இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

வாஜ்பாய்: தலைமுறைகளை கடந்த தலைவர், காலங்களை கடந்த நாயகர் - நரேந்திர மோடி

August 20, 2018
Image

SG.சூர்யா

அரசியல் விமர்சகர்

Image

கொந்தளிப்பான நேரங்களில் இடையூறு காலங்களில் நம் தேசம் ஓர் தலைவரால் ஆசிர்வதிக்கப்பட்டது. அவர் தார்மீக திசைகாட்டியாக, வலிமைமிகு வழிகாட்டியாக, தெளிவான பார்வையை வழங்குபவராக மற்றும் மக்களை ஒருங்கிணைத்து சரியான திசையில் இயக்குபவராக இருந்தார். ஓர் நூற்றாண்டின் திருப்பத்தில் அப்படியான ஓர் தருணத்தில் நம் தேசம் கண்டடைந்த தலைவர் தான், வலிமை, புத்தி மனம் இவை அனைத்தும் வாய்க்கப்பெற்ற திரு.அடல் பிகாரி வாஜ்பாய். 

அவர் சந்தித்த அனைத்து மனிதர்களின் மனங்களையும் தொட்டு அவர்களுக்குள் பெரும் தாக்கத்தை உருவாக்கிய அரிதினும் அரிதான மானுடப்பிறப்பு என்பது அவரை அறிந்தவருக்கு நன்கு தெரியும். உச்சபட்ச கருணையுள்ளம் கொண்டவர், தாரளமான வலிமைப்பெற்றவர், அளவிட முடியாத பாதுகாப்பை வழங்குபவர், தவறுகளில் கனிவை சுரப்பவர். மற்றவர்கள் மீது மிகவும் ஆழமான மரியாதையை கொண்டவர் மிகவும் அரிதான நகைச்சுவை உணர்வை வரமாக பெற்றவர் அதை பெரும்பாலும் தன்னகத்தேயே பயன்படுத்திகொண்டவர். 

ஈடுயிணையற்ற பேச்சாளர். அதீத நகைச்சுவை உணர்விலிருந்து ஓர் உயர்ந்த பார்வைக்கு பேச்சை மிக இலாவகமாகவும் திருப்பக்கூடியவர். கேட்கக்கூடிய மக்களின் சுய நம்பிக்கையையும் அவர்களின் உயர்ந்த நோக்கத்தையும் ஒருங்கே இணைத்து பேசவல்லவர் அதனூடே மிக இயல்பாக மக்களோடு தொடர்புகொள்ளும் அரிதான திறன் படைத்தவர். மிக கூர்மையாக பகுத்தாயக்கூடிய பண்பாளர். மிகவும் கடினமான சிக்கலான விஷயங்களை கூட ஒற்றை வரியில் ஒரே கேள்வியில் சுருங்க சொல்லும் வல்லமை இவருக்கு உண்டு. எளிமையான வாழ்க்கை முறையை, உயர்ந்த இலட்சிய வழியை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். 

மத்திய பிரதேசத்தின் போற்றத்தகு சிறு நகரத்திலிருந்து வந்தவர். அவருடைய இளைமை காலம் கல்வியின் உன்னத நிலையால் நிறைந்திருந்தது. சுதந்திர போரட்டத்தின் போது பொது சேவைக்கான தேடல் ததும்பியிருந்தது. ஜன சங்கத்தில் ஓர் சாதரண தன்னார்வ தொண்டராக தன்னுடைய பயணத்தை துவக்கியவர் சுதந்திர இந்தியாவின் ஒரே உண்மையான தேசிய கட்சியான பா.ஜ.க-வை போற்றி ஒருங்கிணைத்தார். அதனுடைய நிர்வாகத்தலைமையை சியாம பிராசாத் முகர்ஜி மற்றும் பண்டித் தீனதயால் உபாத்யாயாவுக்கு பின் முன்னெடுத்து சென்றார். 

பாராளுமன்றத்தில் கடந்த 40 ஆண்டுகளாக அவர் வகித்து வந்த தலைமை, அவசரநிலைக்கு எதிரான அவரின் போரட்டம் (டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் நிகழ்ந்த நினைவை விட்டு அகலா அந்த பேரணியும், அன்று அவர் நிகழ்த்திய உரை தேசத்தின் கர்ஜனையாக ஒலித்ததையும் யாரால் மறக்க முடியும்?), தன்னுடைய கட்சிக்காக பேசுவது அவருடைய பேரார்வமாக இருந்த போதும் எப்போதும் தேசத்திற்காகவே பேசியவர். இவர் இந்திய ஜனநாயகத்தின் வலிமையை வரையறுத்த வல்லவர். தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றபோதும் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மரியாதையளித்த பண்பாளர். பாராளுமன்றத்தில் நிகழும் விவாதங்களுக்கென ஓர் ஒழுங்கை நிர்ணயம் செய்தவர். இவருடைய எளிமையாலும் ஒருமைப்பாட்டாலும், இவருடைய  கம்பீரமும், கருணையும், அலுவலகத்தை தன்னுடைய தனிப்பட்ட வாழ்வோடு தொடர்புப்படுத்தா தன்மையினாலும் இவர் தேசத்தின் இளைஞர்களுக்கு பெரும் தாக்கம் மிகுந்த மனிதராக மாறியிருக்கிறார். 

1990-களில் குழப்பத்தின் மத்தியில் சிக்கிக்கிடந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்தார். இல்லம் தோரும் அரசியல் ஸ்திரத்தன்மையை இழந்திருந்த போது. சர்வதேச சூழல் நிலையற்று நம் பொருளாதார சீர்த்திருத்த செயல்முறையை தடம்புரளச்செய்யுமாறு அச்சுருத்திய வேளையில், கடந்த இருபது ஆண்டுகளாக நாம் அனுபவித்து வரும் பொருளாதார வெற்றி விதைகளை தூவிச்சென்றவர் இவர். அவரை பொருத்தவரை பலவீனமானவற்றை ஆளுமைமிக்கதாக ஆக்குவது, ஒதுக்கப்பட்டவைகளை பிரதானமாக்குவது. இந்த நேர்கொண்ட பார்வை தான் நம் அரசாங்க கொள்கைகளை தொடர்ந்து வழிநடத்தி கொண்டிருக்கிறது.

 21-ஆம் நூற்றாண்டில் உலகளாவிய தலைமைத்துவத்தை கவசமென அணிந்து கொள்ள தயாராகயிருக்கும் இந்தியாவின் அடித்தளத்தை, அஸ்திவாரத்தை உருவாக்கியவர் அடல்ஜி. எதிர்காலத்திற்கேற்ற வகையிலான பொருளாதார கொள்கைகள் மற்றும் அவருடைய அரசாங்கம் நிகழ்த்திய சீர்த்திருத்தங்கள் ஏராளாமன இந்தியர்களின் செழிப்பான வாழ்வை உறுதிப்படுத்தியது. அடுத்த  தலைமுறைக்கான கட்டமைப்பில் குறிப்பாக சாலைகள், தொலைதொடர்பு ஆகியவற்றில் அவர் காட்டிய உந்துதல் நம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்க்கு பெரும் பங்களிப்பாக அமைந்தது. 

உலகரங்கில் இந்தியாவின் இடத்தை அளவிட முடியாளவில்  உயர்த்தியவர் அடல்ஜி. இந்தியாவை அணு ஆயுத சக்தி உருவாக்கத்திலிருந்து தனிமைப்படுத்தவிருந்த அச்சுருத்தலிலிருந்து, உலகின் எதிர்ப்புகளிலிருந்து, அது சார்ந்து இந்தியாவிற்க்கு இருந்த தயக்கத்திலிருந்து வெளிக்கொணர்ந்தார். இந்த முடிவு மிக எளிமையாக எடுக்கப்பட்டது அல்ல. தேசத்தின் பாதுகாப்பின் முன்பாக பெருகியிருந்த சாவல்களின் தலையாய முக்கியத்துவத்தை அவர் அறிந்தே இருந்தார். இனி இந்தியாவின் பாதுகாப்பு எந்தவொரு காரணத்திற்காகவும் பாதிக்கப்படாது. தேசம் பெருமை கொள்ளும் எழுச்சி மிகு தருணத்தில், அவருடைய குரல் கட்டுபாடு மிகுந்ததாகவும் பொறுப்பு நிறைந்ததாகவும் ஒலித்தது. அமைதி நாயகனின் ஞானக்கூற்றை உலகம் கேட்க துவங்கியது. புதிய நிதர்சனங்களை உலகம் ஏற்றுக்கொள்ளும் பொருட்டு, அசாதாரணமான சர்வதேச விவகாரங்களின் புரிதலையும் மற்றும் வல்லமை மிக்க இராஜதந்திர திறன்களை சரிசமமான முக்கியத்துவத்துடன் ஏற்றுக்கொண்டார். திறன் மிகு உத்திகளை உருவாக்கும் அவருடைய மரபியலும், வலிமையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதும், பல் திசை அரசியல் விவாகரங்களை கையாள்வது மற்றும் புலம்பெயர்ந்த ஆற்றல்களை ஒன்றினைப்பது என இன்று உலகரங்கில் நாம் பெற்றிருக்கும் மரியாதைக்கான அடித்தளத்தின் கலவை இவர். 

ஐம்பதாண்டுகளாக அமெரிக்காவுடன் இருந்த பகைமையை நீடித்த கூட்டாளியாக வெறும் ஐந்து ஆண்டு காலத்தில் மடைமாற்றியவர். 

மேலும் 2000-ஆம் ஆண்டில் தேர்ந்த யுத்திகளாலான கூட்டுறவை கொண்டு சோவியத் ரஷ்யாவுடன் ஓர் ஆழமான நட்புறவை உருவாக்கியவர். நவம்பர் 2001-ஆம் ஆண்டில் ரஷ்யாவிற்க்கு அவருடன் சேர்ந்து செல்லும் பெருமையை நான் பெற்றேன், அங்கே குஜராத் மற்றும் ஆஸ்தகன் இடையே சகோதர மாகாண ஒப்பந்தத்தினை முடிவாக இயற்றினோம். அமைதிக்காக, சீனாவுடனான திடமான முடிவொன்றினை எடுத்தார். சிறப்பு பிரதிநிதிகளின் அமைப்பை நிறுவுவதன் மூலம் சிரமம்மிகு கடந்தகால சுமைகளை களைய முனைந்தார். இந்த இரண்டு பழங்கால நாகரிகங்களும், உலகின் தளர்த்தோங்கும் சக்திகளாக இருப்பதால் இரண்டும் ஒன்றிணைந்து பணியாற்றி வருங்கால உலகை சிறப்பாக வடிவமைத்து,  தன் சிந்தனைக்கு வழிகாட்டும் வகையில் செயல்பட முடியும் என அடல்ஜி கருதினார். 

அடித்தளத்தை பற்றிய நபர். நம்முடைய அண்டை நாட்டாருக்கு முன்னுரிமை அளித்த பண்பாளர். அண்டை நாடுகள் குறித்த கொள்கை வகுப்பதில் இவர் நமக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவராகவும், ஏன் முன்னோடியாகவும் இருக்கிறார். பங்களாதேஷின் விடுதலைக்காக ஓர் எதிர்கட்சி தலைவராக இருந்து கொண்டு தன்னுடைய நிகரில்லா ஆதரவை வழங்கினார். அமைதி தேடி லாகூருக்கு பயணம் சென்றார். விடாமுயற்சி மற்றும் நேர்மறை குணம் ஆகிய இயல்பான பண்பினால் அமைதியை தேட விளைந்தார். அதன் மூலம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் காயங்களை ஆற்றத்துடித்தார். ஆனாலும், கார்கில் போரை வெல்லும் முனைப்பில் உறுதியாக இருந்தார். மற்றும் நம்முடைய பாராளுமன்றம் முடங்கியபோது, இந்தியாவிற்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலத்தை உண்மைத்தன்மையை உலகிற்கு உணர்த்தினார். 

தனிப்பட்ட முறையில் அடல்ஜி அவர்கள் ஓர் ஏற்றத்தகு குருநாதர். என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர். குஜராத் மற்றும் தேசிய அளவிலான பொறுப்பு இரண்டையும் ஒருங்கே என்னிடம் ஒப்படைத்தவர் அவரே. ஓர் செறிவான மாலைப்பொழுதில் அக்டோபர் 2001-இல் என்னை அழைத்து, குஜராத்தின் முதல்வராக பதவியேற்க சொன்னவர் இவர் தான். நான் நிர்வாகத்தில் தான் எப்போதுமே பணிபுரிந்தவன் என்று அவரிடம் சொல்லிய போது, என்னால் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும் என அவர் நம்புவதாக என்னிடம் தெரிவித்தார். அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கை என்னை நெகிழ்வுறச்செய்தது. 

இன்று நாம் தன்னம்பிக்கை கொழிக்கும் தேசமாக மலர்ந்திருக்கிறோம், நம் இளைஞர்களின் ததும்பும் ஆற்றலில் நனைந்து கொண்டிருக்கிறோம் மற்றும் நம் மக்களை நிறைவுப்படுத்தியுள்ளோம், மாற்றத்திற்காக எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம் அதை சாதிப்பதில் உறுதியாகவும் உள்ளோம், தூய்மைக்காக உறுதி பூண்டுள்ளோம் மற்றும் பொறுப்புமிகு ஆளுகையை வழங்கியிருக்கிறோம் எல்லோரையும் இணைத்து எதிர்கால இந்தியாவை கட்டமைப்பது மற்றும் இந்தியர்களுக்கான வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளோம்.

நாம் சமநிலையாலும், அமைதியாலும் உலகை ஈடுபடுத்தியுள்ளோம். நாம் கொள்கைகளுக்காவும் பிறரின் ஆசைகளுகக்கு ஆதரவாகவும் பேசத்துவங்கியுள்ளோம். அடல்ஜி முன்னெடுக்க விரும்பிய பாதையில் நாம் பயணித்து கொண்டிருக்கிறோம். அவர் காலத்தை தாண்டி நிலைத்திருப்பவர், ஏனெனில் அவருக்குள் வரலாறு ஆழமாக வேர்விட்டிருந்தது. நாகரீக பண்பாட்டின் மீது அவர் கொண்டிருந்த புரிதலின் மூலமாக இந்தியாவின் ஆன்மாவிற்குள் மிகவும் ஆழமாக கூர்ந்து செல்ல அவரால் முடிந்தது. 

ஓர் வாழ்வின் ஒளி அடங்கும் தருணத்தில் அதன் மதிப்பு வெறும் நீடிக்கப்பட்ட துக்கத்தால் மட்டுமே அளவிடப்படுவதல்ல. காலங்காலமாக மக்களின் வாழ்க்கையின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால் அளவிடப்பட வேண்டியது. அந்த ஒரு காரணத்திற்காக அடல்ஜி அவர்களை பாரதத்தின் உண்மையான ரத்தினங்களுள் ஒன்றாக கொள்ளலாம். அவருடைய கனவிற்கேற்ப புதிய இந்தியாவை நாம் கட்டமைக்கிற வேளையில் அவருடைய ஆன்மா நம்மை தொடர்ந்து வழி நடத்தும். 

எழுதியவர் : பிரதமர் மோடி
தமிழாக்கம் : SG சூர்யா – வழக்கறிஞர், எழுத்தாளர்

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )