இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

அரசியலின் தூய்மையாளன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்...!

October 30, 2018
Image

அரப்பா தமிழன்

வரலாற்று ஆய்வாளர்

Image

“கோவிலுக்கு போகாத நாத்திகன் வீட்டிலும் உன் படத்தில் தான் ஊதுபத்தி எரிகிறது;
  கோவிலுக்கு போகாத நாத்திகன் நெற்றியிலும் உன் சமாதியில் தான் திருநீறு தெரிகிறது” - கவிஞர் வைரமுத்து


உலகில் எந்த தலைவனுக்கும் இல்லாத பெருமை பசும்பொன் தேவரின் இறப்புக்கு பின்னரும் இருந்து கொண்டிருக்கிறது. பிறந்த, இறந்த தேதியும் ஒன்றாகியிருக்கும் அக்டோபர் 30ஆம் நாள் அவர் பிறந்த, சமாதியாக உள்ள பசும்பொன் கிராமத்திற்கு பல லட்சம் மக்கள் கூடுவதும், ஆண்டுதோறும் இது அதிகரித்துவருவதும் ஒருவகையில் அரசியல் அதியசம்.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக ஒரே சமயத்தில் போட்டியிட்டு வென்ற தனித்தலைவன். பிரதமராகவோ, முதலமைச்சராகவோ பதவிவகிக்காத ஒருவருக்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடுவதன் ரகசியம் என்ன? அவர் ஒரு இடதுசாரித் தலைவர், தொழிற்சங்கவாதி, உலக நாடுகளின் வலதுசாரிகளுக்கு எதிராக இங்கிருந்து எதிர்ப்புத் தெரிவித்தவர்.

காங்கிரஸுக்குள்ளேயே முன்னேற்றப் பிரிவாய் பார்வர்ட் பிளாக் அமைப்பை உருவாக்கி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு காந்தி ஆதரவு வேட்பாளரையும் எதிர்த்து வெற்றி பெற்ற வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய ராணுவப் படை அமைத்த போதும் அதற்குப் பின்னரும் அவருடன் இணைந்து செயல்பட்ட தமிழகத் தலைவர் பசும்பொன் தேவர்.

காங்கிரஸ் வேட்பாளராய் இராமநாதபுரம் ராஜாவை தேர்தலில் தோற்கடித்தவர். பின்னர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளராய் தானும் வெற்று பெற்று தனது ஆதரவு வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்தவர். அமைச்சரவையில் அங்கம் வகிக்க வாய்ப்புக் கிட்டியதை மறுத்தவர்.

மதுரை மகாலட்சுமி மில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், தன் வாழ்நாளில் 5ல் ஒரு பங்கை சிறையில் கழித்தவர். திருமணம் சுதந்திரப் போராட்டத்திற்கு தடையாயிருக்கும் என்பதால் திருமணம் செய்துகொள்ளாதது மட்டுமல்ல பெண்களை ஆதிபராசக்தியாக மதித்தவர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இரு குக்கிராமத்தில் பிறந்து தனது தந்தை உக்கிரபாண்டித் தேவரின் அரசியலை எதிர்த்து, உறவைவிட மக்கள் நலனே பெரிது என எண்ணி செயல்பட்டவர்.

அன்றைய காங்கிரஸ் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மீதும், பசும்பொன் தேவர் மீதும் கொலைவழக்கு பதிவு செய்யும் அளவுக்கு பழிவாங்கும் படலம் தொடந்தது ஆனால் நீதிமன்றம் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. அரசியல் ஆசை கடந்து ஆன்மீகத் துறையில் இறுதிகாலத்தில் பற்றற்ற வாழ்வு பெற்று, தன் சொத்துக்களை ஏழை எளிய மக்களுக்குத் தானமாக வழங்கினார்.

பசும்பொன் தேவர் ஒரு அரசியல் தலைவராக பிறர் பார்ப்பதை விட ஒரு ஆன்மீகத் தலைவராக கணிக்கப்படும் தலைமுறை உருவாகிவருவது வேதனைக்குரியது. பசும்பொன் தேவரை சித்தர் என்றும் முருகக் கடவுளின் அவதாரம் என்றும் கூறிக்கொண்டு அவருக்காக விரதமிருந்து, நடைப்பயணமாய் பசும்பொன் சென்று மொட்டையடித்துக்கொள்ளும் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். 

பசும்பொன் தேவர் ஒரு அரசியல் தலைமைப்பண்பு கொண்டவர்.

பசும்பொன் தேவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர்.

பசும்பொன் தேவர் ஒரு தொழிற்சங்கத் தலைவர்.

பசும்பொன் தேவர் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவர்.

பசும்பொன் தேவர் தன் சொத்துக்களை ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தவர்.

பசும்பொன் தேவர் அடிமைப்பட்ட உலக நாடுகளின் விடுதலைக்கு குரல் கொடுத்தவர்.

பசும்பொன் தேவர், “கைரேகைச் சட்டம்” எனும் குற்றப்பரம்பரம்பைச் சட்டம் ( CT act) ஒழிக்கப்பட பாடுபட்டவர்.

இதையெல்லாம் மீறி ‘அரசியலில் தூய்மைப்பணி” அவசியம் என்பதை வாழ்ந்து காட்டிய மகான். இன்றைய அரசியலுக்கு பசும்பொன் தேவரைப் படமாகப் போட்டு ஏமாற்றுபவர்கள் மத்தியில் அவரைப் பாடமாக அரசியலுக்கு ஏற்கும் நிலையை உருவாக்குவது தான் இன்றைய தலைமுறைக்கு நாம் விடுக்கும் வேண்டுகோளாகும்.

பசும்பொன் தேவரைப் படித்து நம் வாழ்வியலாக ஏற்போம்!

அக்டோபர் 30... ஆண்டுதோறும்  'அரசியல் தூய்மை நாளாய்' கொண்டாடுவோம்.

முத்துராமலிங்க தேவரின் 56வது குரு பூஜை விழா மற்றும் 111 வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பசும்பொன் கிராமத்திலுள்ள அவரது நினைவிடத்தில் மட்டுமல்ல, .தலைநகர் சென்னை உட்பட அவரது சிலைகள் இருக்கும் அனைத்து ஊர்களிலும் மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதை காணமுடிகிறது....

தந்தை பெரியார் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் மறைவிற்கு விடுத்த இரங்கல் செய்தி:

“திரு.முத்துராமலிங்கத்தேவர் நாட்டுக்காகப் பெருஞ்சேவை செய்தவர். தனக்காக எதையுமே எதிர்பாராதவர். தைரியசாலி - மறைக்காமல் உண்மைகளை வெளியிடுபவர். நல்ல தியாகி. அவரது வீரப் பேச்சுகளால் எத்தனையோ தியாகிகள் உண்டானார்கள். அவரது சேவையால் நாடு நலம் பல பெற்றது. அவர் மறைந்துவிட்டார். அவரை நிகர்த்த சுத்தமான பெருந்தலைவர்கள் தமிழ்நாட்டில் மிக அரிதாகத் தான் பிறக்கிறார்கள் அவரை இழந்து விட்டது நாடு. அதை ஈடு செய்வது கடினம்!”

பேரறிஞர் அண்ணா அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மறைவிற்கு விடுத்த  இரங்கல் செய்தி:

“திரு . தேவர் அவர்களை பல வருடங்களுக்கு முன் நான் ஒரு தடவை தான் பார்த்திருக்கிறேன். பெரும் தலைவரான டாக்டர் வரதராஜூலு நாயுடு உடன் பெரியாரைப் பார்க்க வந்த தேவர் அவர்கள், அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் மாதிரி கம்பீரமாகக் காட்சி அளித்தார். பிறகு இன்று அந்த பெருந்தலைவரைச் சவமாகப் பார்க்கும் போது உள்ளம் குமுறுகிறது. வார்த்தைகள் வெளிவர மறுக்கின்றன. தன்னிகரற்ற தலைவர் என்பதற்கு அவருக்காக இங்கு கண்ணீர் வடித்துக் கதறும் பல லட்சம் மக்களை சான்று. அவரது தூய பாதையைத் தொடர்வோம்!”

நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மறைவிற்கு விடுத்த இரங்கல் செய்தி: 

“தமிழ்நாட்டில் ஒரு வீரத் தலைவர் மறைந்துவிட்டார். தமிழ் மக்களின் பண்புக்கு ஒரு சின்னமாக அவர் விளங்கினார். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு 1957, 58 ஆம் ஆண்டுகளில் கிடைத்தது.  ஒரே நாளில் 10 பொதுக்கூட்டங்களில் கூட அவர் பேசியதை நான் அறிவேன். மக்களுக்கு தன்மான உணர்ச்சியை ஊட்டக் கூடியபடி அவருடைய பேச்சுக்கள் அமைந்திருந்தன.  முன்காலத்தைப் போலவே தமிழ் மக்களுக்கு தனிநாடும் ஆட்சியும் உலகமெங்கும் புகழும் பரவும் வகை செய்ய வேண்டும் என்று நான் அவரைக் கேட்டுக்கொண்டது உண்டு. அப்போதெல்லாம் "கொஞ்சம் பொறுத்திருங்கள்" என்று அவர் சொல்வார். வருங்காலத்தில் தமிழ் நாடும் தமிழ் மக்களும் சிறப்புற்று ஓங்கினால் அவர் ஆத்மா சாந்தி அடையும்!”

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )