இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

இளைய தளபதி ‘தளபதி’யான கதை

October 1, 2018
Image

மனோஜ் கார்த்தி

கட்டுரையாளர்

Image

மீண்டும் ஆட்சியாளர்களை தாக்குகிறாரா ‘தளபதி’ விஜய்?

விஜய்-க்கும் சர்ச்சைக்கும் ஏக பொருத்தம். அது இன்றளவும் தங்குதடையின்றி ‘கிளம்பி’ வருகிறது. அதாவது விஜய் படத்தின் பெயர் முதல், படம் வெளியாகும் தேதி வரை சர்ச்சை என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. முதலில் அது அனைத்தும் தற்செயலாக நடைபெறுகிறது என்றே மக்களும், அவரது ரசிகர்களும் எண்ணி வந்த நிலையில், ஆனால் தற்போது அப்படி இல்லை என விஜயே உரக்க கூறி வருகிறார் அதற்கு காரணமும், ஆதாரமும் இருக்கிறது.

கடந்த ஆண்டு அபூர்வ சகோதரர்கள் எனும் மெர்சல் வெளியானபோது, படம் இந்த அளவு பெரிய சர்ச்சையில் சிக்கி தவிக்கும் என எவரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். காரணம் மத்திய அரசு அமல்படுத்திய GST வரி விதிப்பை பற்றி வெளிபடையாக விஜய் மெர்சல் படத்தில் பேசியதுதான். மாநில அரசும், மத்திய அரசும் தங்களின் பார்வையை ஒன்றாக விஜய் மீது திருப்ப, தமிழக அரசியல் மற்றும் சினிமா களம் சூடுப்பிடிக்க தொடங்கியது. ஏற்கனவே துப்பாக்கி, தலைவா படத்தின் மூலம் அனுபவமுள்ள விஜய் பெரியதாக அலட்டிக் கொள்ளாமல் படத்தை திரைக்கு கொண்டு வர வேலைகளை செய்து வந்தார்.

படமும் சரியான நேரத்தில் வெளியானது. படம் சுமார் ரகம் என்றாலும், பாஜக உறுப்பினர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை ஆகியோரின் அதிரடி பேச்சு மற்றும் விமர்சனங்களினால் படம் வேறு ரேஞ்சுக்கு செல்ல நேரிட்டது. அதன் பின்னர் தமிழக அரசியல் களத்தில் நடந்த காட்சிகள் அனைத்தும் படத்தை விட சுவாரஸ்சியமாவே இருந்தது. அதுவரை இளைய தளபதியாக இருந்த விஜய், ஜோசப் விஜயாக உருவெடுத்தார். மறுபக்கம் இளைய தளபதி, தளபதியாக மாறியதால் யார் உண்மையான தளபதி என ஸ்டாலினையும், விஜயையும் வைத்து ஊடகங்களில் விவாதங்கள் தொடங்கின. 

படம் வெளியாவதற்கு முன்னர் மாநில ஆட்சியாளர்களை சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடந்திய விஜய். படம் வெளியான பின்னர் நடந்த தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி மேடை ஒன்றில் “எந்த பிரச்சனை வந்தாலும் பரவாயில்ல பார்த்துகலாம்னு தான் ‘அந்த’ வசனங்களை இந்த மெர்சல் படத்தில் நான் பேசுனேன்” என்று வெளிபடையாக தெரிவித்தார். இது அவரை இளைய தளபதி என்ற பொறுப்பில் இருந்து இறக்கி, தளபதியாக உயர்த்தியது.

இதனிடையே சன்பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் புதிய படம் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது. பெயரிடாமல் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், இந்த வருடம் விஜயின் பிறந்தநாள் அன்று ‘சர்கார்’ என்ற தலைப்புடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அன்றே சர்ச்சையும் ஆரம்பித்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி அதில் இடம்பெற்றதால், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி விஜயை கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்தார். இந்த விவகாரமும் விவாதங்களை தொடங்கி வைக்க முடிவில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக்கை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியது பட நிறுவனம்.

ஆனால் தற்போதுதான் சர்காரின் உண்மையான சர்ச்சை தொடங்கியுள்ளது, ‘சர்கார்’ என்றால் ‘அரசு’ என அர்த்தம். ஏற்கனவே சரத்குமார் ‘அரசு’ என்று பெயரிட்ட படத்தில் நடித்து வெற்றியும் பெற்றிருக்கும் நிலையில் என்ன செய்வது என்று யோசித்த படக்குழு தலைப்பை இந்தியில் இருந்து எடுத்து அரசை, சர்காராக மாற்றியிருக்கிறது. படத்தின் தலைப்பிற்கு ஏற்றவாரே படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் வரிகளில் அரசியல் ‘தெறி’-க்கிறது.

மேலும் சினிமாவில் ரஜினியின் ஸ்டைலை பின்பற்றி நடித்து வரும் விஜய், அரசியல் களத்திற்கு வந்தால் அவருக்கு எதிராகதான் இருப்பார் என்ற விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது நேற்று வெளியான ‘ஒரு விரல் புரட்சி பாடல்’. ஒரு விரல் புரட்சி என்றால் வாக்கு செலுத்துவதன் முக்கியதுவத்தை உணர்த்துகிறது. நேற்று வரை கோமாளி.. இன்று முதல் போராளி என ரஜினிக்கு எதிர் கருத்துடன் தொடங்கும் பாடலில், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையையும் ஆளும் அரசுகளுக்கு எதிராக பிரதிபலிக்கும் வகையில் ஏ.ஆர்.ரகுமானின் குரலில் ஓங்கி ஒலிக்கிறது. 

“நீதியைக் கொல்கிறான் மௌனமாய் போகிறோம் 
ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம்
மக்களின் ஆட்சியாம் எங்கு நாம் ஆள்கிறோம்
போர்களைத் தாண்டி தான் சோற்றையே காண்கிறோம்..” போன்ற வரிகளே அதற்கு உதாரணம்.
 

ஆக விஜய் படங்களில் தற்செயலாக இடம்பெற்று வந்த அரசியல் வசனங்கள், தற்போது அதிகாரப்பூர்வமாக இடம்பெற தொடங்கியுள்ளது. படம் வெளியாக ஒருமாத காலம் இருக்கும் நிலையில், இது போன்ற பாடல் வரிகள் அவரது ரசிகர்களை கூர்தீட்டி வருகிறது. மெர்சல் வெளியீட்டின் போதே ஜார்ஜ் கோட்டையில் விஜய் முதலமைச்சராக அமர்ந்திருப்பது போன்ற பேனர்கள், சுவரொட்டிகளை காணமுடிந்தது. இதனிடையே காந்திஜெயந்தி அன்று நடைபெறும் பாடல் வெளியீட்டு விழாவில் வாழ்த்தி பேசுபவர்களில் கையில் இருக்கிறது ‘சர்க்காரின் சர்ச்சை’ என்ற விவாதம்.

தலைவா -Time to lead என்ற பட டேக் லைனுக்கே என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், ‘தளபதி விஜயின் சர்கார்’ என்ற தலைப்புடன் படம் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள் சற்று கலக்கத்தில்தான் இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )