இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா...?

December 4, 2017
Image

சந்திரபாரதி

அரசியல் விமர்சகர்

Image

இந்திய அரசியல் சாசனப்படி 25 வயது மேற்பட்ட இந்தியக் குடியுரிமைப் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act 1951) -ல் தகுதிகளை வரையறை செய்திருக்கிறது. இச்சட்டத்தின் பிரிவு 5 மாநில சட்ட மன்ற வேட்பாளருக்கான தகுதிகளைப் பட்டியிலிடுகிறது.

சட்டம் என்ன சொல்கிறது

இதன்படி, எந்தத் தொழிலை செய்பவராக இருந்தாலும் தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் வாக்காளராக இருத்தல் அவசியம் மற்றும் வேட்பாளராக போட்டியிட தடை செய்யப்பட்ட குற்றங்களை புரியாதவராக இருக்க வேண்டும் என்பது அவசியம். சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுபவர் கட்சியைச் சார்ந்தோ அல்லது சுயேட்சையாகவோ போட்டியிடலாம்.

சட்டம் இவ்வாறு இருக்க, நடிகர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர்களில் பொதுக் களத்தில் அரசியலில் நுழைய என்ன தகுதியிருக்கிறது என்றும் கேள்விகள் எழுப்புகின்றனர். திரை உலகக் கவர்ச்சியால் மட்டும் வாக்குகளைப் பெற்று அரசியலில் நிலை நிறுத்திக் கொள்ள முயல்வது நடக்காது எனக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதே போன்ற கருத்துக்களை இவர்கள் “தேர்தல் மன்னன்” பத்மராஜன் பற்றியோ மற்ற பிற சுயேச்சை வேட்பாளர்களைப் பற்றியோ, சிறு அமைப்புகளைச் சார்ந்த வேட்பாளர்களைப் பற்றியோ வைப்பதில்லை. எனவே மக்கள் அறிமுகம் என்பது ஒரு தேர்தலில் வாக்காளர்கள் மத்தியில் அவசியம் என இவர்கள் உணர்ந்துள்ளார்கள் என்பது வெளிப்படை. மக்கள் அறிமுகம் உள்ளவர்கள் சுயேச்சையாக வேட்பாளராக களம் இறங்கினால் அவர்களைப் பற்றிய விமர்சனங்களை ஆகப் பெரிய அரசியல் கட்சிகள் முன் வைக்கின்றன.

தேர்தல் களம்

மக்கள் தொண்டு என்பது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே உரித்தான உரிமையல்ல. மக்கள் நலனில் அக்கறை கொண்ட எவரும் அவர்கள் உகந்த காலம் எனக் கருதும் வேளையில் பொது வெளியில் வெளிப்படையாகவோ பின்னிருந்து இயக்கியோ ஈடுபட சட்டத்தில் எந்தத் தடையுமில்லை. தார்மீகமாகவும் எந்தத் தடையுமில்லை. அதே போல அரசியல் கட்சிகளால் முன்னிறுத்தப்படும் வேட்பாளர்கள் அனைவரும் மக்கள் தொண்டு செய்த பின்னரே தேர்தல் களம் காண்பவர்களுமல்ல.

இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், இதே திரைத்துறையிலிருந்து பிரபலமாகி இன்று அரசியல் இயக்கம் கண்டவர்களும் மற்றொரு நடிகர் அரசியல் தேர்தல் களம் காண்பதை விமர்சிப்பது தான். பொதுவாக இவர்களும் வைக்கும் கேள்வி, இன்னார் தேர்தலில் போட்டியிட என்ன தகுதியுள்ளது. இவர் எந்தப் பிரச்சனைக்குக் குரல் கொடுத்துள்ளார், அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி சிறை சென்றாரா என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். 

ஆனால், குற்றப் பின்னணி கொண்டவர்கள், கடும் குற்றங்கள் சாட்டப்பட்டு வழக்கு நிலுவையிலுள்ளவர்கள் போன்றவர்கள் அரசியல் கட்சி வேட்பாளராக களமிரங்குவதை இவர்கள் கேள்வி கேட்பதில்லை. சட்டப்படி ஒருவருக்கு தகுதியிருந்தாலும் இந்த நவீனயுக இராமர்களிடம் தகுதிச் சான்றிதழ் பெற்றவர்கள் தான் மக்கள் தொண்டாற்ற வேட்பாளராக அரசியல் களம் காண வேண்டுமென்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

விஷால் எனும் நடிகர்

இது போன்ற சர்ச்சை தான் தற்பொது விஷால் எனும் நடிகர் ஆர். கே. நகர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதிலும் எழுந்துள்ளது. விஷால் என்பவர் ஒரு இந்தியக் குடிமகன் என்பதோ, அவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வேட்பாளராக போட்டியிட தகுதியற்றவர் என்பதோ மறுக்க முடியாதது. பிறகேன் அவருக்கு எதிர்ப்பு.

ஆர். கே. நகர் இடைத் தேர்தல் ஆளும் அதிமுகவிற்கு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அவசியம். அதே போல டி.டி.வி. தினகரனுக்கு தான் அரசியல் சக்தி என்பதை உறுதி செய்து கொள்ள அவசியம். திமுக வலுவான எதிர்க் கட்சி, அதிமுக ஆளுமை மிக்க தலையின்றி இருக்கும் போது இடைத் தேர்தலில் வெற்றி கண்டு மக்கள் ஆதரவை தன் பக்கம் திருப்ப வேண்டியக் கட்டாயம். 

இதற்கிடையில் மக்கள் அறிமுகம் உள்ளவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மீதுள்ள எந்தவிதக் குற்றச்சாட்டுகளும் இல்லாதவர்கள் களம் இறங்கும் பொது, கட்சி சார்பற்ற பொதுஜனத்தின் வாக்குகள் சிதறி தங்கள் வெற்றி வாய்ப்பு பறிபோகுமோ என்ற கவலையே இவர்கள் வைக்கும் விமர்சனங்களுக்கு ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது.

ஆர்.கே. நகர்

கடந்த முரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 39000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றார். இந்த இடைத் தேர்தலுக்கு முன்பு கிட்டத்தட்ட 50000 போலி வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சென்ற தேர்தல் வாக்குகளின் அடிப்படையில் அதிமுக, திமுக சம நிலையில் உள்ளனர். இந்நிலையில், கட்சி சார்பற்ற மாற்றத்தை விரும்புகின்ற, அரசியல் கட்சிகளின் மீது சலிப்புற்ற பொது ஜனம் அறிமுகமான (அது திரைத்துறை மூலமாக இருந்தாலும்) வேட்பாளருக்கு வாக்களிக்க எண்ண வாய்ப்புகள் உண்டு. அரசின் மீது அதிருப்தி கொண்ட வாக்காளர்களின் வாக்கு எதிர்க் கட்சிக்கு மொத்தமாகச் செல்லாமல் சிதற வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இதனால் இவர்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுகிறது.

இதற்கு முன்பு கல்வியாளர்கள், சமூக சேவகர்கள், மக்கள் பணியாற்றுபவர்கள் சுயேச்சையாகவும், அரசியல் இயக்கங்கள் சார்பாகவும் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். வெற்றிக் கரம் அவர்களைத் தீண்டவில்லை. அதில் முக்கிய காரணம் அவர்கள் பொது மக்கள் முன்பு பிரபலமாகவும் பெருமளவில் அறிமுகம் இல்லாததும் ஒரு காரணம். ஒரு தேர்தல் காலத்திற்குள் அவர்களை தொகுதி மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு செல்ல கால அவகாசம் போதுமானதாக இருந்ததில்லை. பலர் வைப்புத் தொகையையே பெரும் அளவிற்கான வாக்குகளைப் பெற இயலவில்லை. இதனால் இவர்கள் தொண்டு சிறிதென ஒதுக்கித் தள்ளிவிட முடியுமா ? இவர்களை விட அதிக வாக்கு பெற்றவர்கள் தொண்டிற் சிறந்தவர்கள் என்று சான்றளிக்கத்தான் முடியுமா ?

நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா...?

நடிகர்களுக்கு இயற்கையிலேயே மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் உள்ளது. அதோடு அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்தவராயின் கட்சியின் பலமும் கூடவே சேர்ந்து கொள்கிறது. வாக்களிக்கும் பொது ஜனம் அறிமுகத்தாலும் கட்சிக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு வாக்களிக்க ஏதுவாகிறது. எம்.ஜி.ஆர். தனது அரசியலை இவ்வாறே கட்டமைத்துக் கொண்டார். அவர் மீதும் சினிமா கவர்ச்சி என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் அவரையும் விட நல்ல நடிகரான சிவாஜி கணேசன் தவறான அரசியல் முடிவுகளை எடுத்ததால் வெற்றி காண முடியவில்லை. அவரைத் தொடர்ந்து வந்த திரையுலகப் பிரபலங்கள் இரு திராவிடக் கட்சிகளின் தலைமைகள் திரைத் துறையைச் சேர்ந்தவர்களை அண்டியே அரசியலைத் துவக்கியதால் சோபிக்க முடியவில்லை. விதிவிலக்காக விஜயகாந்த் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டார் என்றால் மிகையாகாது.

அனைத்து தரப்பு மக்களும் தற்போதைய தமிழக அரசியல் சூழலைக் கண்டு சலிப்படைந்திருக்கிறார்கள். மாற்றத்தை விரும்புகிறார்கள். வேறு சில கட்சிகள் முன் வைத்த மாற்றங்களுக்கான அரசியல் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றம் வருவதை எவரால் தடுக்க முடியும். திமுக உருவான போதும் இது போன்ற மன நிலை காங்கிரஸ் கட்சியில் இருந்ததையும் நினைவு கூறத் தான் வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள் காங்கிரஸ் வீழ்ந்தது மீண்டும் எழ வழியில்லாமலேயே.

பொது ஜனம் கட்சி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு வாக்களித்ததால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. சுதந்திர போராட்டக் கால காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. பின் வந்த காலங்களில் கொள்கைகள் பின் தள்ளப்பட்டு மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசங்களால் ஆட்சி அதிகாரத்தை இரு திராவிடக் கட்சிகளும் பெற்று வந்துள்ளன. ஊழலும் இலஞ்சமும் அங்கீகரிக்கப்படும் நடைமுறைகளாக மக்கள் மூளை சலவை செய்யப்பட்டது. தமிழக மக்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்ள ஆரம்பித்துள்ள தருணமிது. புதிய சக்திகள் தோன்றத்தான் செய்யும்.

தோன்றும் புதிய சக்தி எங்கிருந்து வந்தால் என்ன ! கால தாமதமின்றி வர வேண்டும் என்பதே மக்கள் விருப்பம். கால தாமதமின்றி வருவதற்கு எளிதான அறிமுகம் உதவிகரமாக இருக்குமென்றால், மக்கள் மத்தியில் அறிமுகமானவர்கள் தொண்டு செய்து விட்டு வந்தால் என்ன, வந்த பின்பு தொண்டு செய்தால் என்ன... மக்கள் மனப் போக்கையறியமால் அரசியல் செய்து வரும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி. அதே போல, திரைப் பிரபலம் அறிமுகத்திற்கு மட்டுமே உதவும் நிலைத்து நிற்க மக்கள் நலனும், நலன் சார்ந்த கொள்கைகளும் நடவடிக்கையால் மட்டுமே முடியும் என்பதை புதியவர்கள் உனர வேண்டும்....

புதிய சக்தி திரைத்துறையிலிருந்து வந்தாலும் வரவேற்கத் தயாராகவே இருக்கிறது தமிழகம்....

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )