இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

இந்திய தண்டனை சட்டப் பிரிவு 124A குறித்த வரலாற்று தொகுப்பு!

October 9, 2018
Image

சந்திர பாரதி

அரசியல் விமர்சகர்

Image

இந்திய தண்டனைச் சட்டம் அமலுக்கு வந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிரிவு 124 A சேர்க்கப்பட்டது. முதன்முறையாக இந்த பிரிவின் கீழ் 1891-ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையாளர்தான் கைது செய்யப்பட்டார். ஜீரிகள் முறை அமலுக்கு இருந்த காலமது.

ஜூரிகள் ஒருமித்த கருத்தை எட்ட இயலாததால் வழக்கை விசாரித்த நீதிபதி, வங்கபாசி என்ற பத்திரிகையின் ஆசிரியரை பிணையில் விடுவித்தார். பின்னர் அவர் அளித்த மன்னிப்பு கடிதத்தின் அடிப்படையில் வழக்கு கைவிடப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் சுதந்திர போராட்ட காலத்தில் அடக்குமுறையை கையவிழ்த்துவிட இந்தப் பிரிவின் கீழ் பலர் மீது குற்றச்சாட்டு வைத்து கைது செய்து வழக்கு தொடர்ந்தது.

1897-இல் பாலகங்காதர திலக் இந்தப் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில்தான் இந்தப் பிரிவு இராஜ துரோக குற்றப் பிரிவாக மாறியது. 1922-இல் மகாத்மா காந்தி “யங் இந்தியா”-வில் எழுதிய கட்டுரைக்காக தேசத் துரோக குற்றச்சாட்டிற்கு ஆளானார். குடிமகன்களின் சுதந்திர உரிமையைப் பறிக்கும் சட்டமிது என முழங்கினார். சுதந்திர இந்தியாவின் அரசியல் சாசன சட்டசபை அடிப்படை உரிமைகளான எழுத்து - பேச்சு சுதந்திரம் குறித்து நீண்ட விவாதங்களை நடத்தியது. அரச விரோத பேச்சுகள், எழுத்துகள், ஜாடைகள், படங்கள் எவை என்பது குறித்து பலமான விவாதங்கள் எழுந்தன.

இறுதியாக எழுத்து - பேச்சு சுதந்திரத்தை அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவு நிறைவேற்றப்பட்டது. “ஒரு சொல்லோ, படமோ, ஜாடையோ அரச விரோதமாக இருந்தாலும், அரச விரோதமான செயல்பாடு நடக்காதவரை அது தண்டனைக்குரிய குற்றமல்ல” என்று விவாதிக்கப்பட்டது. இருப்பினும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 A தொடர்ந்தது. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பிரிவு 124 A ஆர்.எஸ்.எஸ் இதழான “ஆர்கனைசர்” மீது தான் பிரயோகப்படுத்தப்பட்டது. அரசை கடுமையாக விமர்சித்த ஆர்கனைசர் இதழின் ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் ஆர்கனைசர் இதழை சென்சாருக்கு உட்படுத்தியது.

இதேபோல குற்றம்சாட்டப்பட்ட கிராஸ் ரோட் என்ற இதழ் தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய அரசியல் சாசனத்தின் முதல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. திருத்தத்தின்படி பேச்சு, எழுத்து சுதந்திரம் ஒரு வரையறைக்குட்படுத்தப்பட்டது. ஜவஹர்லால் நேரு இராஜ துரோக குற்றச்சாட்டு பிரிவுக்கு எதிராக இருப்பினும், விரைவில் இந்தப் பிரிவு நீக்கப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசினாலும், பிரிவு 124 A இந்திய தண்டனைச் சட்டத்தில் தொடர்ந்தது. சுதந்திர இந்தியாவில் இந்திய தண்டனைச் சட்டம் 124 A-வின் கீழ் நடைபெற்ற முக்கியமான வழக்கு 1962-இல் நடந்தது. கேதார்நாத் Vs பிகார் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பு கருத்து சுதந்திரத்தில் ஒரு மைல் கல். அதுவரை இருவேறு கருத்துகள் இருந்தன.

எழுத்தோ, பேச்சோ, ஜாடையோ இராஜ துரோக குற்றமாக கருதப்படலாம் என்று ஒரு கருத்தும், அரசை எதிர்த்து பேசப்பட்ட, எழுதப்பட்டதால் பொது அமைதிக்கு குந்தகம் ஏர்பட்டாலோ, ஏற்பட வாய்ப்புண்டு என்று கருதப்பட்டாலோ அத்தகைய செயல் இராஜ துரோக குற்றமாகும் என்ற கருத்தும் இருந்தது. கேதார் நாத் வழக்கில் இதற்கு தெளிவான தீர்வை சொன்னது உச்ச நீதிமன்றம். கேதார்நாத் காவல்துறையினரை “நாய்கள்” எனவும் காங்கிரஸ்காரர்களை குண்டர்கள் எனவும் தனது பேச்சில் கூறியிருந்தார். காங்கிரஸாரை குண்டர்கள், கறுப்பு சந்தை வியாபாரிகள், இவர்கள் புரட்சியின் மூலம் தூக்கி எரியப்பட வேண்டியவர்கள் எனப் பேசியிருந்தார்.

இவரது பேச்சு சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என வாதிடப்பட்டது. கேதார் நாத்திற்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். இருப்பினும், கேதார் நாத்தின் பேச்சு இராஜ துரோகமாக கருத இடமில்லை என்றது உச்ச நீதிமன்றம். இதே போன்ற ஒரு கருத்தை பாலி நரிமன் தெரிவித்துள்ளார். அரசின் மீதான காழ்ப்பு, வெறுப்புப் பேச்சு மட்டுமே இராஜ துரோகமாகது என்பதுவே இவரது கருத்து. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 A-வின் கீழ் பலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் வெகு சிலரே தண்டிக்கப்பட்டுள்ளனர். இராஜ துரோக குற்றம் பிடியாணையின்றி நடவடிக்கை எடுக்கத்தகுந்த ஒரு குற்றம். இந்தக் குற்றச்சாட்டை வழக்கு பதிவு செய்த பிறகு சமரசம் செய்துகொண்டு திரும்பப் பெற இயலாது.

அபராதத்தோடு மூன்றாண்டுகள் முதல் வாழ்நாள் முழுவதுமான ஆயுள் தண்டனைக்கான குற்றமிது. சமீப காலங்களில் இந்த தண்டனைச் சட்ட பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர், குஜராத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேல், மாணவர் கன்னையா குமார், தமிழகத்தில் வைகோ, வேல் முருகன், திருமுருகன் காந்தி, நாம் தமிழ அமைப்பைச் சேர்ந்தவர்கள். இராஜ துரோக குற்றாமாக கருதப்பட வேண்டியது, ஒருவர்/குழுவின் பேச்சோ, எழுத்தோ, ஜாடையோ, படமோ
1. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு எதிராகவும், அதனைத் தூக்கியெறியும் வகையிலும் பொது மக்களை தூண்டி விடுவது.
2. முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க பொதுமக்களைத் தூண்டுவது.
3. நட்பு நாடுகளுடன் உள்ள நல்லுறவைக் கெடுக்கும் வகையில் செயல்படத் தூண்டுவது.
4. இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடக்கத் தூண்டுவது, இருப்பது.
5. குற்றச் செயல்களை தூண்டுவது.

இதனடிப்படையில், நக்கீரனில் வெளியான கட்டுரை இராஜத் துரோக குற்றமாகுமா என்ற கேள்வி எழுவது நியாயமே. கட்டுரையின் உள்ளடக்கம் பொதுமக்களைத் தூண்டும் விதமாக இருப்பதாகத் தெரியவில்லை. அரசுக்கு எதிரான புரட்சிக்கு வித்திடுவதாகவும் தெரியவில்லை. நட்பு நாடுகளின் உறவைச் சீர்குலைக்கும் கருத்துகள் எதுவும் இடம் பெறவில்லை. அரசு தன் பணியைச் செய்யவிடாமல் தடுக்க முயற்சி செய்வதாகவும் தெரியவில்லை.

ஜனநாயக நாட்டில் எதிர் கருத்துகளுக்கு இடமுண்டு. எதிர் கருத்துக்களையும் அரவணைத்து கருத்துருவாக்கம் செய்வதே ஜனநாயகத்தின் அழகு. அவதூறுகள் கண்டிக்கப்பட வேண்டியனவே. தேவைப்பட்டால் உரிய சட்ட விதிகளின் கீழ் தண்டனைக்குட்படுத்தப்படவும் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில் ஆளும் அதிகார வர்க்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டையோ, சங்கடமான எதிர்க் கருத்தையோ வைப்பவர்களை தேசத் துரோகிகள் என அடையாளமிட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவது சரியாகுமா?

சுதந்திர இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் எதிர்க் குரல்களை நெரிப்பது ஜனநாயகமா? இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 A நீக்கப்பட வேண்டும் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு 1950-லேயே விருப்பம் தெரிவித்திருந்தாலும் அரசியல்வாதிகளால் இன்று வரை இச்சட்டப் பிரிவினை உயிர்ப்புடன் வைத்திருப்பதே அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தத்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதில் காங்கிரஸ், பாஜக மற்ற பிற கட்சிகள் என்றில்லை, அனைவருமே இந்தப் பிரிவு தொடர்வதை மறைமுகமாக ஆதரித்தே வருகிறார்கள். வழக்கு அவர்கள் மீது பாயும்போது மட்டும் எதிர்த்து குரல் எழுப்புகிறார்கள்.

நிற்க, நக்கீரன் கோபால் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த பிரிவு அரசியலமைப்பு பதவியில் உள்ளவர்களின் பணிகளை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டதே. குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுநரின் பணிகளை தவறாக சித்தரித்தல் அல்லது ஆதாரப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து செய்திகளை பிரசுரித்தல் மற்றும் அதனை வெளியிடுதல் மூலம் ஆளுநரையோ, குடியரசுத் தலைவரையோ அவர்களது பணியை செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் இடையூறு செய்தல் எனப் பல குற்றச்சாட்டுகளை குறிப்பிடும் சட்டப்பிரிவு 124. இந்தக் குற்றத்திற்காக அதிகப்பட்சமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும். இந்தப் பிரிவின் கீழான குற்றம் ஜாமீனில் வெளிவர முடியாதது.

*இந்தச் சட்டப்பிரிவு குற்றம்சாட்டப்பட்டவரை எந்தவித பிடியாணையுமின்றி கைது செய்யவும் அவர்களை விசாரிக்கவும் போலீசாருக்கு அதிகாரம் அளித்துள்ளது. இதற்காக நீதிமன்றத்தின் அனுமதியை பெறத் தேவை இல்லை. அதற்கான கட்டாயமில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மட்டுமே இந்த பிரிவில் தொடரப்படும் வழக்குகளை உரிய விசாரணை மேற்கொண்டு ரத்து செய்ய முடியும். ஏனெனில் குற்றத்தின் தன்மை ஆழமாகவும், குற்றவியல் தன்மையோடும் இருப்பதால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பித்து விடக் கூடும் என்பதன் அடிப்படையில் இது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்வரை குற்றம் சாட்டப்பட்டவரின் கடவு சீட்டு பறிமுதல் செய்யப்படும், அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க இயலாது, நீதிமன்றங்களில் ஆணைக்கிணங்க அவ்வப்போது நீதிமன்றங்கள் முன்பு ஆஜராக வேண்டும். இவற்றிற்கெல்லாம் பிறகு குற்றம் நிரூபிக்கப்படாமல் போகலாம். முன்பே கூறியது போல இந்த தண்டனைச் சட்டப் பிரிவின் கீழ் தண்டனைப் பெற்றாவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

ஆக, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124, 124 A என்ற கொடூர சட்டம் ஆட்சியாளர்களை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் மீது அடிக்கடி பிரயோகப்படுத்தப்படுவது வாடிக்கையாகயுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்த நடவடிக்கை அதிகரித்து வருகிறது. பத்திரிகையாளர்களும் இதற்கு தப்புவதில்லை. இது போன்ற செயல்பட்டால் ஒரு சில வாய்களை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது என்பதனை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். அதிகார மயக்கத்தில் உணர மறுத்தால், ஊர் உணர்த்தும்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )