இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

சர்கார் - சர்ச்சையா?... சரித்திரமா?

November 8, 2018
Image

மதன் ரவி

ஊடகவியலாளர்

Image

எந்த ஒரு திரைப்படமும் ஒரு சமூக கருத்தையோ அல்லது மக்களுக்கு தேவையான சிந்தனைகளையோ விதைக்க கூடியதாக இருக்க வேண்டுமா அல்லது முழு முதற்பொழுதுபோக்கிற்கான கருவியாக மட்டுமே  ரசிக்க பட வேண்டுமா என்ற ஆராய்ச்சி பல காலமாகவே நிகழ்த்தப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த வாட்ஸ் அப் யுகத்தில் யார் என்ன கூறினாலும் அதன் நம்பகத்தன்மையை ஆராய வேண்டிய சூழலில் நாம் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆதிமனிதன், கூறிய கருத்துக்களை மட்டும் பார்க்காமல் கூறப்படுபவரின் பின்புலத்தை ஆராய்ந்து உள்ளான் என்பதற்கான சான்றுதான் "சாத்தான் வேதம் ஓதுகிறது"என்கிற பழமொழி!

வேதத்தை யார் ஓதினால் என்ன, அதன் உட்கருத்தை தானே வாங்க வேண்டும். ஆனால் வேதத்தை சாத்தான் ஓதும் போது நமக்கு அது கீழ்த்தரமானது என்று பயிற்றுவிக்கப்படுகிறது. நவீன யுகத்தில் இதன் மாற்றுக் கருத்தாக ஒரு சிந்தனையை வைக்கிறார்கள். அதாவது  சொல்பவர் எத்தன்மை கொன்டவராயினும் அது நல்ல கருத்தாக இருந்தால் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை

இதற்கு நகைச்சுவையாகச் கூறப்படும் சொலவடை "கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா போதும்".

தமிழ் சினிமா என்றுமே அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்து வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம் அதனாலேயே வெளி நாடுகளைப்போல அரசியல் சார்ந்த திரைப்படங்களை கண்டு களிக்கும் வாய்ப்பு நமக்கு பெரிதாக வாய்திறக்கவில்லை.

முதன் முதலாக அரசியல்வாதிகளை கேலி செய்து எடுக்கப்பட்ட படம் சோ அவர்களின் முகமது பின் துக்ளக். அது ஒரு பகடி. அந்த திரைப்படம், நன்றாக அரசியல் ஞானம் உள்ளவர் களுக்கு நகைச்சுவையாக புரியும்படியான அந்தக் காலத்து அரசியல் தன்மையை சொல்லும் திரைப்படம். அடித்தட்டு மக்களுக்கு சென்று சேரவேண்டிய அரசியலையோ அவர்களின் அன்றாட கஷ்டங்களையும் சொல்லும் ஒரு அரசியல் திரைப்படம் அல்ல.

முதன் முதலில் ஒரு முழுநீள அரசியல் திரைப்படமாக நாம் கண்டு ரசித்தது பாலச்சந்தர் இயக்கிய தண்ணீர் தண்ணீர்.கோமல் சுவாமிநாதன் அவர்களின் கதையை பாலச்சந்தர் அவர்கள் இயக்கி வெளியிட்டது  எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியில். அரசு இயந்திரத்தை மிக வன்மையாகக் கண்டிக்கும் விதத்தில் எழுதப்பட்டிருந்த அந்த திரைப்படம் அக்கால அரசியல் வாதிகளின் லஞ்ச ஊழல்களுக்கு ஒரு சம்மட்டி அடி. பின்பு பாரதிராஜா அவர்கள் இயக்கிய என்னுயிர் தோழன் என்ற திரைப்படம் அந்தக் கால அரசியலில் அழுக்குகளை நமக்கு பூதக் கண்ணாடி போட்டு காட்டியது அரசியல்வாதிகளும் அவர்களின்  கீழ்த்தரமான முகத்தையும் மிக அழகாக படம் பிடித்துக் காட்டினார் இயக்குனர் இமயம்.  அந்த திரைப்படத்தில் தமிழ் ஆர்வலர் போன்ற கட்சித் தலைவர் பொன்னம்பலம் அவர்கள் தனது கட்சித் தொண்டரான தர்மனிடம் இறுதிகட்ட காட்சிகளில் அவரின் மயக்கும் வார்த்தைகளும் சொல்லும் கொன்றால் பாவம் வென்றால் போச்சு  என்ற வாசகமும் இன்றளவும் அரசியல் திரைப்படங்களை நமக்கு புலப்படுத்துகிறது.

இந்த திரைப்படத்தில் பாரதிராஜா  ஒரு மூத்த அரசியல்வாதியை  மறைமுகமாகச் சாடியதாக அக்காலத்தில் விமர்சிக்கப்பட்டது. இது இந்திய திரைப்படங்களை தொடர்ந்து தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளியான அமைதிப்படை என்ற திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த திரைப்படத்தில் அரசியல்வாதிகளையும், அவர்கள் சார்ந்திருக்கும் கட்சி தொண்டர்களின் மனநிலையையும், பொதுமக்கள் எப்படி தூண்டுதலுக்கு எளிமையாக ஆளாகிவிடுகின்றனர் மற்றும் ஆட்சியாளர்கள் செய்யும் பித்தலாட்டங்களையும் மிக விரிவாக நமக்கு புட்டுப்புட்டு வைத்தார் இயக்குனர் மணிவண்ணன்.

இந்த சினிமாவின் கதாநாயகனை இன்றைய பல மூத்த அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளோடு ஒப்பிட்டு இன்றளவும் memes poda படுவதில் இருந்து தெரிகிறது இந்த திரைப்படத்தின் வெற்றி. இந்தத் திரைப்படமும் ஒரு மூத்த அரசியல்வாதியை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக பரவலாக பேசப்படுகிறது. இப்படி இங்கொன்றும் அங்கொன்றும் அரசியல் சார்ந்த திரைப்படங்களை வழங்கி கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான சர்க்கார் திரைப்படம் நிறைய அரசியல் பேசி இருக்கிறது.

படத்தின் கதாநாயகன் சுந்தர ராமசாமி உலகத்தின் பெரும் பணக்காரர். தமிழகத்தில் புரையோடியிருக்கும் ஊழலை தேர்தல் அரசியல் சீர்திருத்த கண்ணோட்டத்துடன் அணுகி வெற்றி பெறுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் ஒரு நல்ல துவக்கம், கதை அளவில் மிக நன்றாகவே யோசிக்க பட்டிருக்கிறது (யாரால் என்பதில் சர்ச்சை இருப்பது உண்மை). ஆனால் இது ஒரு முழு நீள அரசியல் திரைப்படமா அல்லது இன்றைய அரசியல்வாதிகளின் பகடியா அல்லது இது ஒரு வணிக சினிமாவை அல்லது இது விஜய்யின் அரசியல் வாழ்வின் அச்சாரமா. இப்படி இந்த எந்த ஒரு கேள்விக்கும் முழுதாக விடை கொடுக்காமல் எல்லா கேள்விக்கும் விடை கொடுக்க முயற்சி மட்டுமே செய்யப்பட்டுள்ளதால் ஒரு ஆகச் சிறந்த அரசியல் விருந்திற்கான அத்தனை அறிகுறியும் கொண்டிருந்தாலும்  நமக்கு பரிமாறப்பட்டது பழைய சோறு தான்.

கதையில் அன்றிலிருந்து இன்று வரை உள்ள ஏராளமான அரசியல்வாதிகளை தாக்கியிருக்கின்றனர். முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் இன் உடல்மொழியும் அவர் கூறும் வசனங்களும் ஒரு மறைந்த மூத்த அரசியல்வாதி நினைவுபடுத்துவது தவிர்க்க முடியவில்லை . அவருக்கு பக்க பலமாக செயல்படும் "இரண்டு" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரின் வாய்க்கோனல் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.

கோமளவல்லி என்னும் கதாபாத்திரத்தைப்பற்றி அனைத்து பத்திரிகைகளும் அலசுகின்றன. இதனைத் தாண்டி நிஜ கதாபாத்திரங்களை (ராம் ஜெத்மலானி, பியூஷ் மனுஷ், சவுக்கு சங்கர் ,...) நிழலாகவும் உலவ  விட்டிருக்கின்றனர். இவ்வளவு சர்ச்சைகளை கொண்டுள்ள இந்த திரைப்படத்தில் சமாசாரம் இருக்கிறதா என்றால் சந்தேகமே.

ஆட்சியாளர்களையும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் தாக்குதலையே நம்முடைய அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பத் தொடங்கி விட்டார் நடிகர் விஜய். ஆனால் அவரது கடந்த கால நடவடிக்கைகள் அப்படி கூறுவதாக இல்லை. காவலன் திரைப்படம் வந்தபோது தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் திமுகவை சாடுவதாக இருக்கட்டும் தலைவா பிரச்சனையில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கொடநாடு எஸ்டேட் வாயிலில் தவங்கிடந்து கண்ணீர் விட்டதாக இருக்கட்டும் இன்று அத்தகைய பிரச்சனைகளும் இல்லாத சூழ்நிலையில் கம்பு சுற்றுவதாக இருக்கட்டும் இது எதுவுமே அவரது அரசியல் அதிகாரத்திற்கு பெரிதும் உதவும் என்று நம்ப முடியவில்லை.

சர்க்கார் திரைப்படத்தில் இலவசங்களை சாடியிருக்கிறார்கள் சமூகநீதியில் முன்னோடி மாநிலமாக தமிழகம் முன்னோடி மாநிலமாக மாற்றுவதற்கு காமராஜர் கொண்டுவந்த இலவச மதிய உணவுத் திட்டமும் எம்ஜிஆர் கொண்டுவந்த சத்துணவு திட்டம் பேருதவியாக இருக்கின்றன. விஜயின் அரசியலில் இந்த இலவசங்களையும் சேர்த்து எதிர்க்கிறாரா அல்லது குறிப்பிடப்பட்ட இலவசத் திட்டங்களை எதிர்க்கிறாரா ?

இதனைத் தாண்டி இந்த திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல சித்தாந்தங்கள் சமகால அரசியல் சூழ்நிலையில் நாம் தினசரி செய்தித்தாள்களிலும் இணையதளங்களிலும் பகிர்ந்துகொள்ளும் குறுஞ்செய்திகளின் தொகுப்பாகவே தெரிகிறது. அதுவும் பிழையில்லாமல் இல்லை டெங்கு காய்ச்சலுக்கு பொதுப்பணித்துறையை காரணம் கூறுகிறார் கதாநாயகன். அருகில் படம் பார்த்துக்கொண்டிருந்த விஜய்யின் தீவிர ரசிகர் "அண்ணா அது சுகாதாரத்துறை" என்று கத்தியதை கேட்டு தியேட்டரில் கரவொலி.

நடிகர் விஜய் கலந்து கொண்ட மேடையில் கலாநிதிமாறன் அவரை தளபதி என்று கூறுகிறார் அரசியல் வட்டாரத்தில் தளபதி யார் என்று தமிழக மக்கள் அறிவர் இந்நிலையில் கலாநிதி மாறன் விஜயை அப்படி விளித்தது வியப்பே! ஒருவேளை நடுநிலை காரணமாக அனைவரையும் சீண்டுவதாக சொல்லிக்கொண்டு ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்று இருபாலரையும் சீண்டுவதாக நினைத்தால் அந்த நினைப்பு இப்போது இருக்கும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக முடியும்.

சினிமாவினால் ஒரு சமூக புரட்சி ஏற்படும் என்பது இன்றைய காலத்தில் நடக்கக்கூடியதா என்பது கேள்விக்குறி. அதுவும் இதுபோன்ற சர்ச்சைகளும் தனிநபர் தாக்குதல்களும் பெரிதளவில் தூவப்பட்டுள்ள திரைப்படத்தினால் நிச்சயமாக சமூகத்திற்கு எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அதையும், அவர் விரும்பியதாகத் தெரியவில்லை. அப்படி விரும்புபவராக இருந்தால் நிச்சயம் அவர் விரைவில் என்னுயிர் தோழனாக வேண்டுகிறேன்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )