இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

வானம் சிவந்ததா? வெளுத்ததா?

September 28, 2018
Image

மதன் ரவி

சினிமா விமர்சகர்

Image

"It's not where you take things from — it's where you take them to. "
 Jean-Luc Godard


 ஜிகர்தண்டா படத்தில் ஒரு தயாரிப்பாளர் சொல்வார் 'ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்ஷன் படம் வேண்டும்' என்று. அவர் சொன்னது யார் காதில் கேட்டதோ இல்லையோ மணிரத்தினம் அவர்களுக்கு தெளிவாக கேட்டிருக்கும் போலுள்ளது. சமீபத்திய மணிரத்னத்தின் படங்கள் எதுவும் சோபிக்காத நிலையில் வெளியாகியிருக்கிறது செக்கச் சிவந்த வானம்.

 ஊரையே ஆட்டிவைக்கும் தாதா (Don) சேனாபதி அவரது மூன்று மகன்களாக வரதன், தியாகு மற்றும் எத்தி. இந்த குடும்பத்தின் நண்பர் ரசூல். படம்  ஆரம்பித்த முதல் சில நிமிடங்களில் சேனாபதியை யாரோ கொல்ல முயற்சிக்க அதில் தப்பி பிழைக்கும் அவரை குறி வைத்தது யார் ஏன் போன்ற கேள்விகளை நோக்கி செல்லும் படம்தான் இந்த செக்கச் சிவந்த வானம்.



தமிழ் சினிமாவில் WHODUNIT வகை படங்கள் அரிது, அதனை நேர்த்தியாக ரசிகர்களின் ரசனைக்கேற்ப சமைத்து பரிமாறும் பொழுது நல்ல விருந்தாக அமைகிறது. 

இத்தனை நடிகர்களை கட்டி மேய்த்து நல்ல தீனியும் போட்டு விறுவிறுப்பான ஒரு கமர்ஷியல் திரைக்கதை அமைப்பது சுலபமல்ல. மணிரத்னம் அவர்கள் வெகு நாட்களுக்கு  (வருடங்களுக்கு ) (யுகங்களுக்கு) பின் அதனை செவ்வனே செய்து முடித்திருக்கிறார். ஒரு சாதாரண, நாம் பார்த்தே இருக்க கூடிய கதையை மசாலா தடவி, இறுக்கி பிடிக்கும் திரைக்கதையினால் நம்மை கட்டி போட முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர். வசனங்கள் பல இடங்களில் தட்டையாக இருந்தாலும் சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறது.

வரதனாக வரும் அரவிந்த் சாமியின் பாத்திர படைப்பு அருமை. அவருக்குள் இருக்கும் உணர்வுகளை அழகாக வெளிக்கொணர்ந்து நடித்திருக்கிறார். அருண் விஜய் ஒரு ஸ்டைலிஷ் கதாபாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளார்.

 எத்தியாக சிம்புவும், ரஸூலாக விஜய் சேதுபதியும் கதகளி ஆடியுள்ளனர். ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் நடித்து படத்தை வேகமாக நகர்த்த பெரிதும் உதவியுள்ளனர். சிம்பு ஏன் சில மோசமான திரைப்படங்களில் நடித்து தன திறமையை வீணடிக்கிறார் என்று எண்ணாமல் கடக்க முடியவில்லை. விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு அரங்கத்தில் கிடைக்கும் கைதட்டல்கள் ஒரு சோறு பதம்.


ஜோதிகா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலி கான், டயானா என்று ஒரு நீள்கிறது நடிப்பு பட்டாளம். அவர்களின் நடிப்பு கச்சிதம். சொல்வதற்கு வேறொன்றும் பெரிதாக இல்லை. 

ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் மிக சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின்னணி இசையில் பின்னி பெடல் எடுக்கிறார். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு பளிச்சென்று கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், வேண்டிய இடத்தில் சிவப்பாகவும், இருட்டாகவும் மிக அழகாக இருக்கிறது.

 பொதுவாக மணிரத்னத்தின் படங்களில் பெண்களுக்கு பெரிய முக்கியத்தும் இருக்கும். இதில் அது மிஸ்ஸிங். 

நமக்கு தெரியும் சில விஷயங்கள் படத்தின் சில கதாபாத்திரத்திற்கு தெரியாமல் இருப்பது விந்தை. நேபால், ஆந்திரா என்று காட்டப்படும் இடங்கள் அவ்வளவு நன்றாக வடிவமைக்கபடவில்லை. பல இடங்களுக்கு கதை சென்றாலும் ஒரே இடத்தை பார்ப்பது போன்று ஒரு ஆயாசம் வருகிறது. சில கதாபாத்திரங்களின் உணர்வுகள் இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். 

"வந்துட்டேன்னு சொல்லு... திரும்பி வந்துட்டேன்னு சொல்லு " என்று கர்ஜிக்கிறார் மணிரத்ணம். கமர்ஷியல் ஒளியில் மிளிர்கிறது இந்த செக்கச் சிவந்த வானம்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )