இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

பாஜகவின் போஃபோர்ஸ் ரஃபேல்

October 10, 2018
Image

சந்திரபாரதி

அரசியல் விமர்சகர்

Image

ரஃபேல் என்றால் “பலமான காற்று” என்று பொருள். இந்திய விமானப்படைக்கு ரஃபேல் விமானங்கள் வாங்கும் விவகாரம் எதிர்கட்சிகளின் பலமான விமர்சன சூறாவளிக்கு ஆளாகியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் ரஃபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரிய மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஒப்பந்த விவரங்கள் குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசிற்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கையெழுத்தாகாத ஒப்பந்தம் 


வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் போது விமானப் படையை பலப்படுத்த போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. 126விமானங்கள் வாங்க 2007 இல் தான் முடிவெடுக்கப்பட்டது. 2011 வாக்கில் இந்திய விமானப்படை தொழில் நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகு ரஃபேல் விமானத்தையும், ஈரோ பைட்டர் விமானத்தையும் தேர்வு செய்தது. ஒப்பந்தப் பளியில் குறைந்த விலைப் புள்ளி அளித்த ரஃபேல் விமான தயாரிப்பு நிறுவனமான டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் விலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த 2012 இல் முடிவெடுக்கப்பட்டது. 2014 ஐக்கிய முன்னணி அரசு காலம் முடியும் வரை பேச்சு வார்த்தை எந்த முடிவையும் எட்டவில்லை. விமானங்கள் வாங்குவது குறித்த விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

எடுக்கப்படாத முடிவு

தொழிநுட்பத்தை இந்திய தரப்பிற்கு மாற்றியளிப்பதிலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் விமானங்களின் தரக் கட்டுப்பாடு உறுதியளிப்பதிலும் டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கும் இந்திய அரசிற்கும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. ஐமுகூ அரசு இந்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் ரஃபேல் விமானங்களை தயாரிக்க முடிவெடுத்திருந்தது. ஹெச்.ஏ.எல் வேண்டிய தரக்கட்டுப்பாடு நுட்பத்தை டஸ்ஸால்ட் நிறுவனம் தர சம்மதிக்கவில்லை. ஹெச்.ஏ.எல் வேண்டிய நுட்பம் விலையை உயர்த்தி விடும் என வாதிட்டது டஸ்ஸால்ட். இதனால் இறுதி முடிவு இழுபறியாகவே இருந்தது. ஐமுகூ., ஆட்சியில் முடிவேதும் எடுக்கப்படவில்லை.

பிரான்ஸ் சென்ற மோடி

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமர்ந்த பிறகு 2015 இல் மோடி பிரான்ஸ் சென்ற போது இரண்டு அரசாங்கங்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தி 36 ரஃபேல் விமானங்களை வாங்க முடிவெடுத்தார். இரு நாடுகளுக்கிடையேயான இந்த ஒப்பந்தம் குறித்த காலத்தில் 36 விமானங்களை தளவாடங்களுடன் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. விமானப்படை உயர் மட்டக் குழுவின் பரிசீலனைக்குப் பிறகு மத்திய அமைச்சரவை ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க அனுமதியளித்தது.

ரஃபேல் விமானத்தின் சிறப்பு

ரஃபேல் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தின் சர்ச்சைக்குள் செல்லும் முன்பு ரஃபேல் விமான ஒப்பந்த விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். உலகில் உள்ள போர் விமானங்கள் வரிசையில் ரஃபேல் விமானம் முக்கியமானது. இந்த விமானங்கள், அனைத்து விதமான வான் வெளி போர் முறையிலும் கையாளப்படக் கூடியது. வான் போர், கப்பல்களைத் தாக்குதல், தரைப் படைக்கு ஆதரவாக போர், அணு ஆயுத போர் முறை, வேவு பார்த்தல், வானிலிருந்து தரை, கப்பல் நிலைகளை தாக்குதல் என அனைத்து போர் முறைகளிலும் பயன்படுத்தப்பட கூடியது. எதிர் நாட்டின் உள்ளே நீண்ட தூரம் சென்று தாக்கி நிலை திரும்பும் திறன் கொண்டவை ரஃபேல் விமானங்கள். இந்திய இராணுவத்துறையில் இராணுவத் தளவாடங்கள் வாங்கும் குழு கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தி தொழி நுட்பத்தில் சிறந்ததாக அடையாளம் காட்டப்பட்டது. மேலும் இந்திய விமானப்படையின் தேவைக்கேற்ப மிகக் குளிர்ந்த இமாலயா, லே பகுதிகளிலும் பயன்பாட்டில் வைக்க தேவையான பிரத்யேகமான தொழில் நுட்பங்களையும் ரஃபேல் விமானங்களை தயாரிக்கும் டஸ்ஸால்ட் நிறுவனம் செய்து வழங்க உள்ளது.

வலுப் பெறும் இந்திய விமானப்படை

போர் விமானத்தில் போர்த் தளவாடங்களையும் இணைத்து டஸ்ஸால்ட் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதி நவீன போர் தளவாடங்கள், ரடார்கள், 150 கிமி தொலைவு வரை பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகள், பார்வைக்கு அப்பால் உள்ள இலக்குகளையும் தாக்க வல்ல லேசர் வழிகாட்டுதலுடனாகிய ஏவுகணைகள், மற்ற பிற அதி நவீன பாதுகாப்பு சாதனக்களுடன் டஸ்ஸால்ட் நிறுவனம் ரஃபேல் போர் விமானங்களை வழங்க உள்ளது. ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானப் படையில் சேர்ப்பதன் மூலம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் சீனாவை விட பன் மடங்கு இந்திய விமானப்படை வலுப் பெறும்.

ஒப்புக் கொண்ட பிரான்ஸ் அரசாங்கம்

ஒப்பந்தந்தின் படி டஸ்ஸால்ட் நிறுவனம் ஐந்தாண்டுகளுக்கு ரஃபேல் போர் விமானங்களை தளவாடங்கள், உதிரி பாகங்கள், தொழில் நுட்ப உதவிகளோடு பராமரிக்கும். குறைந்த பட்சம் 75% விமானங்கள் யுத்தத்திற்கு தயாரான நிலையில் எந்த நேரத்திலும் இருக்க டஸ்ஸால்ட் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இந்திய விமானப்படையினருக்கு இலவசமான பயிற்சியும் டஸ்ஸால்ட் நிறுவனம் அளிக்க உள்ளது. அது மட்டுமின்றி,ஒப்பந்தத் தொகையில் 50% அளவிற்கான தொகையை இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய பிரான்ஸ் அரசாங்கம் ஒப்புக் கொண்டு உள்ளது. முதலீடுகள் இந்திய விமானங்கள் தயாரிப்புத் துறையிலும், ரஃபேல் விமானங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கவும் செய்யப்படும்.

ரூ.12600 கோடிகள் அதிக செலவு

காங்கிரஸ் 36 விமானங்கள் அதிக விலைக்கு வாங்கப்படுவதாகவும், ஐமுகூ ஆட்சியில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட அதிகமாக ரூ.12600 கோடிகள் அதிகம் செலவிடப்படுவதாகவும் குற்றம் சாட்டுகிறது. பாஜகவோ விலைக் குறைப்பு தான் நடந்துள்ளதாக கூறி காங்கிரஸ் குற்றச்சாட்டைப் புறம் தள்ளுகிறது. காங்கிரஸ் போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடை பெற்றுள்ளதாகக் கூறி விலை ஒப்பந்த விவரங்களைப் பகிரங்கமாகக் கோருகிறது. டஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவில் விமானம் தயாரிப்பதில் இரணுவத் தளவாட உற்பத்தியில் முன் அனுபவமே இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதில் உள் நோக்கம் கற்பிக்கும் காங்கிரஸ் அரசு நிறுவனமான ஹெச்.ஏ.எல் பரிசீலிக்கப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்புகிறது. இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது காங்கிரஸ், பாஜக இரண்டின் தலைமையிலுமான அரசுகள் போர் விமானம் வாங்க பரிசீலித்த ஒப்பந்தங்களின் விவரம் பொது வெளியில் இல்லை.

நீதிமன்றம் சென்ற விவகாரம்

ஐமுகூ., அரசின் ஒப்பந்தத்தில் உரிமம் பெற்று விமானம் தயாரிக்க மட்டுமே வழி வகை செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மோடி அரசு பிரான்ஸ் அரசோடு கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தில் "மேக் இன் இந்தியா" திட்டப்படி விமானம் தயாரிக்க தொழில் நுட்பம் வழங்கப் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் விமானத் தயாரிப்பில் பங்கு தாரராக இருப்பது விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. 50%  இந்தியாவில் விமானத் தொழில்நுட்பத்துறையில் முதலீடு செய்யும் ஒப்பந்தத்தின் படியே டஸ்ஸால்ட் நிறுவனம் தனது இந்திய பங்குதாரரை தேர்ந்தெடுத்துள்ளதாக பாஜக அரசு தரப்பு கூறுகிறது. ரிலையன்ஸ் மட்டுமின்றி இன்ன பிற நிறுவனங்களும்  விமான உதிரி பாக தயாரிப்பில் ஈடுபட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலாண்டே ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்ததில் இந்திய அரசிற்கு பங்குண்டு எனச் சொல்ல, டஸ்ஸாட் நிறுவனம் மறுத்து அறிக்கையளிக்க விவகாரம் கொதி நிலையை அடைந்தது. ரஃபேல் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கலாகி விசாரணைக்கு வந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இந்திய அரசு ஒப்பந்த விவரங்களை அளிக்க வேண்டும்.

நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எதிர்கட்சிகள்

இராணுவ ரகசியம் எனக் கூறி அறிக்கை அளிப்பதை தவிர்க்கவோ, தாமதிக்கவோ இந்திய அரசு முயலக் கூடும் என்ற ஐயப்பாடு உள்ளது. நாடாளுமன்றத்தில் ஒப்பந்த ஷரத்துகள், விலை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க இந்திய இராணுவ அமைச்சர் பாதுகாக்கப்படும் ரகசியம் எனக் கூறி மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்திய விமானப் படைக்கு போர் விமானங்கள் வாங்குவது என்பது நாட்டின் பாதுகாப்பு கருதி எடுக்கப்படும் கொள்கை முடிவு என்ற அடிப்படையில், அரசின் கொள்கை முடிவினை உச்ச நீதிமன்றம் தலையிட்டு பரிசீலிக்கக் கூடுமா என்ற அரசியல் சாசன உரிமைக் கேள்விகளும் எழ வாய்ப்புள்ளது. இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள் நிர்வாக அடிப்படையிலானதா, கொள்கையடிப்படையிலானதா என்ற கேள்விகளுக்கும் விடை காணப்பட வேண்டும். இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தில் ஊழல் எங்கு நடந்தது, எவரால் நடந்தது, எப்படி நடந்தது, பயனாளிகள் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை குற்றம் சாட்டும் எதிர்கட்சிகளுக்கு உண்டு.

போஃபோர்ஸ் பீரங்கிகள் செய்த சாதனை

இதே போல 90 களில் போஃபோர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் ஊழல் நடை பெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நேரடியாக ராஜீவ் காந்தி மற்றும் அவரது உறவினர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. 64 கோடி ஊழலைக் கண்டுபிடிக்க நூற்றூக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவிட்டும் இன்று வரை இறுதி முடிவினை எட்டமுடியவில்லை. சர்ச்சைக்குள்ளான போஃபோர்ஸ் பீரங்கிகள் தான் பனி படர்ந்த கார்கில் மலைகளில் பாகிஸ்தான் ஊடுருவலை தகர்த்து முறியடித்து வெற்றி பெற பெரிதும் துணை நின்றன எனபதனையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

 உண்மையைப் புதைக்கக் கூடாது

இந்தியாவிற்கு அதன் எல்லைகளைப் பாதுகாக்க போர் விமானங்கள் உடனடி தேவை. தற்போது அத்தியாவசியத் தேவைக்கும் குறைவாகவே போர் விமானங்கள் உள்ளன. சர்வதேச சந்தையில் உள்ள போட்டிகள் காரணமாகவும் இந்திய விமானப் படையின் பலத்தைக் குறைக்கும் வண்ணம் எதிரி நாடுகள் செயல்படக் கூடும். இருப்பினும் கறைபடாத கைகளுக்குச் சொந்தக்காரர்கள் என மார் தட்டும் பாஜக எதிர் கட்சிகளின் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும், கடமைப்பட்டவர்கள். இராணுவ பாதுகாப்பு ரகசியம் எனக் கூறி உண்மையைப் புதைக்கக் கூடாது.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )