணைகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறைந்த நீர் தேக்க அளவு கொண்ட முக்கொம்பு மேலணைக்கு வழங்கப்படுவது இல்லை. மேலும் பராமரிப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுவது இல்லை, அவ்வாறு ஒதுக்கினாலும் அது போதுமானதாக இருப்பதில்லை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

முக்கொம்பில் ஒரு டி.எம்.சிக்கும் குறைவான அளவே நீர் தேக்கி வைக்க முடியும் என்பதால், மதகுகள் உடைந்தது அபாயகரமான விஷயம் இல்லை என்றாலும், கொள்ளிடத்தின் நீர் விவசாயத்திற்கு பயன்படுவதால் விளை நிலங்கள் நீரில் மூழ்குவது விவசாயிகளை கவலை கொள்ளச் செய்யும் என்கிறார் வீரப்பன்.

பல ஆண்டுகள் கழித்து, நீர் வரத்து அதிகம் இருந்ததால், யாரும் எதிர்பாராத இந்த விபத்து நேரிட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீரோட்டம் இருக்கும் போதே நவீன தொழில்நுட்பம் மூலம் ஒரு மாத காலத்திற்குள் பாலத்தை சீரமைக்க முடியும் என்றும் வீரப்பன் கூறுகிறார். கேய்சம் பவுண்டேஷன் (kaisem Foundation) மற்றும் காம்பேக்ட் பைல்ஸ் ( Bored Compact Piles) ஆகிய தொழில்நுட்பம் மூலம் ஆற்றில் நீர் இருக்கும் போதே நிலத்தில் துளையிட்டு தூண்களை எழுப்பி அணையை சீர் செய்ய முடியும் என்கிறார்.

கொள்ளிடம் ஆற்றில் கடந்த 1976ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் அளவுக்கு தற்போது வெள்ளம் ஏற்படவில்லை. ஆதலால் மதகுகள் உடைந்து பாலம் சேதமடைந்த இந்த சம்பவத்திற்கு காரணம் கொள்ளிடம் ஆற்றில் சட்டத்திற்கு புறமாக நடைபெறும் மணல் திருட்டுதான் என்ற ஒரு குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. 

அணைக்கட்டுகளிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் மணல் அள்ள வேண்டும் என்ற விதி இருந்தாலும், விதி மீறல் காரணமாக மணல் அள்ளியதே, அணையின் மதகுகள் அடித்துச் செல்லப்பட காரணம் என்கிறார், பொதுப்பணித்துறை முன்னாள் தலைமை பொறியாளர் ராதாகிருஷ்ணன்.  

எதிர்கால தலைமுறையின் நலனுக்காக இந்த கட்டுமானத்தை அர்ப்பணிப்பதாக, சர் ஆர்தர் காட்டன் கல்வெட்டில் பொறித்துள்ளார். ஆனால் சமூக அக்கறையில்லாமல் ஆற்றுப் படுகையில் நடந்த சட்டவிரோத மணல் திருட்டால் நிகழ்ந்த இந்த விபத்து, எதிர்கால தலைமுறையை அல்ல, நம்மையே அச்சம் கொள்ள வைத்துள்ளது.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )