இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

Jallikattu Game

​அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வுக் கூட்டம் நடத்தியது பிழையா?

November 16, 2017
Image

சந்திரபாரதி

கட்டுரையாளர்

Image

ஒரு நிறுவனத்தில் தலைவர் அவருக்கு கீழ் பணி செய்யும் துறைத் தலைவர்கள் அவர்களுக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் என்று அதிகார பிரமிட் அமைந்திருக்கும். நிறுவனத் தலைவர் பங்குதாரர்களுக்கு கட்டுப்பட்டவர், அவர்கள் முதலீட்டுக்கு பாதுகாவலர், முதலீட்டின் மதிப்பை வளர்க்க வேண்டியவர். நேர்மையான திறமையான நிர்வாகத்திற்கு அவரே பொறுப்பு. சாதாரணமாக துறைத் தலைவர்களைத் தாண்டி நிறுவனத் தலைவர் வேறு எவரிடமும் ஆலோசனை பெறுவதோ, வழங்குவதோ, வளர்ச்சித் திட்டங்களின் நிலைகள் குறித்தோ அறிந்து கொள்வதில்லை. சில நிறுவனத் தலைவர்கள், துறைத்தலைவர்களையும் தாண்டி கீழ்மட்ட அதிகாரிகள் ஊழியர்களிடமும் நல்லிணக்கம் காட்டி அவர்களது குறை நிறைகளைக் கேட்டறிந்து துறைத்தலைவர்களிடம் ஆலோசித்து நிறுவன வளர்ச்சிக்கான பாதையையும் ஆலோசனையும் வழங்கும் வழக்கமுள்ளவர்கள். சிறப்பாகவும் இலாபகரமாகவும் திறமையாகவும் ஊழியர்களிடையே மிகச் சிறந்த நல்லுறவைக் கொண்ட நிறுவனங்களில் இது போன்ற நிலைப்பாட்டைக் காணலாம்.


இது போன்ற கலைந்துரையாடல்கள் தலைமை அஞ்சுவதற்கல்ல நமதானது என்ற எண்ணத்தையும் அதன்பால் உருவாகும் உற்சாகத்தையும் பணியில் அர்ப்பணிப்பையும் உருவாக்குகிறது. இது போன்ற நடைமுறை இன்று பல நிறுவனங்களில் உள்ளன. கடை நிலை ஊழியர் கூட நிர்வாக இயக்குநருக்கு கடிதம், மின்னஞ்சல் மூலம் நிறுவன வளர்ச்சிக்கான புதிய சிந்தனைகள், ஆலோசனைகள், ஏதேனும் குறைபாட்டினைச் சுட்டிக் காட்டுவது போன்றவை ஆதரிக்கப்பட்டே வருகின்றன. இது குறித்து தலைமை நிர்வாகம் நேரடி நடவடிக்கைகள் எடுப்பதில்லை. சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்களுக்கு சுட்டிக் காட்டி தக்க சீர் நடவடிக்கைகள், வளர்ச்சிக்கான முன்னெடுப்பு திட்டங்கள்  செயல்படுத்தப்படுகின்றன. இது ஆரோக்கியமான போக்காகவே கருதப்படுகிறது. துறைத்தலைவர்களும் அவரது அதிகார எல்லை ஊடுருவப்படுகிறது என எண்ணுவதில்லை. அவ்வாறு எண்ணும் துறைத்தலைவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு ஏற்றவர்களாக இலங்குவதில்லை என்பதும் அனுபவப் பாடம். எல்லைகள் வகுத்து அதற்குள் மற்றவரை நுழைய அனுமதிக்காமல் பாதுகாப்பது மிருக குணாதிசயம். இல்லாத எல்லையைக் காப்பாற்றத் தேவையற்ற போராட்டங்களால் பாதிப்புகள் மட்டுமே மிஞ்சுகின்றன. எல்லைகள் வகுத்து அதனைப் பாளையக்காரர்களைப் பாவிப்பது வலதுசாரி சிந்தனையையொத்தது. குழுவாகப் பணியாற்றும் சிந்தனைக்கு எதிரானது. 


இதனை அப்படியே ஆளுநரின் செயல்பாட்டிலும் பொருத்திப் பாருங்கள். மக்கள் நலப் பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்றுள்ளது, ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா, மேலும் சிறப்பாக மக்கள் பணியாற்ற இன்னமும் என்ன தேவை என்பதை திட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். கேட்டறிந்த விடயங்களின் அடிப்படையில் முதல்வர் அடங்கிய அமைச்சர் குழுவிடம் தெரிவித்தோ, விவாதம் செய்தோ அவர்களது ஆலோசனையைப் பெற்று, ஆலோசனை வழங்கி ஆவன செய்ய அரசிற்கு அறிவுறுத்துவார், வழிகாட்டுவார். இதில் என்ன தவறு இருக்க முடியும். இதில் தவறு காண்பதில் என்ன இருக்கிறதென்று அறிய இயலவில்லை. ஆளுநரை இக்கட்டு நேரத்தில் நாட்டாண்மையைப் போல் பாவிப்பது என்ற மனோபாவமே இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது.


இந்திய அரசியல் சாசனத்தின் படியே ஆளுநர் நியமிக்கப்படுகிறார். அவருக்கென்று சில கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளது உண்மைதான். அரசியல் சாசனப்படி ஆளுநரே மாநிலத்தின் பாதுகாவலர். அனைத்து அரசு ஆணைகளும் அவரது பெயரிலேயே வெளியிடப்படுகின்றன. மாநிலத்தின் அரசியல் மற்றும் சமூக நடப்புகளை குடியரசுத் தலைவருக்கு கால இடைவெளிகளில் அறிக்கையாக அளிக்க வேண்டிய கடமையும் உள்ளவர். மக்கள் தொடர்பே இன்றி நாட்டு நடப்பை ஒரு ஆளுநர் எவ்வாறு கணிக்க இயலும்? ஆளுநரின் நடவடிக்கைகள் அமைச்சரவையின் ஆலோசனைப்படி இருக்க வேண்டும் என்பதும் அரசியல் சாசன சட்டம் விதித்துதான். ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்திட முடியாது தான், ஆயினும் அமைச்சரவைக்கு, முதல்வருக்கு அறிவுறுத்தல்கள், ஆலோசனை வழங்க தடையெதுமில்லை.

 
எதிர்க்கட்சிகள் பல நேரங்களில் ஆளும் அரசின் மீது மக்கள் நலத் திட்டங்களில் ஊழல் செய்வதாக  குற்றச்சாட்டுக்களை பட்டியிலிட்டு அளித்து நடவடிக்கை எடுக்கக் கோருகிறார்கள். உண்மை நிலை அறியாத ஆளுநர் எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும்? குற்றம் சாட்டப்பட்டவர்களிடமே விளக்கம் கேட்பாரா?... கேலிக்குறியதாக இருக்காதா?... மாநில நிர்வாகம் தன்னால் பதவிப் பிரமாணம் செய்யப்பட்ட அமைச்சரவையால் திறமையாக செயல்படுகிறதா என்பதை அறிந்து கொள்ளும் உரிமை ஆளுநருக்கு இருப்பதாகவேக் கருதுகிறேன். தேநீர் விருந்துகள் அளிப்பதும், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே வராமலிருப்பது மட்டுமே ஒரு ஆளுநரின் கடமையாகக் கருதவில்லை. எனது பாதுகாப்பாளன் எனது நிலையைப் பற்றி முற்றிலும் அறிந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன்.


இந்திய இறையாண்மையின் கீழ் இந்திய அரசியல் சாசனத்தை ஏற்றிருக்கும் தமிழகம் ஆளுநர் என்ற அரசியல் சாசனப் பதவியையும் சேர்த்தே ஏற்றுக் கொள்கிறது. ஆளுநர் நேரடியாக எந்த உத்தரவையும் இட்டு விட முடியாது என்ற நிலையில் நாட்டு நடப்பை அறிந்துக் கொண்டு அமைச்சரவைக்கு ஆலோசனை சொல்லும் முயற்சியை கடுமையாக விமர்சிக்கத் தான் வேண்டுமா? மாநில சுயாட்சி கோரிக்கையைக் கைவிட்டுப் பல காலம் சென்ற பின், ஆட்டுக்கு தாடி இருந்து கொண்டும் வளர்ந்து கொண்டும் இருப்பதை ஏற்றுக் கொண்ட பின்பு, அதிகாரப் பறிப்பு எனக் கூக்குரலிடுவதில் அர்த்தம் தான் என்ன? 


அரசியல் சாசனப்படி ஆட்சி நடத்தபப்ட வேண்டும், குடிமகன்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் சாசனப் பதவிகளும் பொறுப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை முழுமையாக செயல்பட வேண்டும். ஆளுநரின் அதிகார உரிமைகள் குறித்த விளக்கங்கள் போதுமானதாக இல்லை அல்லது புரிதலில் பல கோணங்கள் இருப்பதாகக் கருதினால், உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும். ஆளுநர் முழுமையாகப் பணியாற்ற அரசியல் சாசனத்தில் விளக்கமோ, கூடுதல் பிரிவுகளோ தேவையெனில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இதுவே முழுமையான தீர்வாக இருக்கும்...

Image தொடர்புடைய செய்திகள்
தற்போதைய செய்திகள் Jan 21
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.75 (லி)
  • டீசல்
    ₹ 66.25 (லி)