இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

ஒரே வாரத்தில் 3 வது முறையாக.... திமுகவை கலங்கடிக்கும் டிவிட்டர்வாசிகள்...

July 22, 2018
Image

எஸ்.ஜி.சூர்யா

கட்டுரையாளர்

Image

ஏப்ரல் 12- 2018, சென்னை, திருவிடந்தையில் நடைபெற்ற பாதுகாப்புத் துறை கண்காட்சிக்கு வருகை தந்த இந்தியப்‌ பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக தி.மு.க உள்ளிட்ட தமிழக எதிர்கட்சிகளும், வேறு சில இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் களத்தில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தின; கருப்பு வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. 

அன்றைய தினம் சமூக வலைதளங்களில் “மோடி திரும்பிப் போ!” எனும் பொருளில் #GoBackModi ​​எனும் இடுகையுடன் வெளியிடப்பட்ட ட்விட்கள் காலை முதலே பதியப்பட்டன. இதில் தி.மு.க இணைய அணியினர் முழு வீச்சில் ஈடுபட்டதுடன் தேசிய அளவில் காங்கிரஸ் மற்றும் மோடி, பா.ஜ.க எதிர்ப்பு இயக்கங்களும் தங்கள் இணைய அணியினர் மூலம் ஆயிரக்கணக்கான இடுகைகள் பதிவு செய்தனர்​​. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக இது செய்யப்பட்டது என்று சொன்னாலும் பா.ஜ.க-வின் தொடர் வெற்றிகளை பொறுக்காமல் இது செய்யப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.

இதைத்தொடர்ந்து பா.ஜ.க தலைவர் அமித்ஷா தனது கட்சி ரீதியான கூட்டங்களில் பங்கேற்க ஜுலை 9-ஆம் தேதி தமிழகம் வந்ததை ஒட்டி, டிவிட்டரில் #GoBackAmitShah என்ற ஹேஷ் டேக் டிரெண்டிங் ஆனது. இதிலும் தி.மு.க-வினர் முக்கிய பங்காற்றியது மட்டுமல்லாமல் பா.ஜ.க-விற்கு களங்கம் கற்பிக்க காங்கிரஸ் கட்சியின் தேசிய இணைய அணியின் ஆதரவுடன் இந்த டிரெண்டிங் கச்சிதமாக நடந்தேறியது. தம்மை விழ்த்த யாருமே இல்லை, இணையத்தில் நாங்கள் தான் ராஜா என நினைத்துக்கொண்டிருந்தனர் தி.மு.க-வினர். ஆனால் பத்து நாட்களிலேயே அவர்களுக்கு இணையத்தில் ஒரு முறை அல்ல இரு முறை அல்ல மூன்று முறை பதிலடி கிடைக்க போகின்றது என்பதை உணர்ந்து இருக்கவில்லை.

ஜூலை 17-ஆம் தேதி தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் விளையாட்டு போட்டியை பார்க்க சென்று விட்டு, லண்டனில் இருந்து சென்னை திரும்ப உள்ளதையொட்டி #GoBackStalin என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆனது. மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புவதையொட்டி, ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை ட்விட்டரில் பலரும் தெரிவித்தனர். இதனால் #GoBackStalin ​​தேசிய அளவில் டிரெண்ட் ஆகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலைமையை சற்று தாமதமாக உணர்ந்த தி.மு.கவினர் இதற்கு பதிலடி தரும் வகையில் #WelcomeStalin என டிரெண்ட் செய்தனர்.

பா.ஜ.​​க தலைவர்கள் தமிழகம் வரும் போதெல்லாம் தி.மு.க-வினர் இணையத்தில் எதிர்ப்பு காட்டிய நிலையில், அவர்கள் ஏவிய ஆயுதமே அவர்களை தாக்கியது அவர்களுக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்திருக்க வேண்டும். முன்னாளில் ஒரு மாநிலத்தின் துணை முதல்வராகவும் தற்போது முக்கிய எதிர் கட்சியின் செயல் தலைவராகவும் இருக்கும் ஸ்டாலினுக்கு சொந்த மாநிலத்திற்கு வருவதற்கே எதிர்ப்பு என்பது சற்று எதிர்பாராத விஷயம் தானே?​​ அதே போல், #GoBackStalin என்பது தமிழக மக்களால் மட்டும் கலந்துகொள்ளப்பட்ட டிரெண்டிங் ஆகும், #GoBackModi #GoBackAmitShah ஆகியவை தி.மு.க மட்டுமின்றி பல கட்சிகளும் குறிப்பாக தி.மு.க கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சக்திவாய்ந்த தேசிய இணைய பிரிவின் துணையுடன் செய்யப்பட்ட டிரெண்டிங் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த #GoBackStalin ​​விஷயத்தில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு பேரதிர்ச்சி தி.மு.க-விற்கு காத்து இருந்தது. அடுத்த இரண்டு நாட்களில் ஜூலை 19-ஆம் தேதி திடீரென #ZeroMPDMK டிரெண்டிங் ஆக ஆரம்பித்தது.

பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு தெலுங்கு தேசம் கட்சி நோட்டீஸ் அளித்தது. இதற்காக காங்கிரஸ்- பா.ஜ.க அல்லாத கட்சிகளின் ஆதரவை கேட்டு வருகிறது தெலுங்கு தேசம். ஆந்திர பிரச்னைக்காக தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவரும் பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது, ​​காவிரி பிரச்னையின்போது நாடாளுமன்றத்தில் எந்த கட்சியும் தமிழகத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்று லோக் சபாவில் 37 எம்.பி-க்களை வைத்துள்ள முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். பிற கட்சிகளும் தங்கள் நிலைப்பாடுகளை அறிவித்து வந்த ​​நேரத்தில் ஒரு எம்.பி கூட இல்லாத தி.மு.க, இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது விவாதப் பொருளாக மாறியது.

இது குறித்து தி.மு.க டிவிட்டர் பக்கத்தில் “கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழித்த பாஜக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவளிக்கும். – திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் @mkstalin” என்று பதிவிடப்பட்டு இருந்தது.

இ​தைத் தொடர்ந்து இணையவாசிகள் ஒரு எம்.பி கூட இல்லாமல் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த ஸ்டாலினின் பதிவு குறித்து ​#ZeroMPDMK ​என்ற ஹேஷ்டேகில் கருத்துக்கள் செய்து பதிவு செய்யத்தொடங்கினர், அது தேசிய அளவில் ​டிரெண்ட் ஆனது. பல ஆயிரம் ட்வீட்டுக்கள் பதிவு செய்யப்படவே தி.மு.க இணைய அணி வேறு வழியின்றி #ZeroGovernanceBJP என தனது பொறுப்பாளர்களை வைத்து பதிந்து வந்தது. எனினும் அது ​​தேசிய அளவில் டிரெண்ட் ஆகவில்லை. 

​#ZeroMPDMK ​நடந்து முடிந்த மூன்றாவது நாள் இன்று மீண்டும் ஒரு முறை தி.மு.க-விற்கு எதிராக #தமிழ்இனதுரோகிதிமுக ​என்ற ஹேஷ்டேக் ​டிரெண்ட் ​ஆகி வருகிறது. இதில் தி.மு.கவிற்கு எதிரான கருத்துக்களை ஆயிரக்கணக்கில் பதிவு செய்து வருகின்றனர். இந்த ​டிரெண்ட் ​ஆரம்பித்து 3 மணி நேரத்திலேயே தேசிய அளவில் டிரெண்ட் ​ஆக ஆரம்பித்து தற்போது தேசிய அளவில் 3-ஆம் இடத்தில் உள்ளது. 

ஆக, இணையத்தில் தி.மு.க-வினர்​ ஏவிய ஆயுதமே அவர்களை ​ஒரே வாரத்தில் மூன்று முறை கடுமையாக​ தாக்கியிருப்பது​​​ அரசியல் வட்டாரத்திலும்​, தமிழக மக்கள் மனதிலும் தி.மு.க மீது இருக்கும் எதிர்ப்பலையை நிரூபித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் தேசிய கட்சிகளின் துணையுடன் ​​​​​#GoBackModi #GoBackAmitShah ​என இரண்டு ​டிரெண்ட் ​செய்த தி.மு.க-வினரை எவர் துணையுமின்றி தமிழக மக்கள் தாங்களே டிரெண்ட் ​செய்து காண்பிக்கின்றோம் என பதிலடி கொடுத்துள்ளனர் என்பதே நிதர்சனம். ​​

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )