இன்றைய வானிலை

  • 28 °C / 82 °F

Jallikattu Game

பாகிஸ்தான் தேர்தல் : இம்ரான் கானின் வெற்றி புதிய திருப்புமுனையா ?

July 30, 2018
Image

டி.யூ.சேனன்

சமூக செயற்பாட்டாளர், தமிழ் சொலிடாரிட்டி இயக்கம், லண்டன்

Image

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் முடிவுகள்


கடந்த 27-ம் தேதி நடந்து முடிந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் உலகெங்கும் கவனத்துக்குள்ளாகியதற்குப் பல காரணங்கள் உண்டு. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த இம்ரான் கான் உலகளவில் ஏற்கனவே அறியப்பட்டவராக இருப்பது, ஒப்பீட்டளவில் புதியதாக உருவாகிய இவரது கட்சி தேர்தலில் வென்று இருப்பது போன்ற விசயங்களும் இக்கவன ஈர்ப்புக்குக் காரணமாக இருக்கின்றன.

342 இடங்கள் கொண்ட பாகிஸ்தான் தேசிய சபையில் (National Assembly) 272 இடங்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மூன்று முறை இராணுவ சர்வாதிகாரத்துக்கு அடிமைப்பட்ட பாகிஸ்தானில் இப்போதுதான் முதன்முறையாக சனநாயக முறைப்படி அரசு உருவாகுவது நிகழ்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தத் தேர்தல் சமயத்தில் இதுவரை நடந்த எல்லா தேர்தல்களையும் விட மோசமான ஊழல் நடந்துள்ளது என்றும், இராணுவத்தின் கைப்பாவையான பி.ரி.ஐ கட்சியே வெற்றி அடைந்துள்ளது என்றும் பொதுவாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக வாக்களிக்கும்போது  – மற்றும் வாக்கு எண்ணிக்கையில்போது நிகழ்ந்த குளறுபடிகளுக்கான சான்றாதாரங்கள் சமூக வலைத்தளங்களில் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

முழு இராணுவ ஆதரவு, மற்றும் பல்வேறு வாக்கு மோசடிகள் நிகழ்ந்தும் கூட பி.ரி.ஐ அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி அடையவில்லை. 117 இடங்களை மட்டுமே  பி.ரி.ஐ வென்றுள்ளது. வெற்றி பெற்றவர்களில் பலர் பி.ரி.ஐ கட்சியின் நீண்டகால கொள்கை ரீதியான உறுப்பினர்கள் இல்லை. பாகிஸ்தானின் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த இனக்குழு – மற்றும் மதத் தலைவர்கள் தமது சொந்தச் செல்வாக்கை பலமாக கட்டி வைத்திருக்கிறார்கள். இவர்களை தமது பக்கம் வெல்வதன் மூலம் மட்டுமே இப்பிரதேசங்களில் தேசியக் கட்சிகள் வென்று வருகின்றன. இம்முறை கடைசி நேரத்தில் இத்தகைய பலர் பி.ரி.ஐ பக்கம் தாவியது ‘வெல்லக்கூடியவர்களின்’ தொகையை பி.ரி.ஐ க்கு அதிகரித்திருந்தது. இதுவரை ஆட்சி செய்து வந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (PMLN), கடந்த தேர்தலில் 126 இடங்களை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் லீக் வென்ற கடந்த தேர்தலின் போதும்கூட இதே குளறுபடி குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தது அறிவோம். தற்போது இக்கட்சி 64 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. ஒருகாலத்தில் பெரும் ஆதரவுடன் இயங்கிய –முன்பு பூட்டோ தலைமை  தாங்கிய – பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) 43 இடங்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. இருப்பினும் இந்த இரு கட்சிகளுக்கும் விழுந்த மொத்த வாக்குகள் பி.ரி.ஐ-க்கு விழுந்த வாக்குகளிலும் அதிகம் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. இது தவிர இம்முறை 51.7% மக்கள் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர். பாகிஸ்தானில் வாழும் பெரும்பான்மை மக்கள் இந்தப் போலி தேர்தல் அரசியல் நடவடிக்கையில் நம்பிக்கை அற்றவர்களாக – அதிகார சக்திகளை நம்பாதவர்களாக இருக்கிறார்கள். தேசிய எழுச்சியுடன் மக்கள் திரட்சி நடந்த பலுசிஸ்தான் பகுதியில் தேசியவாதக் கட்சிகள் பலம் கூடி இருப்பதும், தேசியவாத சக்திகள் மற்றும் கட்சிகள் மேல் இராணுவ ஒடுக்குமுறை நிகழ்ந்து வரும் சிந்த் பகுதியில் தேசியவாதக் கட்சிகள் பெரும் தோல்வியை சந்தித்திருப்பதையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இதே சமயம் இஸ்லாமிய மத அடிப்படை வாதத்துக்கு விழுந்த வாக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதையும் பார்க்கலாம். ஒட்டு மொத்தத்தில் இந்த தேர்தலில் அனைத்து அதிகார சக்திகளும் சிறு பின்னடைவை கண்டுள்ளதை நாம் அவதானிக்க வேண்டும்.


பி.ரி.ஐ வெற்றியால் மக்களுக்கு லாபமுண்டா?


இம்ரான் கானின் வெற்றியை புதிய பாகிஸ்தான் உருவாவதற்கான தொடர்ச்சியாக காட்ட முயல்கின்றனர் சிலர். இதே சமயம் மக்கள் மத்தியிலும் பல எதிர்பார்ப்புக்கள் தூண்டி விடப்படுள்ளது. பி.ரி.ஐ உருவாக்கியதன் அடிப்படையும், இம்ரான் கான் தன்னை ஒரு நவீன மயப்படுத்துபவராகவும் ஊழலுக்கு எதிரானவராகவும் காட்டி வந்ததும், இந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது.

முன்பு மற்றக் கட்சிகள் மேலான குற்றச்சாட்டுகள் முன் வைப்பதை இம்ரான் கான் கட்சியும் முன் நின்று நடத்தியது. ஊழல் மிகுந்த பி.பி.பி மற்றும் பி.எம்.எல் என் ஆகிய கட்சிகளுடன் தான் ஒருபோதும் கூட்டுச் சேரப் போவதில்லை என முன்பு கான் சொல்லி வந்தார். தற்போது எத்தகைய கூட்டை உருவாக்கி ஆட்சி அமைக்கப்போகிறார் என மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.

ஊழலுக்கு எதிர்ப்பு மற்றும் சனநாயக உரிமைகள் கோரிக்கை என்ற அடிப்படையில் நகர இளையோரின் திரட்சியின் தொடர்ச்சியாகவே பி.ரி.ஐ கட்சி தோன்றியது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி கடனை இல்லாமல் செய்தல், கல்வி-மருத்துவம் போன்ற சேவைகளை அரசு வழங்குதல் ஆகிய பிரபல கோரிக்கைகளையும் பி.ரி.ஐ இதுவரை பேசி வந்திருக்கிறது. எல்லா மதங்களையும் சமமாக பார்த்தல் மற்றும் மத அடிப்படை வாதத்தை எதிர்த்தல் போன்ற விசயங்களை முன் வைத்ததும் ஆரம்பத்தில் பி.ரி.ஐ பின்னால் இளையோர் திரள காரணமாக இருந்தது. குறிப்பாக நகர இளையோர் மற்றும் மத்திய தர வர்க்கத்தினர் பி.ரி.ஐ வளர்ச்சியில் ஆரம்பத்தில் முக்கிய பங்கு வகித்தனர்.

ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் தொழிலாளர் மற்றும் ஒடுக்கப்படும் வறிய மக்கள் மத்தியில் மிகவும் குறையத் தொடங்கி விட்டது. கைபர் பக்துங்குவா பகுதியில் ஏற்கனவே பி.ரி.ஐ ஆட்சியில் இருந்து வருகிறது. இஸ்லாமிய அடிப்படை வாதக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து அரசு நடத்தி வரும் பி.ரி.ஐ, அங்குள்ள மக்களின் முன்னேற்றத்துக்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதேபோல் பல்வேறு ஊழல்கள் பனாமா பேப்பர் மூலம் வெளிவந்த போது இம்ரான் கான் மேல் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. குறிப்பாக இவரது லண்டன் வீடு பற்றிய பல கேள்விகள் இன்றுவரை பதில் இல்லாமல் தொங்கிக் கொண்டிருகிறது. பாகிஸ்தான் காசை/சொத்தை  தான் வெளியில் கொண்டு செல்லப்போவதில்லை என இம்ரான் கான் முன்பு மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியின் பொய்மை இவ்வாறுதான் வெளியானது. இவர் சொத்துக்கள் மட்டுமின்றி வியாபாரத்தைக் கூட பாகிஸ்தானுக்கு வெளியில் நடத்தி இருப்பது பனாமா பேப்பர் மூலம் தெரிய வந்தது.

இது தவிர பி.ரி.ஐ முன் வைக்கும் உறுதி மொழிகளுக்கும் அவர்களின் பொருளாதார கொள்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மக்களுக்கு சுகாதார சேவை வழங்குவது, வறுமையை ஒழிப்பது போன்ற உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டுமாயின், மிகத் தீவிர பொருளாதார திட்டமிடல்கள் செய்ய வேண்டி இருக்கும். பாகிஸ்தான் பொருளாதரத்தை திட்டமிட்ட பொருளாதாரம் நோக்கி நகர்த்த வேண்டிய தேவை இருக்கும். ஆனால் அவர்கள் சொல்லுவதெல்லாம் வெறும் வியாபாரத்தை ஊக்குவிப்பது என்பதோடு முடங்கி நிற்கிறது. எல்லோரும் புதிய வியாபாரம் உருவாக்க வழியேற்படுத்திக் கொடுக்க இருப்பதாக அவர்கள் கொள்கை சுருங்கி நிற்கிறது. இதே உறுதி மொழியை வழங்கிய இந்திய-இலங்கை அரசுகள் இன்று எங்கு போய் நிற்கின்றன என்பதை அறிவோம். சிறு வியாபாரத்தை காத்துக் கொள்ளும் – அல்லது சேவை அரசை உருவாக்கும் முதலாளித்துவ சீர்திருத்தக் கொள்கைகள் கூட இவர்களிடமில்லை. இவருக்கு முன் ஆட்சியில் இருந்த பி.எம்.எல்.என் கட்சியும் பல சீர்திருத்தக் கொள்கைகளை அமுல் செய்வதாகச் சொல்லி ஒரு சில நடவடிக்கைகளை முன் எடுத்ததை அறிவோம். குறிப்பாக மின்சார போதாக்குறையை நிவர்த்தி செய்ய சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பல தொழிற்சாலைகள் நாட்டை விட்டு வெளியேறுவது ஓரளவு தடுக்கப்பட்டது. இதேபோல் வறிய மக்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டை காரணமாக முன் வைத்து அக்கட்சி தலைவர் நவாஸ் ஷெரிப் ஆட்சியில் இருந்து விலக்கப்பட்டதும், தேர்தலில் நிற்பதற்கு தடை விதிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் நவாஸ் ஷெரிப் செய்ததற்கும் மேலாக இம்ரான் கான் புதிதாக என்ன செய்து விடப்போகிறார் என்பது கேள்விக்குறியே. ஏனெனில் இவர்களுக்கிடையில் பொருளாதாரக் கொள்கை ரீதியாக பெரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை.

வறுமையில் அதிகம் வாடிக்கொண்டிருக்கும் பாகிஸ்தான் மக்கள் தமக்கு கிடைக்கும் ஒவ்வொரு சிறு சலுகைகளையும் வரவேற்கவே செய்வர். ஆனால் அத்தகைய சிறு சலுகைகள் அவர்தம் வாழ்வாதாரத்தை உயர்த்தப் போவதில்லை என்பதையும் அவர்கள் அனுபவ ரீதியாக அறிவர். இது தவிர பி.ரி.ஐ ஆட்சிக்கு வந்ததற்கு பின்னணியில் இருக்கும் சக்திகள் பல, மிக பிற்போக்கு சமூக தளங்களை மையமாக வைத்து இயங்குபவையாக இருக்கின்றன. இதற்கு எதிர் திசையில் இருக்கும் இராணுவத்தின் ஒரு பகுதியினர் பி.ரி.ஐ அரசை வேறு திசையில் நகர்த்த முயற்சிக்கலாம். ஆனால் அந்த முரண் கூட பி.ரி.ஐ அரசை உடைக்கும் சாத்தியமே உள்ளது.

பி.ரி.ஐ  அரசு பல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து சந்தித்து வரும் என்பதும் மக்கள் மத்தியில் இவர்களின் அரசியல் போதாமை மேலும் வெளிச்சத்துக்கு வரும் என்பதும் தெளிவு. ஏற்கனவே அனைத்து எதிர் கட்சிகளும் தேர்தல் முறைகேடு சார்பாக தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அவர்கள் தாம் செய்த – செய்யும் முறைகேடுகளை மறைத்து,  திடீரென புதிய நேர்மைத் தன்மையை கண்டுபிடித்திருப்பதை மக்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. இருப்பினும் பி.ரி.ஐ மேலான அதிருப்தி வளர்வது எதிர்கட்சிகள் – மற்றும் எதிர்ப்பை வளர்க்கும் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே கராச்சியில் மக்கள் ‘இம்ரான் வெற்றி – அதன் பின் இராணுவ உடை’ என்ற கோசத்தை முன் வைத்து திரண்டதை நாம் பார்த்தோம். இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதும் பி.ரி.ஐ அரசை கவிழ்க்கும் பலம் தற்போது எந்த எதிர்கட்சிகளுக்கும் இல்லை என்பதும் தெளிவு.


பொருளாதார மற்றும் பிராந்திய நெருக்கடிகள்


பாகிஸ்தான் பொருளாதாரம் பெரும் நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளது. வளர்ச்சி வீதம் குறையத் தொடங்கி இருக்கும் அதேவேளை, மேலதிக வளர்ச்சி உருவாவதற்கான சாத்தியங்களும் குறைந்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் பொருளாதராம் ‘உதவிப் பணத்தில்’ தங்கி இருக்கும் பொருளாதாரமாகவும் இதுவரை காலமும் இருந்து வந்திருக்கிறது. பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கான உதவிகள் பலவற்றை வழங்கி வந்த அமெரிக்க அரசு தற்போது உதவித் தொகையை குறைக்கத் தொடங்கி இருக்கிறது. இருப்பினும் சீன முதலீட்டின் மூலம் இதுவரை சில நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க கூடியதாக இருந்து வந்திருகிறது. பெரும் வழிச்சாலைகள் மற்றும் துறைமுகம் கட்டுதல் ஆகியவற்றுக்கு பெரும் தொகை பணத்தை சீனா வழங்கி உள்ளது. இந்தக் கடனுக்கான வட்டி கட்டவே நாட்டின் வருவாயில் பெரும் அளவை செலவழிக்க வேண்டி இருக்கும்.

மேற்கத்திய அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளுடன் உடன்பாடுள்ள இம்ரான் கான் சீன செல்வாக்கை குறைக்க முடியும் என எதிர்பார்ப்பது தவறு. கானின் பின் பலமாக இருக்கும் இராணுவ சக்திகள்தான் கராச்சியில் இருந்து பலுசிஸ்தான் வரை சீன முதலீட்டுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றன. தவிர அமெரிக்க அரசின் புதிய கொள்கை நிலைப்பாடுகள் பலவற்றுடன் முரண்பட்ட நிலையிலேயே இராணுவம் இயங்கி வருகிறது. நாட்டின் வெளி விவகார கொள்கையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை பாகிஸ்தான் இராணுவம் விட்டுக் கொடுக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இப்படியிருக்க இந்த சக்தியையும் மீறி இம்ரான் கான் தனது விருப்புக்கு ஏற்ப பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்க முடியாது. இராணுவத்தை மக்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதை தனது கொள்கைகளில் ஒன்றாக முன் வைத்த இம்ரான் கான் தற்போது இராணுவத்தின் சிறைக் கைதியாக அதிகாரத்துக்கு வருவது ஒரு முரண் நகையே.

வெளி விவகார கொள்கை இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் செல்வதை விரும்பாத இந்திய அதிகாரம் இம்ரான் கானின் வெற்றியை கடுமையாக எதிர்க்கத் தொடங்கியிருப்பதையும் பார்க்கலாம். ஏற்கனவே இம்ரான் கானை ‘தலிபான் கான்’ என இந்திய அரச சார் ஊடகங்கள் எழுதுவதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அடுத்த இந்தியத் தேர்தலின் பொது இந்துத்துவ தேசிய வாத அலையை எழுப்ப – பாபர் மசூதி பிரச்சினை – அல்லது காஷ்மீர் பிரச்சினை ஆகியவை தூண்டி விடப்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு. அச்சமயத்தில் பாகிஸ்தான் இராணுவத்தின் பிடியில் வெளிவிவகார கொள்கை இருப்பது மீண்டும் ஒரு ‘எல்லை யுத்தத்துக்கு’ கொண்டு செல்லலாம் என அச்சப்படுவதில் அர்த்தமுண்டு.

உலகின் பல்துருவ சக்திகள் தமது நலனுக்காக கடுமையாக மோதும் தளமாக இருந்து வருகிறது ஆப்கானிஸ்தான் –பாகிஸ்தான் நிலவரம். மேற்குலகும் அமெரிக்காவும் தமது இராணுவச் செலவு மற்றும் இதர செலவுகளை இங்கு குறைக்க விரும்பினாலும் அங்கிருக்கும் வளங்கள் மற்றும் கேந்திர முக்கியத்துவத்தை ஒருபோதும் இழக்கத் தயாராக இல்லை. அதேபோல் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிற்கான பாதை பாகிஸ்தான் ஊடாக செல்வதால் சீனாவும் இந்த பகுதியில் தனது செல்வாக்கை நிறுவ கடுமையாக முயற்சித்து வருகிறது. இந்தியாவும் ஆப்கானிஸ்தானில் தனது செல்வாக்கை அதிகரித்து வருவது தெரிந்ததே. இந்த பூகோளச் சிக்களுக்குள் சிறைப்பட்டிருக்கும் அணு ஆயுத பலமுள்ள பாகிஸ்தான் அரசு சுயமான பொருளாதார கொள்கையுடன் இயங்குவது எவ்வாறு சாத்தியம்? இது தவிர பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தேசிய இனங்களின் எழுச்சியும் அரசுக்கு கடுமையான சவாலை உருவாக்கி உள்ளது. இராணுவத்தின் கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகி வரும் தேசிய இனங்களின் எதிர்ப்பு பஞ்சாப் பிரதேச மையத்தை எதிர்த்து ஒன்று குவிவதும் இங்கு அவதானிக்க வேண்டும். பாகிஸ்தான் அதிகார சக்திகள் மற்றும் இராணுவம் ஆகியவற்றின் அதிகாரம் பெரும்பாலும் பஞ்சாப் பிரதேச அதிகாரத்தின் செல்வாக்கில் இருப்பதும் கவனத்தக்குரியது. இம்ரான் காணும் இந்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியே.

பாகிஸ்தான் ஒடுக்கப்படும் மக்கள், மற்றும் தொழிலாளர் கையில் அரச அதிகாரம் மாறி – இந்தியா முதலான பிராந்திய மக்களின் ஆதரவையும் அவர்கள் தமது பக்கம் வென்றெடுத்து, பிராந்திய திட்டமிட்ட பொருளாதார நிலைமைகள் நோக்கி நகராமல் - பாகிஸ்தான் மக்களுக்கு முதலாளித்துவ அடிப்படையில் எந்த மாற்றமும் வந்து விடப்போவதில்லை. அனைத்து தேசிய இனங்களுக்கும் உரிமைகளை வழங்கும் அதேவேளை – பிற்போக்கு அடிப்படை வாதங்களை சமூகமாக எதிர்கொண்டு பின்னடையச் செய்து – ஒட்டு மொத்த வளங்களையும் கையில் எடுத்து மக்களுக்கான திட்டமிட்ட பொருளாதாரம் அமுல்படுத்தப்பட வேண்டும். அத்தகைய சக்தி மக்கள்சார் வெளி விவகார கொள்கையுடன் இந்தியா, இலங்கை முதலான நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்படும் மக்கள் மற்றும் தொழிலாளர்களை தமது நட்புச் சக்தியாக பார்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கும். அவர்களின் அதிகாரத்துக்கு எதிரான திரட்சியை தமது நலனோடு இணைக்கும். அந்த அடிப்படையில் பல்தேசியங்கள் இணைந்த “தெற்காசிய கண்பிடரேசன்” நோக்கி நகர்வதும் ஒட்டு மொத்த வளங்களையும் திட்டமிட்ட பொருளாதார முறைப்படி ஒழுங்கமைப்பதும் நிகழ முடியும். இதை சாதிக்க வல்ல சக்தி எது? மக்களின் நலன்களை சமரசத்துக்கு உட்படுத்த மறுக்கும் – தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களை தமது அடிப்படையாக கொண்டதும், தொலைநோக்குள்ள சோஷலிச முன்னோக்கு மற்றும் செயற்திட்டங்களை முன் வைக்கும் – பெரும் மக்கள் சக்தியின் எழுச்சியே இந்த மாற்றைக் கொண்டுவரவல்லது. இளையோர் மற்றும் போராட்ட சக்திகள் அந்தத் திசையில் நகர வேண்டும். அதற்கான வேலைத் திட்டங்கள் இன்றே ஆரம்பிக்கப்படவேண்டும். 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )