இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

"வில்லனாக்கப்பட்ட கதாநாயகன்!" : லியோன் ட்ராட்ஸ்கி!

November 7, 2018
Image

வசந்த்குமார்

சமூக செயற்பாட்டாளர், கட்டுரையாளர்

Image

ஒரு பிரபல கதாநாயகரின் திரைப்படத்தை பாதி வரை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென அந்த பிரபல கதாநாயகன்தான் வில்லன் என்பதும், வில்லன்தான் கதாநாயகன் என்பதும்,  நமக்கு தெரியவந்தால் எந்த அளவிற்கு நாம் அதிர்ச்சிக்குள்ளாக வேண்டிவரும்? மேலும், இரண்டு ஆசான்கள் மனிதகுல நன்மைக்காக  முன்வைத்துள்ள வழிமுறையை வெற்றிகரமாக நடைமுறைபடுத்தபடுகிறதா என்பதே திரைக்கதையின் கிளைமாக்ஸ் என்று வைத்துக்கொள்வோம். இறுதியில் தலையில் அடித்து  படுகாயத்துக்கு உள்ளாக்கப்பட்ட நம் வில்லன் அந்த லட்சியத்தை அடையும்வரை சாகமாட்டேன் என்று உயிரை கையில் பிடித்துக்கொண்டு கண்விழிக்க போராடி, இறுதியில் மரணத்தை தழுவுகிறார். அவரது மரணப் போராட்டம் உலக மருத்துவ வரலாற்றின் ஒரு அற்புத நிகழ்வாக படிக்கப்படுகிறது. கதாநாயகன் வென்றுவிடுகிறார். இலட்சியம் தோற்கிறது. திரைப்படம் தொடரும் என்று முடிவடைகிறது. இப்போது நாம் நமது கதாநாயகர் வென்று விட்டதற்காக மகிழ்ச்சியடைய வேண்டுமா? அல்லது இலட்சியம் தோற்றதற்காக வருந்த வேண்டுமா? இத்தகைய ஒரு இக்கட்டான நிலையானது ரஷ்ய புரட்சி குறித்த வரலாற்றை நடுநிலையாக அலசி ஆராய்ந்து தேடலில் இறங்கும் நம் தலைமுறையை சார்ந்த இடதுசாரிகள் ஒவ்வொருவரும் ஏற்படுவது இயல்பாக உள்ளது. 

ரஷ்யப் புரட்சியை உள்ளடக்கிய உலக பாட்டாளி வர்க்கத்தின், வர்க்கப் போரின் வரலாறு தான் அந்த திரைப்படம். கொல்லப்பட்ட அந்த வில்லன் தான் லியோன் ட்ராட்ஸ்கி (Leon Trotsky). வெற்றிவாகை சூடிய நம் கதாநாயகன் ஜோசப் ஸ்டாலின். காரல் மார்க்ஸ் மற்றும் பிரெடரிக் ஏங்கல்ஸ் எனும் ஆசான்களால் முன்மொழியப்பட்ட உலகப் புரட்சிதான்  அந்த தோற்கடிக்கப்பட்ட இலட்சியம். சரி, ட்ராட்ஸ்கி ஏன் கொல்லப்பட்டார்? அவருக்கும் சோவியத் ஒன்றியத்தின் ஆளும் வர்க்கத்திற்கும் அப்படி என்னதான் பிரச்சனை? அந்தப் பிரச்சினையை குறித்து  நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? மனக் குமுறலோடு மரணத்தை எதிர்த்துப் போரிட்டு, இறுதியில் தனது நேர்மைக்காக உயிரை இழந்த ஒரு சாதாரண மனிதனின் 139-வது பிறந்தநாளான நவம்பர் 7-இல், அவரது நேர்மைக்கான மரியாதை நிமித்தமாக தெரிந்துக் கொள்வோம்.

உழைக்கும் மக்களின் கனவு கோட்டையான சோவியத் ஒன்றியம் தகர்ந்தது ஏன்? என்ற கேள்விக்கு எங்கு தேடினாலும் கிடைக்காத விடை ட்ராட்ஸ்கிக்கும், சோவியத் ஒன்றியத்தின் ஆளும் வர்க்கத்துக்கும் இடையேயான சச்சரவுக்குள் ஒளிந்துள்ளது. சோவியத் ஒன்றியம் உடைந்தது டிசம்பர் 26, 1991-இல் தான். ஆனால்,  இப்படியான ஒரு நிகழ்வு நடக்கப் போகிறது என்று 1936-லேயே ட்ராட்ஸ்கி உறுதியாக கூறினார். சோசலிசம் என்றால் என்ன? சோவியத் ஒன்றியத்தில் இருந்து சோசலிசமா? அவ்வாறு இல்லையென்றால் சோஷலிசத்தை அடைய என்ன வழி? 

முதலாளித்துவத்தின் அதிமுன்னேறிய நிலையில் உள்ள உற்பத்தித் திறனே சோசலிசத்தின் ஆரம்பப்புள்ளியில் இருக்க வேண்டிய உற்பத்தித் திறனின் அளவு. முதலாளித்துவத்தின் உச்சபட்ச வளர்ச்சியே சோசலிசத்தின் அடிமட்ட தொடக்கப் புள்ளியில் இருக்கவேண்டிய வளர்ச்சி. ஆகவே முதலாளித்துவத்தின் மிக முன்னேறிய கலாச்சார மட்டத்தில் உள்ள உற்பத்தித் திறனின் உச்சபட்ச நிலையில் இருந்தும், ஏகபோக உற்பத்தியின் அளவில் இருந்தும் சோசலிசத்தின் ஆரம்பப் புள்ளி தொடங்குகிறது. அந்த வகையில் சோசலிசப் புரட்சி என்பது உலகின் வளர்ந்த நாடுகளில்தான் தொடங்கும் என்றும், அந்த வரிசையில் புரட்சி இங்கிலாந்தில்தான் முதலில் நிகழும் என காரல் மார்க்ஸ் கணித்திருந்தார். இருப்பினும் ரஷ்யாவில் புரட்சி ஏற்படுவதற்கான வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை. பின்தங்கிய நாடுகளில் புரட்சி ஏற்பட்டால்கூட ஏதேனும் ஒரு வளர்ந்த நாட்டில், குறைந்தபட்சம் ஜெர்மனியிலாவது புரட்சி  ஏற்பட்டிருந்தால்தான் பின்தங்கிய நாடுகளின் அந்தப் புரட்சி நிலைக்கும் என்று கூறியிருந்தார். பின்தங்கிய நாடுகளில் புரட்சியின் மூலம் சமூக மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் கூட, வளர்ந்த நாடுகளின் மிக முன்னேறிய உற்பத்தி திறனை கொண்டிருந்தால் மட்டுமே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து இல்லாமையை ஒழித்து அந்த நாடுகளில் புரட்சியை தக்க வைக்க முடியும். ஏனெனில் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கூற்றுப்படி, சமூக மாற்றத்தின் போக்கை அந்த சமூகம் சார்ந்திருக்கும் உற்பத்திமுறையும் அந்த உற்பத்திமுறையின் உற்பத்தித்திறனுமே தீர்மானிக்கின்றன.

1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த புரட்சி நிலைக்குமா இல்லையா என்பது 1918-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியின் கையில்தான் இருந்தது. ஆனால், ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியின் துரோகத்தால் ஜெர்மன் பாட்டாளி வர்க்க புரட்சி வீழ்த்தப்பட்டது ரஷ்ய பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு பேரிடியாக அமைந்தது. இருந்தாலும், 1920-களில், குறிப்பாக லெனினின் உடல் நலக்குறைவு காலங்களின் போதும், அவரது மறைவுக்குப் பின்பும் கம்யூனிச அகிலத்தின் பணிகள் உலக புரட்சியை நோக்கி அல்லாமல் உள்நாட்டில் அதிகார வர்க்கத்தின் ஆட்சியை தக்க வைப்பதை நோக்கி மட்டுமே இருந்தது. ஜெர்மனியில் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான வாய்ப்புகள் அனைத்தையும் நழுவ விட்டது. ஜெர்மனியில் ஹிட்லர் இருந்த இடத்தில் பாட்டாளி வர்க்க பிரதிநிதியை அமரச்செய்ய இருந்த வாய்ப்புகள் அனைத்தையும் கோட்டை விட்டது. நாஜிக்களிடம் ஜெர்மனியை நழுவவிட்டது மட்டுமின்றி, நாஜிக்கள் ஆட்சிக்கு வந்தபின்பு அவர்களுடன் சமாதான ஒப்பந்தத்தையும் செய்து கொண்டது.

அதேசமயம் உள்நாட்டில் அதிகாரவர்க்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான அனைத்தையும் மூர்க்கமாக செய்தது. ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கியது; ஜெர்மனியுடனும் மற்ற உலக நாடுகளுடனும் தவறான கொள்கையை கடைபிடித்து வரும் கம்யூனிச அகிலத்தின் போக்கை விமர்சிக்கும் அனைவரையும் சிறையில் அடைத்தது. 1926-ஆம் ஆண்டு ஒரு கூட்டத்தில் லெனினின் மனைவி குரூப்ஸ்கயா பேசுகையில் "ஒருவேளை இல்லிச் (லெனின்) இந்நேரம் உயிரோடு இருந்தால், சிறையில் இருந்திருப்பார்." என்று கூறியது ரத்தத்தை உறைய செய்வதாக உள்ளது. தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டு ஜெர்மனியில்  தலையிடாக் கொள்கையை கடைபிடித்து ஜெர்மன் பாட்டாளி வர்க்கத்தை ரஷ்ய அதிகார வர்க்கம் கைவிட்டதற்கான விலையை, ரஷ்ய மக்கள் ட்ராட்ஸ்கியின் மறைவிற்குப் பின்பு இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் படையெடுப்பின் போது தரவேண்டியதாயிற்று. இரண்டாம் உலகப்போரில் உலக நாடுகளிலேயே அதிக உயிர்களை இழந்தது ரஷ்யா தான்!

அதேசமயம், ஜெர்மன் புரட்சியை புறக்கணித்ததால், முன்னேறிய நாடுகளின் உற்பத்தி திறனை  ரஷ்யாவால் அடைய முடியவில்லை. உலக முதலாளித்துவ முகாம் 200 ஆண்டுகளை செலவிட்டு அடைந்த வளர்ச்சியையும், உற்பத்தித் திறனையும் ரஷ்யா வெறும் இருபது ஆண்டுகளில் தனது சொந்த முயற்சியைக் கொண்டு பெறுவது நடைமுறை சாத்தியமல்ல. மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் உலகப் புரட்சி குறித்த ஆய்வுகளை புறக்கணித்து, மேற்கத்திய நாடுகளில் புரட்சி ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தால், உள்நாட்டில் உண்மையாகவே சோசலிசத்தை அடைய முடியவில்லை. 

உலக உற்பத்தி முறைகளிலேயே மிகவும் பின்தங்கிய உற்பத்தி முறையை வைத்துக்கொண்டு, ரஷ்யா அதற்கு சோசலிசம் என்று பெயரிட்டது. பெயரளவில் சோஷலிசமும் நடைமுறையில் முதலாளித்துவத்தை விட மிக பின்தங்கிய உற்பத்தியையும் வைத்துக் கொண்டு, தனது சொற்ப வளர்ச்சியையும்  உலகப் பொருளாதார பெருமந்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த மேற்கத்திய நாடுகளில் வளர்ச்சியையும் ஒப்பிட்டுக் காட்டி, தான் சோஷலிச வெற்றியை அடைந்து விட்டதாக வார்த்தை விளையாட்டைச் செய்துகொண்டிருந்தது ரஷ்ய அதிகார வர்க்கம்.

வெறும் விளம்பரங்களால் மக்களின் இல்லாமையையும் பசியையும் தீர்க்க முடியாது. ஜனநாயக மத்தியத்துவம் என்ற போல்ஷிவிக் கட்சியின் பாரம்பரிய அணுகுமுறைக்கு  முக்கியத்துவம் கொடுக்காததாலும், மார்க்சியத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு துரோகம் இழைத்து தனது சுயநலத்திற்காக உலகபுரட்சியை அதிகாரவர்க்கம் துறந்ததினாலும், ஒன்று ரஷ்யாவில் மீண்டும் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சி வெடிக்கும் அல்லது சோவியத் ஒன்றியம் முடிவுக்கு வரும் என்ற ட்ராட்ஸ்கியின் கருத்து மெய்யானது. ஜெர்மன் புரட்சி நிறைவேறாமல் போனதாலும், சோவியத் ஒன்றியம் வீழ்ந்ததாலும், நமது உலகம் 150 ஆண்டுகளுக்கு பின்தங்கிச் சென்றுவிட்டது என்பது உண்மைதான். எனினும் மரணப்படுக்கையில் அவருக்கு இருந்த மன வலி அவரோடு முடிந்து போய்விடவில்லை. இன்று ஆயிரம் ட்ராட்ஸ்கிகள்  முன்னேறிய நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் உலகப் புரட்சி என்ற லட்சியத்தை தனது தோள்களில் சுமந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )